இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்

Iyarkai Kappom Katturai In Tamil

இந்த பதிவில் “இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்” பதிவை காணலாம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கின்றோம்.

இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொரு உயிர்களிதும் தலையாய கடமையாகும்.

  • இயற்கையை காப்போம் கட்டுரை
  • Iyarkai Kappom Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்

இயற்கையை காப்போம்

  1. முன்னுரை
  2. இயற்கையின் சிறப்பு
  3. இயற்கை மாசடைதல்
  4. இயற்கை அனர்த்தங்கள்
  5. இயற்கையை பாதுகாத்தல்
  6. முடிவுரை

முன்னுரை

இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும் படியாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மனிதன் இப்பூமியில் நீடித்து வாழும் பொருட்டு இயற்கை அதன் கொடைகளை இவ்வுலகிற்கு வாரிவழங்கியுள்ளது. உண்கின்ற உணவில் இருந்து அருந்துகின்ற குடிநீர் வரை இயற்கை மனிதவாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

ஆனால் அண்மைக்காலமாக இயற்கையானது அளவிடமுடியா பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டுமாயின் இயற்கையை பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

இயற்கையின் சிறப்பு

இந்த பூகோளமானது பரந்து விரிந்த நிலப்பரப்புக்களையும், அதன் நாற்புறமும் சூழப்பட்ட சமுத்திரங்களையும், பச்சைப்பசேலென்ற காடுகளையும், எழில்கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளையும், சலசலத்து ஓடுகின்ற ஆறுகளையும் வளங்களாக கொண்டமைந்துள்ளது.

அந்த வளங்களை அனுபவித்திட மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ளது.

பூமியில் இவ்வுயிரினங்கள் நிலைபெற்று வாழ மழை, காற்று, தீ, நிலம், நீர் போன்ற பஞ்சபூதங்களையும் கொண்டமைந்துள்ளது.

இந்த இயற்கையானது செழித்து விளங்காவிட்டால் மனித இனமானது அழிவுற்றுவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இயற்கை மாசடைதல்

இயற்கையில் உள்ள விலைமதிக்க முடியாத வளங்களான நிலம், நீர், காற்று போன்றன பல்வேறுபட்ட காரணங்களால் மாசடைதலே இயற்கை மாசடைதலாக கருதப்படுகின்றது.

இந்த மாசடைதலிற்கு அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கைத்தொழில் மயமாக்கலோடு மனிதர்களது விரும்பத்தகா நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன.

உலகத்தின் அழகிய பரந்த நிலப்பரப்பானது பல்வேறுபட்ட காரணங்களால் அதன் இயல்புத் தன்மையை இழந்து வருகின்றது.

இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தினுள் எரிக்கும் போதோ அல்லது புதைக்கும் போது மண்வளம் அற்றுப்போகின்றது. மேலும் இரசாயன கிருமி நாசனிகளை பயிர்களிற்கு தெளிக்கும் போது மண் மாசடைகின்றது.

அண்மைக்காலங்களில் சூழலை அச்சுறுத்திவரும் ஒரு செயற்பாடாக மண் அகழ்தல் இடம்பெற்று வருகின்றது. கடற்கரை மற்றும் ஆற்றுப்படுக்கையில் உள்ள மண் அகழ்வுக்கு உட்படும் போது நீரானது ஊர்மனைகளிற்குள் புகும் அபாயம் எழுந்துள்ளது.

நீரின் பயனை வள்ளுவர் “புறத்தூய்மை நீரான் அமையும்” என்று குறிப்பிடுகின்றார். மனித வாழ்க்கையில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கும் நீரானது குப்பை கூழங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்ர்நிலைகள் மீது கொட்டுவதாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததாலும் மாசடைகின்றது.

மேலும் ஆழ்துளைகிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதனால் நிலத்தடி நீரானது அற்றுப்போகின்றது.

இந்த உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு அவசியமாய் விளங்கும் மற்றொரு காரணி வளி. ஏனெனில் எந்தவொரு மனிதனாலும் சுவாசிக்காமல் இருக்கமுடியாது.

இந்த வளியானது புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் அதிகபுகை மற்றும் நச்சுவாயுக்கள் கலக்கும் போது அசுத்தமடைகின்றது.

காடுகளை அழிப்பதனாலும் கனியவளங்களை அகழ்வதனாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறு இயற்கையின் கிடைத்தற்கரிய கொடைகள் மனிதசெயற்பாடுகளால் அழிவிற்குட்பட்டு வருகின்றன.

இயற்கை அனர்த்தங்கள்

இயற்கையானது மனித செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, இயற்கையாகவே நிகழும் சில நிகழ்வுகளாலும் அழிவுக்குள்ளாகின்றது.

உதாரணங்களாக சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காட்டுத்தீ போன்றவற்றை குறிப்பிடலாம்.

மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இவ்வனர்த்தங்களால் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களும் அழிவடைகின்றன.

பல உயிர்களை காவுகொண்ட இயற்கை பேரழிவிற்கு உதாரணமாக 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பட்ட சுனாமியை குறிப்பிடலாம்.

இயற்கை அனர்த்தங்களாலும் விலை மதிக்க முடியாத இயற்கையானது அழிவிற்கு உள்ளாகின்றது.

இயற்கையை பாதுகாத்தல்

இயற்கையை பாதுகாப்பது தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இயற்கை வளங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் 1980 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு உலகபாதுகாப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனிதர்கள் அனைவருமே இயற்கையை தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

நீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துவதோடு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டும்.

மரங்களை வெட்டுதலை தடுத்து நிறுத்துவதோடு எங்களால் இயன்றளவு மரங்களை வளர்த்து இப்பூமியை பசுமையானதாக மாற்றவேண்டும்.

முடிவுரை

செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்பபெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்.

இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கியுள்ளான்.

இன்னும் சிலகாலம் இந்நிலைமை தொடருமாயின் இயற்கையோடு சேர்ந்து மனித இனமும் அழிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

இதற்கான உடனடியான தீர்வு இயற்கையை தேவைக்கேற்ப பயன்படுத்தி அதனைப் பாதுகாத்தலாகும்.

எனவே இயற்கைவளங்களை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து நாமும் நலம் பெற்று வாழ்வோமாக.

You May Also Like :

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை