இடைச்சொல் என்றால் என்ன

idai sol enral enna

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல்லை இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.

சொற்களின் இலக்கண வகைகளாக பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கும் காணப்படுகிறது. இவற்றில் இடைச்சொல் பற்றி நோக்குவோம் .

இடைச்சொல் என்றால் என்ன

தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும்.

இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும்.

பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.

இடைச்சொல்லின் வகைகள்

இடைச் சொற்களானது அவற்றின் அமைப்பின் அடிப்படையிலும், பிரயோகப்பாட்டின் அடிப்படையிலும் எட்டு வகைப்படும். அவை பின்வருமாறு காணப்படுகிறது.

  1. வேற்றுமை உருபுகள்
  2. காலம் காட்டும் இடைநிலைகள் விகுதிகள்
  3. சாரியைகள்
  4. ஒப்புருபுகள் (உவம உருபுகள்)
  5. தத்தம் பொருளை உணர்த்துவன
  6. இசை நிறைப்பன
  7. அசை நிலைகள்
  8. குறிப்புப் பொருளை உணர்த்துவன

வேற்றுமை உருபுகள்

இடைச்சொல் வரிசைகளில் முதலாவதாக சொல்லப்படும் வேற்றுமை என்பது வேறுபாடு என பொருள்படும். பெயர்கள் தான் கேட்கும் வேற்றுமை உறுப்புகளுக்கு ஏற்ப பொருள் வேறுபடும் அது வேற்றுமை எனப்படும்.

வேற்றுமை உருபுகள் பெயரை சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு. அவை,

  • இரண்டாம் வேற்றுமை – ஐ
  • மூன்றாம் வேற்றுமை – ஆல்
  • நான்காம் வேற்றுமை – கு
  • ஐந்தாம் வேற்றுமை – இன்
  • ஆறாம் வேற்றுமை – அது
  • ஏழாம் வேற்றுமை – கண்

உதாரணம் :

  • கண்ணனை கண்டான்.
  • வாளால் வெட்டினான்.
  • கூலிக்கு வேலை செய்தான்.
  • மலையின் வீழ் அருவி.

காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும்

வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள். அன், ஆன் முதலியவை விகுதிகள்.

உதாரணம் :

  • சென்றான்.
  • வருகின்றான்.
  • காண்பான்.

உவமை உருபுகள்

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவமை உறுப்புகள் என்பர்.

உதாரணம் :

  • தாமரை போல் மலர்ந்த முகம்.

இதில் போல் என்பது உவம உருபு

  • தளிர் புரை மேனி.

(தளிர் போலும் மென்மையான உடல்)

சாரியைகள்

சார்+ இயை= சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்கு பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும்.

  • ஆல்+அம்+காடு = ஆலங்காடு

என்பதில் அம் சாரியை ஆகும்.

தத்தம் பொருளை உணர்த்தி வருபவை

ஏ, ஓ, உம் முதலிய இடைச் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை ஆகும்.

  • அவனே கொண்டான் – ஏ
  • அவனோ கொண்டான் – ஓ
  • அவனும் வந்தான் – உம்

இசை நிறைப்பன

இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது ஆகும். ஏ, ஒடு முதலிய இடைச் சொற்கள் இசை நிறையாக வரும்.

  • ஏஏ இவள் ஒருத்தி பேடியோ – ஏ
  • இவளொடு – ஒடு

அசை நிலை

அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் சேர்த்து சொல்லப்படுவது ஆகும். பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல் எனப்படும். மன், மற்று, கொல் ஆகிய இடைச் சொற்கள் அசை நிலையாக வருபவை ஆகும்.

  • ஒப்பர்மன் – மன்
  • மற்றுஎன் – மற்று
  • ஆய்மயில்கொல் – கொல்

குறிப்பால் பொருள் உணர்த்துபவை

பொருளை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தும் சில குறிப்புச் சொற்கள் இடைச் சொற்களாக குறிக்கப்படுகின்றன.

கோவென, இம்மென, பொள்ளென, கதும்என, சரேல்என இவற்றில் வரும் என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும்.

Read more: அடுக்குத்தொடர் என்றால் என்ன

கண் கருவளையம் மறைய டிப்ஸ்