ஆவணி அவிட்டம் என்றால் என்ன

avani avittam endral enna

ஆவணி அவிட்டம் என்பது இந்துப் பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஓர் விசேடம் வாய்ந்த நாளாகும். இதனை ஆண்டுச் சடங்கு (உபநயனம் ) எனக் கூறுகின்றனர்.

இதனை அநேகமாக பிராமணர், விஸ்வகர்மா மற்றும் செட்டியார் போன்றோர் விசேடமாக அனுஷ்டிப்பர். இது ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் இந்நாளை கொண்டாடுகின்றனர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும்.

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்பது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமி தினத்திலே பிராமணர்கள் உபநயனச் சடங்கை அனுஷ்டிப்பது ஆகும்.

உபநயனம் என்றால் என்ன

உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு இன்றியமையாத ஓர் வாழ்க்கை நிகழ்வு ஆகும். பிராமண ஆண் பிள்ளைகள் முதன் முதலாக பூணூல் தரிக்கும் நிகழ்வே “உபநயனம்” என அழைக்கப்படுகிறது.

உபநயனம் செய்தல்

முதலில் ஐந்து வயதான சிறுவனை மங்கள நீராட்டுவார்கள். மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி எனப் பெயர். குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும் மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேகம் செய்வது போல் தலையில் விடுவார்கள்.

இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும் மாசற்றதாக ஆகும் என்பது ஐதீகம். இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல் நாளே நடக்கும். உபநயனத்திற்குச் சிறுவனின் நட்சத்திரத்துக்கு ஏற்றவாறு நாள் கணிப்பார்கள். அதற்கு முதல் நாள் இந்த உதகசாந்தி நடைபெறும்.

மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித நீர் தெளிப்பர். மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும். பின்னர் மாணவனின் வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள். இதற்கு ரட்சாபந்தனம் எனப் பெயர். இன்னல்களிலிருந்து காக்கும் ரட்சை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைப்பது. இதற்கு “நாந்தீ” என்று பெயர். இதில் ஒன்பது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு. முன்னோர்களிடம் பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை வேண்டும் விதமாகச் செய்யப்படுவது. பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ணலாம்.

பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில் அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே முன் காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள். மற்றவர்களுக்குத் தனியாக உணவு சமைத்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே விரும்புகின்றனர்.

ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது. ஆகவே இன்றைய சூழ்நிலையில் இதுவே நடைபெற்று வருகிறது. இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள் முடிவடைகின்றன.

பூணூல் தரித்தவர்கள் பூணூல் புதுப்பித்தல்

இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவார்கள்.

பூணூலின் வகைகள்

கள்ளப் பூணூல்

ஆவணி அவிட்டம் அன்று உபநயனம் செய்து சாஸ்திரத்துக்காக மாத்திரை போடப்படும் பூணூல் கள்ளப் பூணூல் ஆகும். அன்று மாத்திரமே அணிவர். பின்னர் கழற்றி விடுவர். இப்பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் காணப்படும் முடிச்சு பிரம்மமுடிச்சு எனப்படும்.

பிரம்மச்சாரிய பூணூல்

திருமணம் ஆகாதவர்களுக்கு போடப்படுகின்ற பூணூல் பிரம்மச்சாரிய பூணூல் எனப்படும். இப்பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் காணப்படும் முடிச்சு பிரம்மமுடிச்சு எனப்படும்.

பிரகஸ்த பூணூல்

திருமணம் ஆனவர்கள் போடுகின்ற பூணூல் கிரகஸ்தப் பூணூல் எனப்படும். இதில் ஆறு நூல்கள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்.

சஷ்டி அப்தி பூணூல்

60 வயதான பின்னர் சஷ்டி அப்தி பூர்த்தி என்று கூறப்படுகிறது. அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு போடப்படும் பூணூல் “சஷ்டி அப்தி பூணூல்” எனப்படும். இதில் ஒன்பது நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் பிரம்ம முடிச்சு காணப்படும்.

பூணூலின் மகிமை

பூணூல் தரித்த ஒருவரே, ஆகம விதிக்கு அமைவாக அமைந்துள்ள ஆலயங்களில் பூஜை செய்ய முடியும். வேதங்களை சரிவர கற்று உணர முடியும். ஆலயங்களில் மந்திர உச்சாடனங்கள் செய்ய முடியும். பூணூல் தரித்தவர்களை தீய சக்திகள் நெருங்காது.

You May Also Like :
வேதங்கள் எத்தனை அவை யாவை
ஆகமம் என்றால் என்ன