ஆகமம் என்றால் என்ன

agamam in tamil

அறிமுகம்

ஆகமங்கள் எப்போது தோன்றின என்பது குறித்து தெளிவான கருத்துகள் இல்லை. பொதுவாக, இறைவழிபாடு என்பது பரவலடைந்த பிறகு, அவற்றை முறைப்படுத்த இந்த ஆகமங்கள் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ஆகமம் என்றால் என்ன

ஆகமம் என்பதற்குப் பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. ஆகமம் என்பது வடமொழிச் சொல் என்றும் அதற்கு “வந்தது” என்று அர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது சிவனிடமிருந்து வந்தது என்று சைவர்கள் சொல்கின்றனர். ஆனால், அதனை வைணவர்கள் உள்ளிட்ட பிறர் ஏற்பதில்லை.

“தொன்று தொட்டு வரும் அறிவு” என்றும் “இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்” என்றும் அறிஞர் பொருள் கூறுவர்.

அதாவது கோவில் கட்டுதல், தெய்வங்களின் திருவுருவச் சிலைகளை கோவிலில் வைத்தல், வழிபாடு செய்தல், பரிவார தெய்வங்கள் நிறுவப்படும் முறை, தினசரி பூஜைகள், விசேஷ நாட்களுக்கான பூஜைகள், திருவிழாக்கள் ஆகியவை நடத்தப்பட வேண்டிய முறைகள் குறித்து விரிவாக விளக்கும் நூல்களே ஆகமங்கள் எனப்படுகின்றன.

ஆகமங்களின் வகைகள்

ஆகமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வழிபடக்கூடிய கடவுளைப் பொறுத்தே ஆகமங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று சைவ ஆகமங்கள். மற்றையது வைணவ ஆகமங்கள் ஆகியனவாகும்.

சைவ ஆகமங்கள் என்பது சிவனை பரதேவதையாக வழிபடக்கூடியவர்கள் கடைப்பிடிப்பது சைவ ஆகமங்கள் ஆகும். விஸ்ணுவை (பெருமாளை) பரதேவதையாக வழிபடக்கூடிய நபர்கள் கடைப்பிடிப்பதுதான் வைணவ ஆகமங்கள் ஆகும்.

சைவ ஆகமங்களைத் தோற்றுவித்தது இறைவன் என்று சொல்லப்படுகின்றது. அதாவது சிவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. சிவனின் முகத்தில் தோன்றிய ஆகமங்கள் என்பதனால் இதனை சிவ ஆகமங்கள் என்றும் அழைப்பார்கள்.

சைவ ஆகமங்களிலேயே இரண்டு வகை ஆகமங்கள் உண்டு. அதாவது மூல ஆகமங்கள், உப ஆகமங்கள் என்பனவாகும். சிவ ஆகமங்கள் மொத்தம் 28 மூல ஆகமங்களும், 208 உப ஆகமங்களும் உண்டு.

சிவ மூல ஆகமங்கள் 28 இல் சிவ பேதங்களாகக் கருதப்படக் கூடியது 10 ஆகமங்களாகும், ருத்ர பேதங்களாகக் கருதக் கூடிய 18 ஆகமங்களாகும்.

வைணவ ஆகமங்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளன. அவையாவன பாஞ்சாத்திரம் மற்றும் வைகானசம் என்பவை ஆகும்.

பாஞ்சாத்திரத்தைத் தோற்றுவித்தது தொடர்பாக இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அதாவது பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ரிஷிகளால் எழுதப்பட்டது என்றும், ஐந்து இரவுகளில் பெருமாள் செய்த உபதேசம்தான் பாஞ்சாத்திரம் என்றும் கூறப்படுகின்றது.

சிவனின் முகத்தில் தோன்றிய ஆகமங்கள்

சிவனுடைய ஒவ்வொரு முகமும் ஆகமங்களையும், சிவனுக்குரிய ஒவ்வாரு தொழில்களையும் உணர்த்துவதாக உள்ளது.

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய ஆகமங்கள் – காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம். இம் முகம் படைத்தல் தொழிலை உணர்த்துகின்றது.

வாமவேத முகத்திலிருந்து தோன்றிய ஆகமங்கள் – தீப்தம், சூகூஷ்மம், சஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம். இம் முகம் காத்தல் தொழிலை உணர்த்துகின்றது.

அகோர முகத்திலிருந்து தோன்றிய ஆகமங்கள் – விஜயம், நிச்வாசம், சுவாயம்புவம், அநலம், வீரம். இம் முகம் அழித்தல் தொழிலை உணர்த்துகின்றது.

தற்புருஷ முகத்திலிருந்து தோன்றிய ஆகமங்கள் – ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம். இம் முகம் மறைத்தல் தொழிலை உணர்த்துகின்றது.

ஈசான முகத்திலிருந்து தோன்றிய ஆகமங்கள் – புரொக்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேஸ்வரம், கிரனம், வாதுளம். இம் முகம் அருளல் தொழிலை உணர்த்துகின்றது.

You May Also Like :
வேதங்கள் எத்தனை அவை யாவை
இதிகாசம் என்றால் என்ன