நமது வாழ்க்கையை நாம் மகிழ்வாக வாழ எடுக்கும் நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமது ஆரோக்கியத்தை சார்ந்ததே இருக்கும். அதேபோல ஆரோக்கியமும் நமது செயல்கள் சார்ந்தே இருக்கும். இது எல்லாமே ஒரு முடிவில்லா வட்டம் போல் தான்.
Table of Contents
ஆரோக்கியம் என்றால் என்ன
ஆரோக்கியம் என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நன்றாக இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதேயாகும்.
ஆரோக்கியத்திற்கான பரிமாணங்கள்
ஆரோக்கியத்திற்கு எட்டு விதமான பரிமாணங்கள் உள்ளன. அவையாவன,
மனம் சார்ந்த ஆரோக்கியம்
இது மனதோடு நமக்குள்ள உறவைத் தீர்மானிக்கின்றது. நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களை பிரித்து பார்த்து ஆரோக்கியமாக வைக்கும் இயல்புடையது. சரியான முடிவுகளை எடுக்கவும் உதவுகின்றது.
நிதிநிலை ஆரோக்கியம்
இது வருமானத்தை சார்ந்ததாகும். வருகின்ற வருமானத்தையும், ஏற்படுகின்ற செலவையும் சமமாக சமாளிக்கின்ற திறனை தான் நிதிநிலை ஆரோக்கியம் எனப்படுகின்றது.
அறிவு சார்ந்த ஆரோக்கியம்
நமது அறிவு, கற்பனை திறன் எல்லாமே இதில் அடங்கும். நாம் அறிவைப் பெறுவதும், பெருக்குவதும், பிறருக்கு கொடுப்பதுமாக இந்த சக்கரம் சுழன்று கொண்டிருக்கும்.
தொழில் சார்ந்த ஆரோக்கியம்
நமக்குப் பிடித்த தொழிலை தேர்வு செய்து அதில் அடையும் வளர்ச்சியையும், கிடைக்கும் நிறைவையும், சந்தோசத்தையும் சார்ந்தது தான் தொழில் சார்ந்த ஆரோக்கியமாகும்.
சமூகம் சார்ந்த ஆரோக்கியம்
நாம் இந்த சமூகத்துடன் வைத்திருக்கும் உறவைச் சுட்டிக்காட்டுவதுதான் சமூகம் சார்ந்த ஆரோக்கியமாகும். மற்றொருவரை நேர்மறை எண்ணத்துடன் அணுகும் போது நமது சுயமரியாதை அதிகரிக்கும், சமூகம் சார்ந்த ஆரோக்கியத்தில் உரையாடலுக்கு முக்கியமான பங்குண்டு.
ஆன்மீகம் சார்ந்த ஆரோக்கியம்
மதம் சார்ந்த நம்பிக்கை, அறநெறி மற்றும் நெறிமுறைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நமக்குள் இருக்கும் ஆன்மீகத்தின் தேடல் ஆகும். நாம் நமக்குள்ளேயே நல்லிணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்ற ஒரு வித வழியாகும்.
சுற்றுச்சூழல் ஆரோக்கியம்
நமது சுற்றுச்சூழலை எந்த அளவிற்கு சுத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்கின்றோம் என்பதை சார்ந்ததே சுற்றுச்சூழல் ஆரோக்கியமாகும். நமது உடல் நிலையை அதிகமாக தாக்குவதும் இந்த ஒரு பரிமாணம்தான்.
உடல்நிலை ஆரோக்கியம்
முக்கியமான, பிரதானமான பரிமாணம்தான் உடல்நிலை ஆரோக்கியமாகும். நாம் உடலை எந்த அளவிற்கு பத்திரமாக பேணி பாதுகாத்துக் கொள்கின்றோம் என்பதுதான் உடல்நிலை சார்ந்த ஆரோக்கியமாகும். இந்த எல்லா பரிமாணமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டதேயாகும்.
உடல்நிலை ஆரோக்கியத்தை பேணும் தூண்கள்
நாம் நமது உடலையும், உடலின் செயற்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்கு அதனை காக்க தவறாமல் இருப்பது மிகவும் அவசியமானதாகும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் பிறந்த குழந்தை போல் கவனிக்கத் தொடங்கும் அந்த நொடிதான் நாம் உண்மையாகவே ஆரோக்கியத்தை பேணத்தொடங்கும் கனமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பேணும் தூண்களாக அமைபவை,
சீரான உணவு – அதாவது நமது உணவில் எல்லா ஊட்டச்சத்துக்களும் சீராக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி – இது நமது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
நல்ல உறக்கம் – உறக்கம் என்பது உடலுக்கும், மனதிற்கும் அமைதியைத் தரும் மருந்தாகும்.
ஓய்வு – மனதை அமைதியாக வைத்துக் கொள்ள ஓய்வு மிகமிக அவசியமானதாகும்.
சுகாதாரம் – நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க சுகாதாரம் அவசியமாகும்.
Read more: பல் கூச்சம் குணமாக