இந்த பதிவில் “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் கட்டுரை” பதிவை காணலாம்.
வளிமண்டலத்தில் உள்ள நீராவியைக் குளிரச் செய்து மழையாகப் பொழிய வைக்கும் ஆற்றல் மரங்களுக்கே உண்டு.
Table of Contents
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இயற்கையோடு இயைந்து வாழ்வோம்
- மரங்களின் அழிப்பு
- மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம்.
- முடிவுரை
முன்னுரை
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது” என்கிறது உலகப் பொதுமறை. இவ்வுலக உயிர்கள் உய்வதற்கு மழைநீரே அமுதமாய் இருக்கிறது.
பூமிப்பந்து உயிர்க்கோளமாகத் தொடர்வதற்கு மழை பெய்வதே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் தூய்மையான நீரான மழை நீரை சேமித்து வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
மழை வீழ்ச்சிக்கு அடிப்படையாக மரங்களே விளங்குகின்றன. இக்கட்டுரையில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்பற்றி நோக்கலாம்.
இயற்கையோடு இயைந்து வாழ்வோம்
நிலம், நீர், தீ, ஆகாயம், காற்று எனும் ஐம்பூதங்களால் ஆட்சி செய்யப்படுவது இவ்வுலகம். இயற்கையின் கொடையான பசுமைப் போர்வை போர்த்திய பூமிப்பந்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
நம் முன்னோர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நீர் மேலாண்மை மூலம் உழவுத் தொழிலைச் செய்தார்கள். தான் விளைத்த தானியங்கள் கொண்டு அறத்துடன் வாழ்ந்தார்கள்.
பருவத்தே பயிர் செய்து விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு அளித்தார்கள். இயற்கையை வணங்கி அதனுடன் இயைந்து வாழ்ந்தார்கள்.
மரங்களின் அழிப்பு
மரங்களை மனித செயற்பாடுகளுக்காக அழிக்கின்றோம். சேனை பயிர்ச்செய்கை, கட்டுமான தேவைகள், குடியிருப்பு அமைத்தல், தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற பல தேவைகளுக்காக நாம் அழித்து வருகிறோம்.
மரங்களை அழிப்பதால் அதில் கிடைத்த பயன் மறைக்கப்பட்டு எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே “விதை சிறிது, விடை பெரிது” என்பார்கள்.
காட்டுத் தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வரட்சி என மரங்களை அழிக்கும் இயற்கை காரணிகளும் உள்ளது. மரங்களை அழித்ததே இன்றைய காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.
பயிர் செய்யும் நேரத்தில் வரட்சியும் அறுவடை நேரத்தில் புயலும் வருகின்றன. இதனால் வெப்பமும் அதிகரித்துச் செல்வதோடு பயிர் நிலங்கள் தரிசு நிலங்களாக பெருக்கெடுத்து, ஓடும் ஆறுகள் வரண்டும் கிடக்கின்றன. இதனால் விலங்குகளும் பறவைகளும் என அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுகின்றன.
மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம்
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” என்கிறார் வள்ளுவர். மரங்கள் மழை தரும் வரங்கள் என்பதை அறிய வேண்டும். வளிமண்டலத்தில் உள்ள நீராவியைக் குளிரச் செய்து மழையாகப் பொழிய வைக்கும் ஆற்றல் மரங்களுக்கே உண்டு.
மரங்கள் மனிதர்கள் இளைப்பாற நிழல் கொடுகின்றன. “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்ற பழமொழியும் உண்டு. சூரிய கதிர்வீச்சு, வேகமான காற்று போன்றவற்றில் இருந்து மனிதர்களை பாதுகாக்குகிறது.
மரங்கள் மண்ணுக்கு பசும் கம்பளமாக இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும். அசோகர் போர் செய்து பலரைக் கொன்றவர் என்பதை விட அவர் சாலையெங்கும் மரம் நட்டார் என்பதே நமக்கு நினைவில் இருக்கிறது.
குழந்தைகள் தமது பிறந்தநாள் அன்று தமது பெயரில் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாகிக் கொள்ள வேண்டும்.
“மரம் இல்லையேல், மனித இனமில்லை” இதன் மூலம் குழந்தைகளை மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்கள் மனிதர்களை நேசிக்கவும் தானாக கற்றுக் கொள்வார்கள்.
“கிளி வளர்த்தேன் பறந்து விட்டது, அணில் வளர்த்தேன் ஓடி விட்டது, மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது” என்றார் அப்துல்கலாம்.
முடிவுரை
வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் வந்தபின் காப்பது அறிவுடைமை ஆகாது. 2001 இல் தமிழக அரசு கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
உலகில் ஆண்டுதோறும் 55 மில்லியன் மக்கள் வரட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மழைநீர் உயிர்நீர் என்று கருதி மழைநீரைச் சேமிப்போம்.
நாம் இன்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அதுபோல நமது எதிர்காலத் தலைமுறை காற்றை காசு கொடுத்து வாங்கும் முன் விழித்திடுவோம்.
“மரங்கள் நம் மண்ணின் வரங்கள்” என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
You May Also Like : |
---|
மரம் வளர்ப்போம் கட்டுரை |
மரம் இயற்கையின் வரம் கட்டுரை |