இந்த பதிவில் “மது ஒழிப்பு கட்டுரை” பதிவை காணலாம்.
சமூகத்தின் சாபம் என்று மதுவை கூறலாம். இது குடிப்பவரை மட்டுமின்றி அவரை சார்ந்து இருப்பவர்களின் வாழ்வையும் சீரழிகின்றது. உழைக்கும் வர்க்கத்தினை உயர்த்த வேண்டும் என்றால் மது ஒழிப்பு என்பது மிக அவசியம்.
Table of Contents
மது ஒழிப்பு கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- மதுப்பழக்கமும் சமுதாயமும்
- மது ஒழிப்பின் அவசியம்
- மதுப் பாவனையினால் ஏற்படும் விளைவுகள்
- மது ஒழிப்பு வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுˮ என்பார்கள். இந்தியாவின் சமூகப் பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக மதுபானம் காணப்படுகின்றது. மது குடிப்பவர்களை மட்டும் பாதிக்காமல் அவர்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது.
உயிரைப் பறிப்பது மட்டுமல்லாது அவர்களையும்⸴ அவர்களது வாழ்வையும் நாசமாக்கி விடுகிறது. மதுப்பழக்கத்தால் ஆண்டுதோறும் பலர் இறக்கின்றனர் என்பதை உணர்ந்தும் அப்பழக்கம் சமூகத்தில் குறைந்ததாகவில்லை. அரசும் அதை தடை செய்வதாகவில்லை.
மதுபானத்தால் ஏற்படும் விளைவுகள்⸴ பிரச்சனைகள்⸴ மது ஒழிப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மதுப்பழக்கமும் சமுதாயமும்
சமுதாயமானது நற்பழக்கவழக்கங்கள்⸴ ஒழுக்கம் முதலானவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. இதனால் தான் பஞ்சமா பாதங்களில் ஒன்றாக மது அருந்துதலை பார்த்தார்கள்.
மதுப்பழக்கம் அருவருக்கத்தக்கதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய நவீன உலகமானது மதுப்பழக்கத்தை நாகரீகமாக பார்க்கின்றது.
மதுவை வெறுத்த மூத்த குடியின் வழிவந்த நம் சமுதாயம் மேற்கத்திய கலாச்சாரங்களினால் கவரப்பட்டு மது பாவனையை வீட்டு நிகழ்வுகளின்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். இது மாபெரும் ஒழுக்க சீர்கேடாகும்.
சமுதாயத்தில் மதுப்பழக்கம் மலிந்து போயுள்ளன. பொருளாதார உயர்வைப் பெற்றுக் கொடுக்கும் தொழிற்துறையாக சமூகத்தில் மதுக்கடைகள் பார்க்கப்படுகின்றன.
மது ஒழிப்பின் அவசியம்
சமூகத்தை சீர்திருத்தம் செய்வதற்கு மது ஒழிப்பு அவசியமாகின்றது. சாதிய ஒழிப்பு சமூகத்திற்கு எவ்வளவு அவசியமோ அந்தளவு மது ஒழிப்பும் அவசியமாகும்.
உழைக்கும் வர்க்கமான அடித்தட்டு வர்க்கமே மதுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த மது ஒழிப்பு அவசியமாகும்.
உடல்⸴ உள ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் மது ஒழிப்பால் மட்டுமே முடியும். குடும்பங்கள் மகிழ்வாகவும்⸴ சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ வேண்டுமெனில் மது ஒழிப்பு அவசியம்.
கொலை⸴ கொள்ளை⸴ வன்புணர்வு உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் முதலில் மது ஒழிப்பு முக்கியமாகும்.
மது பாவனையினால் ஏற்படும் விளைவுகள்
மது பாவனையானது இளைய சமுதாயத்தில் மட்டுமன்றி வயோதிபர் வரை பரந்து விரிந்து காணப்படுகின்றது. இதனால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படுகின்றது. மது அருந்துவதால் பல நோய்கள் உண்டாகின்றன.
புற்றுநோய்⸴ நரம்பு மண்டலப் பாதிப்பு முதலான பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு சமூக விரோதிகளாக மாறுவதற்கும் மதுவும் ஒரு காரணமாகின்றது.
தனிமனிதன் மட்டுமின்றி அவனைச் சூழவுள்ள அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப அமைதி⸴ மகிழ்வு சீர்குலைகிறது. கடன்சுமை ஏற்படுகின்றது.
மது ஒழிப்பு வழிமுறைகள்
மது ஒழிப்பினை முற்றுமுழுதாக நிறைவேற்ற வேண்டுமெனில் சமூகத்தில் மதுபானத்தின் கேடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வுக் கூட்டங்கள்⸴ கருத்தரங்குகளைத் தொடர்ந்து மேற்கொண்டு சமூகத்தின் மத்தியில் மது ஒழிப்பினை மேற்கொள்ளலாம்.
அரசு மதுவிற்கு நாடுபூராகவும் தடையை அமல்படுத்த வேண்டும். அரசினால் மது ஒழிப்புச் சட்டங்கள் தீவிரப்படுத்தல் அவசியம்.
மது போதையைத் தெளிய வைக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
மதுப் பழக்கத்திலிருந்து விடுபட மருத்துவ சிகிச்சை முறைகளைப் பரவலாக மேற்கொள்ள வேண்டும்.
முடிவுரை
மது குடிப்பதால் வாழ்வு சீர்குலைகின்றது. ஒவ்வொரு மதுப்பிரியர்கள் மனதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மது ஒழிப்புப் பற்றிய உறுதியை ஏற்படுத்த வேண்டும்.
வீதி விபத்துக்கள் இழப்புக்கான சமூகத்தின் அவல நிலைக்குக் காரணமான மதுப் பழக்கத்தை ஒழிக்க எம்மாலான முயற்சியை மேற்கொள்ளுவோமென உறுதியெடுத்து மதுவை ஒழிப்போம்.
You May Also Like :
தீண்டாமை ஒழிப்பு பற்றிய கட்டுரை