இலக்கியங்கள், காலம் காட்டும் கண்ணாடி என்பர். மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகரம், மணிமேகலை என்ற இரண்டும் முழுக்க முழுக்கத் தமிழ்ச் சமுதாயத்தின் கோட்பாடுகளைக் காலங்கடந்தும் தெரிவிக்கும் தக்க சான்றுகளாக விளங்குகின்றன.
மணிமேகலை காப்பியமானது தன்னகத்தே பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்
சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம்
மணிமேகலைக் காப்பியத்தில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பலவும் எடுத்தியம்பப்படுகின்றது. குறிப்பாக கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துகளையும் சமுதாய மேம்பாட்டையும் வலியுறுத்திக் கூறுகின்றன. மணிமேகலை வைதீக சமயச் செயல்பாடுகளை மறுத்துச் சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, உயர்ந்த சமுதாயத்தைப் படைத்துக் காட்டுவதற்கு எழுந்த காப்பியமாகும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை என்ற சிறப்பினைப் பெறுகின்றது. மேலும் இது ஒரு பௌத்த காப்பியம்.
காப்பியத் தலைவி
இக்காப்பியத்தினுடைய காப்பியத் தலைவி மணிமேகலை ஆவாள். கோவலன் மற்றும் மாதவியின் புதல்வி. கணிகைக் குல பெண்ணொருத்தியை காப்பியத்தின் தலைமகளாகக் கொண்டிலங்கும் முதல் காப்பியமும் இதுவே. காப்பியம் முழுதும் பெண்ணின் பெருமை சாற்றப்படுவதைக் காணலாம்.
துறவறத்தை வலியுறுத்துகின்றது
சுகபோக வாழ்க்கை கிடைப்பதையும் பொறுட்டாக எண்ணாமல், துறவு வாழ்க்கைக்கு போன இளம் பெண்ணின் கதை இதுவாகத்தான் இருக்கும்.
சமணக் காப்பியம்
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை என்ற பெருமையை கொண்டுள்ளது. இந்நூல் பௌத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது.
காப்பிய சிறப்பு பெயர்கள்
‘மணிமேகலை’ என்பது காப்பியத்தின் பெயர். இதற்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் பெயரும் உண்டு. மணிமேகலை துறவு பூண்டதால் இப்பெயர் பெற்றது. இது தவிர பசிப்பிணிகாப்பியம், முதல்சமய காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்த காப்பியம், குறிக்கோள் காப்பியம், பசுபோற்றும் காப்பியம் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
அறக்கருத்துக்களை எடுத்தியம்புகின்றது
அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை என்பதே மணிமேகலை காப்பியத்தின் சாரமாகும்.
இரட்டை காப்பியங்களுள் ஒன்று
வெவ்வேறு நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஒரே கதைத் தொடர்புடையது. எனவே இவை இரட்டை காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தமிழ்நாட்டை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டது.
காப்பிய அமைப்பு
ஆசிரியப்பாவாலானது. மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை 30 ஆகும். மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள மொத்த அடிகள் 4286 ஆகும்.
காப்பியம் கூறும் 3 கருத்துக்கள்
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.
காப்பியப் பெருமை
ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி ஆகும் பெருமையுடையது.
You May Also Like : |
---|
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை |
மணிமேகலை வாழ்க்கை வரலாறு |