அதிகாலையிலிருந்து அதிவேகமாக நடப்பது, எந்நேரமும் மருந்து மாத்திரைகளோடு பயணிப்பது இவைகள் எல்லாம் இன்றைய வாழ்வியலில் வாடிக்கையாகிவிட்டது.
இதற்கெல்லாம் காரணம் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயாகும். உலகளவில் 18 கோடிக்கும் அதிகமானோர் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025இல் இவ்வெண்ணிக்கை 36 கோடியாக அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல்களை ஆய்வுகள் கூறுகின்றன.
மனித உடலில் தசைகள் வேலை செய்வதற்கு, இதயம் துடிப்பதற்கு, நுரையீரல் சுவாசிப்பதற்கு, மூளை சிந்திப்பதற்கு, கோடிக்கணக்கான உயிரணுக்களை வளர்ப்பதற்கும் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் அடிப்படை தேவையாகும்.
வயிற்றக்குச் சற்று பின்னால் இக்கணயம் அமைந்துள்ளது. பீட்டா உயிரணுக்கள் இன்சுலினை சுரக்கின்றன. உடலில் இன்சுலின் சமநிலை தவறும் போது சக்கரை நோய் உருவாகின்றது.
உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்கள் போன்றவர்களுக்கு உடலில் சர்க்கரையை அதிகரிக்கும் போது அந்த அதீத சர்க்கரையை செலவழிக்க வழியில்லாமல் அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றது.
கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றினால் மன அழுத்தம் ஏற்படும் போது நம் உடலில் பிற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து இன்சுலின் சுரப்பைத் தடுக்கின்றன.
இந்த நீரிழிவு நோய்க்கு மருந்தான இன்சுலினை கண்டுபிடித்த கனடா நாட்டின் விஞ்ஞானி குழுவின் தலைவரான பெட்ரிக் பைண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை உலக நீரிழிவு தினமாக 1991ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
Table of Contents
நீரிழிவு நோய் என்றால் என்ன
நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட (நீண்டகால) நோயாகும். பொதுவாக எமது இரத்தத்தில் இனிப்புச் சத்து அதாவது குளுக்கோஸ் அளவு வழமையாக இருப்பதை விட அதிகரித்து காணப்படுவதே நீரிழிவு நோய் ஆகும்.
அதாவது, பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அது 180 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது. இவற்றைதான் நீரிழிவு நோய் என்கிறோம்.
நீரிழிவு நோயின் வகைகள்
பொதுவாக நீரிழிவு நோயினை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வகை1 (Type 1), வகை2 (Type 2). இது தவிர Type 3, Type 4 என்றும் வகைப்படுத்துவர்.
முதலாம் வகைக்குரிய நீரிழிவை நோக்குவோமானால் 1-20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மெலிந்து காணப்படுவர்.
அதிகரித்த பசி, அதிகரித்த தாகம், அதிக அளவு சிறுநீர் கழித்தல் போன்ற நோய் அறிகுறிகள் பெரிதாக காணப்படுவதில்லை. ரத்தத்தில் காணப்படும் இன்சுலின் அளவு மிகமிக குறைவாக இருக்கும்.
35-40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Type 2 நீரிழிவு நோய் அதிகம் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் உணவாகும். தவறான உணவு பழக்க வழக்கம், அதிகரித்த உடல் எடை போன்ற காரணங்களினால் இந்நோய் ஏற்படுகின்றது.
அதிகரித்த பசி, தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை நோய் அறிகுறிகளாக காணப்படும். இந்நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவு அதிகமாகவும், இரத்த அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.
வேகமாய் இயங்கும் உலக நடைமுறையில் நாம் அதை விட வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் சம்பாதிப்பது நோய்களாகும்.
இதனை தவிர்ப்பதற்கு முறையான உடற்பயிற்சி, சிறந்த உணவுப்பழக்கம், உறக்கம் போன்றவற்றை பின்பற்றினால் நீரிழிவு நோய் மட்டுமன்றிப் பிற பல நோய்களையும் தவிர்க்கலாம்.
Read more: சர்க்கரை நோய் குணமாக டிப்ஸ்