தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை

Therthal Vizhipunarvu Katturai In Tamil

இந்த பதிவில் “தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

தேர்தல்களையும் அரசியலையும் நாம் பொருட்படுத்தாமல் விடுவோமாயின் இங்கே மாற்றம் என்பது நிகழாது.

தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஜனநாயகமும் தேர்தல்களும்
  3. தேர்தல்களின் அவசியம்
  4. ஒரு விரல் புரட்சி
  5. தேர்தல் முறைகேடுகள்
  6. சரியான தேர்வுகள்
  7. முடிவுரை

முன்னுரை

தேர்தல்கள் என்பது ஜனநாயக நாடுகளின் தலை எழுத்தை தீர்மானிக்கின்ற விடயமாகும். இந்த தேர்தல்கள் எனும் எண்ணக்கரு கிரேக்கத்தில் தோன்றி வளர்ந்ததாகும். அரசியலில் தேர்தல்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

மக்கள் தமது நாட்டை ஆளும் ஆட்சி தலைவர்களை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடாத்தப்படுகிறது. வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராக அறியப்படுவார். இதுவே ஜனநாயக நாடுகளில் ஏற்று கொள்ளப்பட்ட அரசியல் சட்டமாகும்.

இந்த தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி இடம்பெற வேண்டும் அது போல மக்களும் விழிப்புணர்வோடு தமது தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இக்கட்டுரையில் இதைப்பற்றி விரிவாக காண்போம்.

ஜனநாயகமும் தேர்தல்களும்

ஜனநாயகம் எனப்படுவது மக்களால் மக்களுக்காக வழங்கப்படும் ஆட்சி ஆகும். இதுவே உலகில் அதிக நாடுகளில் ஏற்றுகொள்ளப்பட்ட ஆட்சி முறையாக உள்ளது. உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது.

ஒரு பில்லியனுக்கும் அதிக மக்களை கொண்ட இந்த நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் வாக்குரிமை இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது.

வன்முறைகள் ஏதும் இன்றி தமக்கு பொருத்தமான ஆளுமையான தலைவர்களை மக்கள் தேர்தல்கள் மூலமாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஒவ்வொரு இந்திய பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு இந்தியர்களுடையதும் அடிப்படை உரிமையாகும்.

தேர்தல்களின் அவசியம்

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு முறை நாட்டின் ஆட்சியாளர்கள், அரசாங்கம் மாற்றி அமைக்கப்படுவதற்காக இந்த தேர்தல்கள் தொடர்ந்து நடாத்தப்படுகின்றன.

தேர்தல்கள் இல்லாவிட்டால் அதிகாரம் மிக்கவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பார்கள் குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம் போன்ற முறையற்ற ஆட்சிகள் இடம்பெற இது காரணமாக அமைகிறது.

இதனால் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படும். இதனை தடுப்பதற்காகவே தேர்தல்கள் அவசியமாகின்றது.

ஒருவிரல் புரட்சி

புரட்சி என்ற ஒரு வார்த்தை ஒன்றில் இருந்து தான் நாட்டின் வளர்ச்சி தங்கி இருக்கிறது. எமது நாடு ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து ஒரு பெரும் புரட்சி மூலமே விடுதலை அடைந்தது.

இன்றும் பல தவறான அதிகார வர்க்கங்களிடமும் முதலாளிகளிடமும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலை மாறவேண்டுமாயின் உயர் அதிகாரங்களை உடைய அரசாங்கம் சிறந்ததாக அமையவேண்டும்.

நீதியை கொல்கின்ற நாட்டில் ஊமைகளாய் வாழ்கிறோம். பல போராட்டங்களை தாண்டி தான் ஏழைகள் நாம் சோற்றையே காண்கிறோம். இவற்றை மாற்றியமைக்க வாக்கு ஒன்று தான் ஆயுதம் என்பதனால் எல்லா மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்தால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தேர்தல் முறைகேடுகள்

எமக்கு கிடைத்திருக்கின்ற வாக்குரிமை மிகப்பெரிய ஜனநாயக உரிமையாகும். இதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இதனை துஷ்பிரயோகம் செய்வது எமது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.

அரசியலில் ஈடுபடாமல் இருப்பது, சலுகைகளையும் பணத்தையும் எதிர்பார்த்து தவறானவர்களுக்கு வாக்களித்தல் இவை அனைத்தும் பாரிய தவறுகளாகும்.

சில தகுதி அற்ற மனிதர்கள் பணபலத்தினால் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கேவலமான அரசியல் நிலை நமது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இவற்றினை மக்கள் நாம் தான் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

சரியான தேர்வுகள்

காலம் காலமாக எமது முன்னோர்கள் செய்த தவறுகளை நாமும் செய்யக்கூடாது. தவறான ஆட்சியாளர்களை தெரிவு செய்வது நமது நாட்டையே படுகுழியில் தள்ளுவதற்கு சமனான காரியமாகும்.

மக்கள் மீதும் நாட்டின் மீதும் அக்கறை உள்ள நேர்மையான ஆளுமையான மனிதர்களை நாம் ஆட்சியாளர்களாக தெரிவு செய்ய இந்த தேர்தல்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளாவிட்டால் எம்மை இறைவனால் கூட காப்பாற்ற முடியாத நிலை உருவாகி விடும்.

முடிவுரை

நாட்டினுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது அதிகாரம் நிறைந்த அரசாங்கத்தின் கைகளில் தான் தங்கியிருக்கிறது.

சட்டம், மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, சமூக நலன்கள் போன்றவற்றில் எமது நாடு வளர்ச்சி காணவேண்டும் எனில் ஊழல் அற்ற நல்ல மனிதர்கள் எமது அரசாங்கத்தை அலங்கரித்தால் தான் சாத்தியமாகும்.

தேர்தல்களையும் அரசியலையும் நாம் பொருட்படுத்தாமல் விடுவோமாயின் இங்கே மாற்றம் என்பது நிகழாது ஆதலால் இன்றேனும் விழித்து கொள்வோம் மாற்றங்களை நோக்கி இன்றே பயணிப்போம்.

You May Also Like :

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

குடி குடியை கெடுக்கும் கட்டுரை