தாய்மொழி பற்றி கட்டுரை

Thai Mozhi Tamil Katturai In Tamil

இந்த பதிவில் “தாய்மொழி பற்றி கட்டுரை” பதிவை காணலாம்.

உலகத்திலே எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மிகவும் உயர்வானது.

தாய்மொழி பற்றி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மொழி பற்றிய விளக்கம்
  3. தாய்மொழி
  4. தாய்மொழிபற்று
  5. தாய்மொழி பற்று கொண்ட சான்றோர்கள்
  6. தாய்மொழி கல்வியும் சுயசிந்தனையும்
  7. முடிவுரை

முன்னுரை

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தாய்மொழியின் தொன்மை பற்றி பாரதியார் கூறியுள்ளார்.

உலகில் பல ஆயிரகணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள் எமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும் ஒன்று.

எமது தாய்க்கும் எமக்கும் எவ்வாறு நெருங்கிய பந்தம் உள்ளதோ அது போல தமிழ் மொழிக்கும் எமக்கும் அழகிய பந்தம் உள்ளது. இக்கட்டுரையில் எமது தாய்மொழி பற்றி விரிவாக காண்போம்.

மொழி பற்றிய விளக்கம்

தன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதே மொழி ஆகும். வாய்மொழியே முதலில் தோன்றியது அதன் பின்பு தான் எழுத்து மொழி தோன்றியது.

எமது தாய்மொழி தொன்மை காலம் முதலே நாகரீகம் நிறைந்த பேச்சு மொழியையும் எழுத்து இலக்கணங்களையும் இலக்கிய மரபுகளையும் கொண்டு காணப்படுகிறது. உள்ளத்து எண்ணங்களை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவது எமது தாய்மொழியாகும்.

தாய்மொழி

ஒருவன் பிறந்தது முதலாக மனதில் உள்ளவற்றை சிந்திப்பதற்கும் அதனை பேசுவதற்கும் எழுதுவதற்கும் அடிப்படையாக இருப்பதே தாய்மொழி என்று சொல்லப்படுகின்றது. இதுவே அந்த மனிதனுக்கு ஓர் அடையாளத்தை வழங்குகின்றது.

உலகத்திலே எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மிகவும் உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும் அவர்களுக்கு சிறந்த உணர்வை எப்போதும் தரும்.

தாய்மொழி பற்று

தாய்மொழி மீதான் பற்று ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானதாகும். எமது தாய்மொழியான தமிழ் பழமையானது பெருமை மிக்கது அழியாதது. இதனை போற்றி பாதுகாக்க வேண்டியது தமிழர்களாகிய எம் ஒவ்வொருவருடையதும் கடமையாகும்.

நாம் எமது கல்வியை தாய்மொழியில் கற்பது எமக்கு சால சிறந்ததாகும். இதுவே எமது அறிவை பெருக்கும்.

பிறமொழி ஆதிக்கத்தால் வேறுமொழிகளில் கல்வி கற்பது பூரணம் இல்லாத கல்வியாக அமையும். பிறமொழிகள் மீது மோகம் கொண்டு தாய்மொழியை நிந்திப்பது தனது தாயை வெறுப்பதற்கு சமனாகும்.

தாய்மொழி பற்றுகொண்ட சான்றோர்கள்

தமிழ் மொழி மீது பற்று கொண்ட சான்றோர்களை பட்டியலிட்டால் அது எண்ணிலடங்காதவையயாக நீளும்.

“திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், பரணர், கம்பர், சேக்கிழார், பாரதியார், பாரதிதாசன்” என அன்று துவங்கி இன்றுவரை பல தமிழ் மீது அதீத பற்று கொண்ட படைப்பாளிகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இவர்கள் தமது தமிழ் படைப்புக்களால் தமது தாய் மொழிபற்றை இந்த சமூகத்துக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள். தமிழ் தாயை வாழ வைத்து மறைந்திருக்கின்றார்கள் தமிழ் இருக்கும் வரை அவர்களும் வாழ்வார்கள்.

தாய்மொழி கல்வியும் சுய சிந்தனையும்

எப்போதும் குழந்தைகள் தமது தாய்மொழியில் தான் கல்வி கற்க வேண்டும். அது தான் அவர்களது சிந்தனை திறனை வளர்க்கும் அவர்களை ஆக்கபூர்வமான பிரஜைகளாக உருவாக்கும்.

உலகத்தின் வளர்ந்த நாடுகள் தமது நாட்டு குழந்தைகளுக்கு தாய்மொழி மூலமாகவே கல்வியினை வழங்குகின்றன.

எதிர்கால தலைமுறையினர் தமது தாய்மொழியில் கல்வி பெற வேண்டும் பிற மொழி மோகத்தை தவிர்த்து தாய்மொழியில் குழந்தைகள் கற்பதன் மூலமே எமது தேசம் முன்னேறும் வாய்ப்பு இருக்கின்றது.

முடிவுரை

எமது தாய்மொழி உணர்வில் இருந்து உருவானது. அறிவியல், விஞ்ஞானம், வானியல், சோதிடம், பொருளியல், கணிதம், புவியியல், சமூகவியல் என எல்லா துறைகயிலும் தேவையான அளவுக்கு எமது மொழியில் நிறைய நூல்கள் காணப்படுகின்றன.

அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்ள எமது தாய்மொழியில் கல்வி கற்பதனை நாம் எப்போதும் பெருமையாக கருத வேண்டும். மொழிகளின் மொழியாகிய நம் தாய்மொழியை காக்க வேண்டும். இந்த உணர்வு நம் அனைவருக்கும் வேண்டும்.

You May Also Like :

கல்வியின் சிறப்பு கட்டுரை

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை