தல தீபாவளி என்றால் என்ன

deepavali enral enna tamil

தல தீபாவளி என்றால் என்ன

திருமணத்திற்கு பின்பு வரும் அனைத்து பண்டிககைளும் மாப்பிள்ளை வீட்டில் கொண்டாடினாலும், தல தீபாவளி பெண் வீட்டில்தான் கொண்டாடுவர்.

வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக தல தீபாவளி புதிதாகத் திருமணமான தம்பதியினருக்கு இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இது அவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக அமைகின்றது.

புதிதாக திருமணமான தம்பதிகளை தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, பெண்ணின் பெற்றோர், மணமகன் வீட்டிற்கு சென்று சீர்வரிசை வைத்து தல தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பார்கள்.

பெண்ணுக்கு உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் இருந்தால் அவர்கள்தான் அழைக்கச் செல்வார்கள். தட்டில் வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து புதுமணத் தம்பதியரை அழைக்கச் செல்வது வழக்கம்.

அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன்தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர். ஊரில் உள்ள பெரியவர்களின் வீட்டிற்குச் சென்று தல தீபாவளிக்குச் செல்கின்றோம் என்று கூறிவிட்டு ஆசீர்வாதம் பெற்றுச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது.

தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து மகளும் அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.

பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியப் பின்னர், இனிப்புக்கள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர்.

தல தீபாவளி என்றால் என்ன

தல தீபாவளி என்பது திருமணமான பின்னர் வரும் முதல் தீபாவளியை மணமகன் தன் மனைவியின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவதுதான் தல தீபாவளி ஆகும்.

அதாவது திருமணத்திற்குப் பின்னர் கொண்டாடப்படும் முதல் தீபாவளி என்பதால் அதனைத் தல தீபாவளி என அழைக்கின்றனர்.

தல தீபாவளி விருந்து

மாமனார் வீட்டிற்குச் சென்றவுடனே விருந்து ஆரம்பித்து விடும். தல தீபாவளிக்கு பெண் வீட்டில் தலை வாழை இலை போட்டு அதில் அரிசி, வெல்லம் சேர்த்த மாவு வைத்து அதில் நெய் ஊற்றுவார்கள்.

முந்திரி திராட்சை, பேரீச்சை, நாட்டு வழைப்பழம், தேன் என பலவும் அதில் இடம்பெறும்.

அதுமட்டுமன்றி மாப்பிள்ளைக்குப் பிடித்த உணவு வகைகள், பலகாரங்கள், இனிப்புப் பண்டங்கள் என தடல்புடலாக விருந்து வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

பெண்ணுக்கு அக்கா இருந்தால் அவருக்குத் திருமணமாகி இருந்தால் அவரையும் விருந்துக்கு அழைக்கும் வழக்கமும் சில இடங்களில் காணப்படுகின்றது.

தல தீபாவளிக்கு வந்த புதுமணத் தம்பதியினருக்கு போதும் போதும் என்று கூறினாலும் விடாமல் திகட்டும் வகையில் விருந்து வைப்பர். தல தீபாவளி விருந்தானது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

தல தீபாவளிக்கு மறுநாள் பொங்கல், சாம்பார், சட்னி கூடவே மெதுவடை, பருப்பு வடை, கேசரி போன்ற பலவும் பரிமாறப்படும். மேலும் தல தீபாவளி முடிந்து வீடு திரும்பும் புதுமணத் தம்பதியினருக்கு சீர் முறுக்கு, அதிரசம், லட்டு எனப் பலவும் பானைகளில் கொடுப்பர்.

கூடவே பெண்வீட்டார் வசதிக்கு ஏற்ப உடைகள் எடுத்துக் கொடுத்து தங்க மோதிரம், தங்கச் சங்கிலி போன்றனவும் பரிசளிப்பர்.

Read more: தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்