இந்த பதிவில் “இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.
சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். தமிழ்நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் நாட்டுப்பற்றை வளர்த்து பல புரட்சியை தமிழ்நாடு செய்திருக்கின்றது.
Table of Contents
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- முதல் முழக்கம்
- வ.உ.சிதம்பரனார்
- சுப்பிரமணிய பாரதியார்
- சுதந்திரப் போராட்டத்தின் தமிழகப் பெண்களின் பங்கு
- முடிவுரை
முன்னுரை
வணிக நோக்கத்துடன் வந்த ஆங்கிலேயர் பின் நம் இந்திய தேசத்தை முழுவதுமாக கைப்பற்றி ஆண்டு நம் நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்தனர். இதனால் விடுதலைப் போராட்டம் நாடெங்கும் நிகழ்ந்தது.
இதன் காரணமாக 1947 ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்க தொடங்கினோம். இந்திய சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர்களின் பங்களிப்பானது அளப்பரியதாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு தனிச் சிறப்புடையதாகும். இந்தியப் போராட்டத்தில் தழிழகத்தின் பங்களிப்புப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
முதல் முழக்கம்
வீரபாண்டிய கட்டபொம்மனே 1790 ஆம் ஆண்டு வெள்ளையரின் கொடுமையை எதிர்த்து முழக்கம் செய்தவராவார்.
தொடர்ந்து ஊமைத்துரை⸴ வேலு நாச்சியார்⸴ மருது பாண்டியர்⸴ புலித்தேவன் எனப் பலரும் வெள்ளையரை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்தவர்கள் ஆவர். வரி கேட்டுத் தொல்லை செய்த வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவர்கள் புலித்தேவன் முதன்மையானவர்.
வ.உ.சிதம்பரனார்
“தென்னாட்டுத் திலகர்ˮ என போற்றப்படுபவர் தான் வ.உ சிதம்பரனார் ஆவார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஆங்கிலேயருக்கு எதிராக சுதேச கப்பலை ஓட்டினார். இதனால் இவர் “கப்பலோட்டிய தமிழன்ˮ என்ற புகழைப் பெற்றார்.
உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி என்று வாழ்ந்தவர் ஆவார். இவர் நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும்⸴ ஆங்கிலேய அரசு பற்றிய விழிப்புணர்ச்சியையும் இந்திய மக்களிடையே ஏற்படுத்தவும் பாடுபட்டவர் ஆவார்.
சுப்பிரமணிய பாரதியார்
இவர் தன் பாட்டுத் திறத்தால் நாட்டு மக்களுக்கு நாட்டுப்பற்று ஊட்டி அச்சம் தவிர்த்து நாட்டுக்காய் போராட வழிகாட்டியவர் ஆவார். இவருடைய கவிதைகள் விடுதலைப் போராட்ட காலத்தில் மக்கள் மனதில் தேசிய உணர்வை ஊட்டியதனால் “தேசிய கவியாகˮ போற்றப்படுகிறார்.
“இந்திய பத்திரிகைˮ மூலம் விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல
கட்டுரைகளை எழுதினார். இதைக் கண்ட ஆங்கிலேய அரசு பத்திரிக்கைக்கு தடை விதித்தது.
இவர் சுதந்திரம் அடையும் முன்னரே சுதந்திர தாகத்தையும்⸴ சுதந்திர மகிழ்வையும் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்றுˮ பாடி வெளிப்படுத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தின் தமிழகப் பெண்களின் பங்கு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்கு மகத்தானது. தமிழகத்தில் வேலுநாச்சியார்⸴ தில்லையாடி வள்ளியம்மை⸴ கடலூர் அஞ்சலையம்மாள்⸴ இலட்சுமி சாகல்⸴ லீலாவதி அம்மையார் போன்ற பலரது பங்களிப்பு அளப்பரியதாகும்.
லீலாவதி அம்மையார் சுதேச இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததால் மூன்று முறை சிறைக்குச் சென்றார்.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியாருக்கு உரியதாகும். ஆங்கிலேயர்களை மிகவும் துணிச்சலுடன் எதிர்த்ததுடன் பெரும் ஆற்றலுடனும் எதிர்த்துப் போராடினார்.
முடிவுரை
இந்திய விடுதலைப் போருக்கு களம் அமைத்துக் கொடுத்த பெருமை தமிழகத்தையே சாரும். இந்திய விடுதலைப் போரின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகம் தனக்குரிய பங்கை செலுத்துவதில் தவறவில்லை.
சிதம்பரனார் சுதேச கப்பல் கம்பனியைத் தொடங்கி இந்தியாவிற்கே வழிகாட்டினார். வா.வே.சு.ஐயர் புரட்சிப் படையை உருவாக்கி அதற்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார். பாரதியார்⸴ காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் விடுதலைப் போரில் ஈடுபட்டு இந்தியாவிற்கே வழிகாட்டினர்.
You May Also Like :