தமிழ்மொழியிலே பதமானது சொல், கிழவி, மொழி என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. பதமானது ஓர் வாக்கியத்தின் அமைப்புக்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. எனவே பதம் என்பது யாது என்பதை பற்றி ஆராய்வோம்.
Table of Contents
பதம் என்றால் என்ன
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து, ஒரு பொருள் தரும் வகையில் அமைதல் பதம் எனப்படும்.
பதம் வகைகள்
- பகுபதம்
- பெயர்ப்பகுபதம்
- வினைப்பகுபதம்
- பகாபதம்
- பெயர்ப்பகாபதம்
- வினைப்பகாப்பதம்
- உரிப்பகாபதம்
- இடைப்பகாபதம்
பதம் இரண்டு வகைப்படும். அவையாவன,
- பகுபதம்
- பகாபதம்
பகுபதம்
பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமாக அமைகின்ற சொற்பதங்கள் பகுபதம் எனப்படும்.
பகுபதம் உதாரணம்:
- முதல்வர் = முதல்+வ்+அவர்
- செய்தான் = செய்+ல்+ஆன்
இப்பகுபதமானது இரண்டு வகைப்படும். அவையாவன,
பெயர்ப் பகுபதம்
பகுபதம் பெயர்ச்சொல்லாக அமைந்திருப்பின் அது பெயர்ப்பகுபதம் எனப்படும். இப்பெயர்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன,
- பொருட் பெயர்ப் பகுபதம்: பொன்னன், செல்வன்
- இடப் பெயர்ப் பகுபதம்: ஊரான், காட்டான்
- சினைப் பெயர்ப் பகுபதம்: கண்ணன், தலையன்
- பண்புப் பெயர்ப் பகுபதம்: கரியன், இனியன்
- தொழிற் பெயர் பகுபதம்: இயக்குனர், நடத்துனர்
- காலப் பெயர் பகுபதம்: கார்த்திகையான்
வினைப் பகுபதம்
பகுபதம் வினைச்சொல்லாக இருப்பின் அது வினைப் பகுப்பதம் எனப்படும். வினைப்பகுபதம் இரண்டு வகைப்படும்.
- தெரிநிலை வினைப்பகுபதம்
- குறிப்பு வினைப்பகுபதம்
பகுபத உறுப்புகள்
பகுபதமானது ஆறு உறுப்புகளை கொண்டமைந்து காணப்படுகிறது. அவ்வுறுப்புகளாவன,
பகுதி
பகுதியை முதனிலை என்று அழைப்பர். பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதியாகும். இது பெரும்பாலும் கட்டளையாக அதாவது ஏவல் வினையாக அமையும். பகுதி என்பது தனிச்சொல். இதனை மேலும் பகுத்தால் பயனில்லாமல் போய்விடும்.
உதாரணம்:
- படி
- ஓடு
- வா
விகுதி
பகுபதத்தின் இறுதிகள் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும். அத்துடன் திணை, பால், எண், இடம், காலம் காட்டும் உறுப்பு விகுதி ஆகும்.
உதாரணம்:
- நடந்தான் – ஆன் – ஆண்பால் விகுதி
- நடந்தாள் – ஆள் – பெண்பால் விகுதி
- நடந்தனர் – அர் – பலர்பால் விகுதி
- நடந்தது -து – ஒன்றன்பால் விகுதி
- நடந்தன – அ – பலவின்பால் விகுதி
இடைநிலை
பகுபதத்தின் அல்லது பகுதிக்கு விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையை காட்டுவது இடைநிலை எனப்படும். இது ஐந்து வகைப்படும். அவையாவன,
- காலங்காட்டும் இடைநிலை
- நிகழ்கால இடைநிலைகள்
- இறந்தகால இடைநிலைகள்
- எதிர்கால இடைநிலைகள்
- எதிர்மறை இடைநிலைகள்
காலங்காட்டும் இடைநிலை
தமிழில் காலம் காட்டுவதற்காக சொற்களில் பல்வேறு இடைநிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நிகழ்கால இடைநிலைகள
கிறு, தின்று, ஆநின்று என்பன நிகழ்கால இடைநிலைகள் ஆகும்.
உதாரணம்:
- உண்கிறான்.
- உண்கின்றான்.
- உண்ணாநின்றான்.
இறந்தகால இடைநிலைகள்
த், ட், ற், இன் என்பன இறந்த கால இடைநிலைகள் ஆகும்.
உதாரணம்:
- பார்த்தான்
- உண்டான்
- வென்றான்
- பாடினான்
எதிர்கால இடைநிலைகள்
ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள் ஆகும்.
உதாரணம்:
- உண்பான்
- வருவான்
எதிர்மறை இடைநிலைகள்
இல், அல், ஆ முதலியன எதிர்மறை இடைநிலைகள் ஆகும்.
உதாரணம்:
- உண்டிலன்
- காணலன்
- பாரான்
சாரியை
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரி இது பெயர்ச்சொல்லையா வினைச்சொல்லையும் சார்ந்து வரும், அன், ஆன், இன், அல், அன்று, இற்று, அத்து, அம் ஆகிய உறுப்புகள் ஆகும்.
உதாரணம்:
- வந்தனன் – வா+ த்(ந்)+அன்+ அன், இதில் சாரியை ‘அன்’ என்பதாகும்.
சந்தி
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சாந்தி எனப்படும்.
உதாரணம்:
- வந்தனன் என்பதை வா+த் (ந்)+ த்+ அன்+ அன் என பிரித்து நோக்குகையில் “த்” என்பது சந்தியாகும்.
விகாரம்
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
உதாரணம்:
- “வந்தனன்” என்பதில் -வா(வ)+ த்(ந்) + த்+ அன்+அன் எனப் பிரித்து நோக்குகையில், வ,ந் என்பது விகாரம் ஆகும்.
பகாபதம்
ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாததும் பிரித்தால் பொருள் தராததுமான பதம் பகாபதம் எனப்படும்.
பகாபதம் உதாரணம்:
- அணி
- தருப்பணம்
- உத்திரட்டாதி
பகாபதம் நான்கு வகைப்படும். அவையாவன,
- பெயர்ப் பகாபதம்
- வினைப் பகாப்பதம்
- உரிப் பகாபதம்
- இடைப் பகாபதம்
பெயர்ப் பகாபதம்
பெயர்ச்சொல்லாக அமையும் பகாபதம் பெயர்ப்பகாபதம் எனப்படும்.
பெயர்ப் பகாபதம் உதாரணம்:
- நிலம்
- நீர்
- காற்று
வினைப் பகாப்பதம்
வினைச்சொற்களாக வரும் பகாபதங்கள் வினைப்பகாபதங்கள் எனப்படும்.
வினைப் பகாப்பதம் உதாரணம்
- நட
- ஓடு
- நில்
உரிப் பகாபதம்
உரிச்சொற்களாக வரும் பகாபதம் உரிப்பகாபதம் எனப்படும்.
உரிப் பகாபதம் உதாரணம்:
- சால
- தவ
- நனி
இடைப் பகாபதம்
இடைச் சொற்களாக வரும் பகாபதங்கள் இடைப்பகாபதம் எனப்படும்.
இடைப் பகாபதம் உதாரணம்:
- கொல்
- போல்
- மற்று
Read more: வெண்பாவின் வகைகள்