நாட்டார் பாடல்கள் கட்டுரை

Nattar Padalgal Katturai In Tamil

இந்த பதிவில் “நாட்டார் பாடல்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

இசை என்பது அனைவராலும் விரும்பப்படுவதனால் நாட்டார் பாடல்கள் இசைக்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஏடுகளில் எழுதப்படாத பாடல்களாகவே அதிகம் காணப்படுகின்றது.

நாட்டார் பாடல்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நாட்டார் பாடல்கள் என்பது
  3. இவற்றின் தோற்றம்
  4. வகைப்பாடுகள்
  5. கலைவடிவம்
  6. மக்களின் வாழ்வியல்
  7. முடிவுரை

முன்னுரை

ஒவ்வொரு மொழிகளிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னராகவே வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற துவங்கிவிட்டன. அவ்விலக்கிய வடிவங்கள் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக எடுத்து கூறுகின்ற நாட்டுப்புற மக்களின் கவலைகளிலும் மகிழ்ச்சிகளிலும் உடனிருந்து தேற்றுகின்ற தாய் போன்றது.

பிற்காலங்களில் உருவான கலைவடிவங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது.

இலங்கையின் மலையகம் கிழக்கிலங்கை வடஇலங்கை போன்ற பகுதிகளை அடிப்படையாக கொண்டு பலவகையான நாட்டார் பாடல்கள் அந்த மக்களால் பாடப்பட்டு வழி வழியாக கடத்தப்பட்டிருக்கிறது. அவை பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.

நாட்டார் பாடல்கள் என்பது

நாட்டார் பாடல் என்பது இலக்கண முறைகளோ செய்யுள் விதிகளையோ பின்பற்றாது. இயல்பு வாழ்க்கையில் நாட்டுப்புற மக்கள் பயன்படுத்தும் வார்த்தை பிரயோகங்களை வரிகளாக்கி வாய் வழியாக காலம் காலமாக கடத்தபடுகின்ற உணர்ச்சி மிக்க பாடல்களாகும்.

இந்த பாடல்கள் அந்த மக்களின் வாழ்வியலை கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய உணர்ச்சி மிகுந்த பாடல்களாகும்.

இசை என்பது அனைவராலும் விரும்பப்படுவதனால் இப்பாடல்கள் இசைக்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஏடுகளில் எழுதப்படாத பாடல்களாகவே அதிகம் அறியப்படுகின்றன.

இவற்றின் தோற்றம்

கடினமான வேலைகளை செய்யும் போது அந்த வேலையின் கடின தன்மை தெரியாமல் இருப்பதற்காக மக்கள் பாட்டு பாடும் வழக்கம் இருந்தது. அதனால் தான் “ஆடி பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது” என்று கூறுவார்கள். இந்த அடிப்படையில் தான் இவை கூட்டுப்படைப்பாக அமைந்திருக்கும்.

வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற வகையில் இரத்தின சுருக்கமாக இந்த பாடல்கள் அந்த மக்களால் உருவாக்கப்பட்டு பாடப்பட்டது. இது அவர்களின் கவலைகளை மறக்க செய்தது. காதலையும் வெளிப்படுத்தியது வலிகளையும் சொல்ல சிறந்த ஒரு கருவியாக நாட்டார் பாடல்கள் காணப்பட்டது.

வகைப்பாடுகள்

இந்த நாட்டார் பாடல்கள் பரம்பரை பரம்பரையாக கையழிக்கபடுவதாக இருந்தது. எழுதியவர்களின் பெயர்கள் இருக்காது. மேலும் இலக்கண வரையறைகள் இல்லாதது. பேச்சு வழக்கில் இந்த பாடல்கள் அமைந்திருக்கும்.

இலங்கையை பொறுத்த வரையில் தாலாட்டு பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், வயற்பாடல்கள், கடற்கரை பாடல்கள், தோட்டப்பாடல்கள், காதல் பாடல்கள் எனவும் பலவகையான பாடல்கள் பல்வேறு வகையான களங்களை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றன.

இந்த பாடல்கள் நிறைந்த பொருளும் ஓசை சிறப்பும் உடையவையாக காணப்படுகின்றது.

கலை வடிவம்

இந்த பாடல்கள் பிரதேசங்களுக்குரிய கலை வடிவங்களையும் வெளிப்படுத்துகின்றன. மலையக மக்களின் நாட்டாரியல் பாடல்கள் தமிழகத்தில் இருந்து வந்து தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் மக்களின் வேதனை மிகுந்த வாழ்வியலை தத்ரூபமாக எடுத்து காட்டுகின்றன.

பிற இலக்கிய வடிவங்களை விடவும் இவை மக்கள் மனதிற்கு நெருக்கமான கலை வடிவங்களாகும்.

இன்றும் இலங்கையின் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் இடம்பெறும் கூத்து, சிந்துநடை நாடகங்கள் இவை போன்ற கலைவடிவங்கள் நாட்டார் பாடல்களை அடிப்படையாக கொண்டு உருவானவையே.

இந்த நாட்டார் பாடல்கள் அம்மக்களின் முழுமையான வாழ்வியலை வெளிக்கொணர்வதாக அமைகிறது.

மக்களின் வாழ்வியல்

“ஆலையிலே சோலையிலே ஆலங்காடி சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகி அடிக்க பாலாறு….” என்ற பாடல் வரிகளானது அந்த மக்களின் பாரம்பரிய விளையாட்டான கிட்டிப்புள்ளை கண்முன்னே நிறுத்துகிறது.

அவர்களது தொழில்களை வெளிப்படுத்துகின்ற பாடல்களான “அரிவு வெட்டல் பாடல்” உழவு தொழில் செய்யும் மக்களின் வாழ்வியலை புலப்படுத்துகிறது.

மற்றும் “ஏலேலோ ஐலசா ஏலேலோ” போன்ற பாடல் வரிகள் மீனவ சமுதாய வாழ்வியலை இலகுவாகவும் இசையோடும் வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மக்களின் வாழ்வியல் நாட்டார் பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது.

முடிவுரை

இன்று எத்தனையோ மாற்றங்களை நாம் கண்டிருக்கலாம் பல வகையான பாடல்கள் இன்று உருவாகியிருக்கலாம். ஆனால் குழந்தை பராயத்தில் தாய் பாடுகின்ற தாலாட்டு அதற்கு நிகரான உணர்வை எதனாலும் தரமுடியாது அது போன்ற இந்த நாட்டார் பாடல்கள் ஒரு பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

காலமாற்றங்கள் இவற்றை மறக்கடிக்க செய்தாலும் இவற்றின் அருமை எப்போதும் மங்காது இவற்றை நினைவில் கொண்டு எம் இனம் போலவும் மொழி போலவும் இப்பாடல்களையும் அழியாது காக்க வேண்டும்.

You May Also Like:

சுத்தம் பேணி சுகமாய் வாழ்வோம் கட்டுரை

கல்வி வளர்ச்சி கட்டுரை