இந்த பதிவில் “தைப்பூசம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
தமிழர்கள் பாரம்பரியமாக பல விழாக்களை கொண்டாடுவது மரபாகும் அவற்றுள் தைப்பூசமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
Table of Contents
தைப்பூசம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தைப்பூசத்தின் வரலாறு
- தைப்பூசத்தின் சிறப்புகள்
- தைப்பூச விரத முறை
- தைப்பூச விரத பலன்கள்
- முடிவுரை
முன்னுரை
தமிழர்கள் பாரம்பரிய திருவிழாக்களாக பலவற்றை காலம் காலமாக கொண்டாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வகையில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவில் ஒன்றாக தைப்பூசம் காணப்படுகின்றது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசமானது கொண்டாடப்பட்டது. இது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. “பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த” என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
இது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். முருகனுக்கு உகந்த தினம் தைப்பூச தினம் எனக் கூறுவர். இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
இந்தியா மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் தைப்பூசம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தைப்பூசத்தின் வரலாறு
சிவபெருமான் அவர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன்⸴ தாரகாசுரன்⸴ சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத வரங்களைப் பெற்றனர். இதனால் இவர்கள் தேவர்களைச் சிறை பிடித்தனர்.
தேவர்கள் இவர்களுக்கு அஞ்சி வாழ்ந்தனர். தேவர்கள் தங்களது இந்த சூழ்நிலையை மகாதேவரிடம் தெரிவித்து தங்களைக் காக்கும்படி வேண்டினர். அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக் கண்களைத் திறந்ததும் தீப்பிழம்புகள் உருவாக்கினார்.
இந்த ஆறு தீப்பிழம்புகள் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். கார்த்திகைப் பெண்கள் ஆறு குழந்தைகளுக்கும் போர்ப் பயிற்சிகளை வழங்கினார். பின்பு ஒருநாள் அன்னை பார்வதிதேவி வந்து தனது புத்திரர்களை ஒருசேர அழைக்க அறுவரும் இணைந்து ஒருவராக மாறினார்.
ஆறு குழந்தைகளின் சக்தியும் ஆற்றலும் ஒருங்கிணைந்து தோன்றிய ஒருவனாக விளங்கிய முருகப்பெருமான் பல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.
அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களது அழிவு காலம் வந்தபோது பழனியில் ஆண்டிக் கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேல் கொடுத்தார் அன்னை பார்வதி. அவ்வாறு ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூசம் ஆகும். அந்த ஞானவேல் கொண்ட கந்தன் அசுரர்களை வதம் புரிந்து தேவர்களைக் காத்து அருளினார்.
தைப்பூசத்தின் சிறப்புகள்
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம் உண்டு. முருகப்பெருமான் தமிழ் கடவுளாவர். முருகன் என்றால் அழகு என்று பொருள். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தைப்பூச நாளாகும்
இந்நாளில்தான் நடராஜரை ராணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தார். சிவன் கோயிலில் தைப்பூசத்திற்கு என சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. தைப்பூசத்தன்று முருக வழிபாடு மிகுந்த பலன் தரும்.
தைப்பூச விரத முறை
தைப்பூசம் அன்று காலையில் எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீறு அணிந்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
வீட்டில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு குறிப்பாக முருகப்பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி கவசம்⸴ கந்தர் அலங்காரம்⸴ கந்தர் அனுபூதி⸴ திருமுருகாற்றுப்படை⸴ திருப்புகழ் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்.
காலை மற்றும் மதியம் ஆகிய இரு வேளைகள் மட்டும் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
தைப்பூச விரத பலன்கள்
இந்நாளில் வழிபாடு செய்பவர்களுக்கு பசிப்பிணி அற்ற நோயற்ற ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
தைப்பூச நாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும் மாந்திரீகம் பில்லி சூனியம் ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது.
வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறுவதற்கு தைப்பூசம் விரதம் பயனளிக்கும்.
முடிவுரை
இறைவழிபாடு⸴ விரதம் என்பவை நம்மை ஒழுக்கம் உடையவர்களாகவும்⸴ நற்பலனை நமக்கு அளிப்பவையாகவும் உள்ளன. எனவே நாம் விரதங்களை புனிதமாகவும்⸴ பக்தியுடனும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் பெறுவோமாக.
You May Also Like :