திடக்கழிவு மேலாண்மை கட்டுரை

thidakazhivu melanmai katturai in tamil

இந்த பதிவில் சூழல் ஆரோக்கியத்திற்கு உதவும் “திடக்கழிவு மேலாண்மை கட்டுரை” பதிவை காணலாம்.

திடக்கழிவு மேலாண்மையானது தனிநபரிற்கும் நாட்டிற்கும் பல்வேறு சிறந்த விளைவுகளை பெற்றுத்தருகின்றன.

திடக்கழிவு மேலாண்மை கட்டுரை

திடக்கழிவு மேலாண்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • திடக்கழிவு அறிமுகம்
  • திடக்கழிவுகளின் வகைகள்
  • திடக்கழிவை மேலாண்மை செய்தல்
  • திடக்கழிவு மேலாண்மையின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகமானது மற்றைய கோள்களில் இல்லாத பல்வகை வளங்களை இயற்கையின் கொடைகளாகப் பெற்றுள்ளது. மனிதன் வாழ்வதற்குரிய சகல சிறப்பம்சங்களும் இப்பூமியிலே நிறைந்துள்ளன.

ஆனால் அதிகரித்த கைத்தொழில் வளர்ச்சியாலும் அதன் விளைவாக எழுந்த சூழல் மாசடைதலாலும் இயற்கைவளங்கள் அழிவுற்று பூமியின் நிலப்பரப்பெங்கும் அசுத்தமாக மாறிவருகின்றது.

அதிகரித்த சனத்தொகைப் பெருக்கத்தினால் எத்திசையை நோக்கினாலும் குப்பை கூழங்களும், அழுக்குகளும் கொட்டிக் கிடக்கின்றன. இதற்கு ஆகச்சிறந்த தீர்வாக காணப்படுகின்ற திடக்கழிவு மேலாண்மை பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும்.

திடக்கழிவு மூலங்கள்

எங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறுபட்ட திடக்கழிவுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வாறான கழிவுகள் எங்கெல்லாம் இருந்து கிடைகின்றனவோ அவ்வாறான இடங்கள் திடக்கழிவு மூலங்கள் எனப்படுகின்றன.

வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ரப்பர்கள், கடதாசி போன்றன அவற்றின் பயன்பாடு முடிவுற்றதும் கழிவுகளாக வெறுமனே கொட்டப்படுகின்றன.

இவ்வாறான திடக்கழிவுகள் வீதிகளின் இருமருங்குகளிலும், வெட்ட வெளிகளிலும், வெற்றுக் காணிகளிலும் குப்பை மேடுகளாக காட்சி தருவதைக் காணலாம். மேலும் விவசாயகழிவுகள் மீளப்பயன்படுத்தாமல் வெறுமனே கொட்டப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

திடக்கழிவுகளின் வகைகள்

திடக்கழிவுகளானவை பிரதானமாக அவை நுண்ணங்களினால் அழிவுறும் தன்மைக்கேற்ப இருவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. சிதைவடையக் கூடியன, சிதைவடைய முடியாதவை ஆகியவையே அவையாகும்.

இறந்த விலங்குகளின் உடல்கள், தாவரக்கழிவுகள், விவசாய மற்றும் காய்கறி கழிவுகள் போன்றன நுண்ணங்கிகளினால் சிதைவடையக் கூடியவையாகக் காணப்படுகின்றன.

பிளாஸ்ரிக் கழிவுகள், பொலித்தீன், ரப்பர் மற்றும் டயர்கள், கண்ணாடிப் பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கல உலோகப்பொருட்கள் போன்றன சிதைவடைய முடியாதவையாகும்.

இதனைத் தவிர மின்சாதன பொருட்கள், சீமெந்து கட்டக் கழிவுகள் போன்றனவும் காணப்படுகின்றன.

திடக்கழிவை மேலாண்மை செய்தல்

திடக்கழிவு மேலாண்மை எனப்படுவது திடக்கழிவுகளை சேகரித்து அவற்றினை மாற்றத்திற்கு உட்படுத்தல் மற்றும் மீளப் பயன்படுத்தல் போன்றனவாகும்.

திடக்கழிவுப் பொருட்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கபட்டு ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. பொதுவாக திடக்கழிவுகள் சேகரிக்கும் போது சிதையக் கூடியவை மற்றும் சிதையாத பொருட்களை தனித்தனியாக சேகரிப்பதற்கு மக்கள் அறிவுறுத்தப்படுவர்.

அவ்வாறில்லாமல் ஒன்றாகச் சேர்க்கப்பட்ட பொருட்கள் அவற்றின் வகைகளிற்கேற்ப தனித்தனியாக பிரிக்கப்படும்.

சிதையக்கூடிய பொருட்கள் திறந்த வெளிமுறை மூலம் நுண்ணங்கிகளினால் உக்கச் செய்யப்படுவதோடு, நிலத்தில் புதைத்தும் பாதுகாக்கப்படுகின்றன.

கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள் மீள்சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு சீமேந்து மற்றும் கட்டட கழிவுகள் தூளாக்கப்பட்டு மீள்பயன்பாட்டிற்கு உட்படுகின்றன.

திடக்கழிவு மேலாண்மையின் பயன்கள்

திடக்கழிவுகள் மேலாண்மை செய்யப்படும் போது அதிகப்படியான குப்பை கூழங்கள் சேர்வது தடுக்கப்படுகின்றது. பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் வகைகள் மீள்பயன்பாட்டிற்கு உட்படும் போது சூழல் மாசடைதல் தவிர்க்கப்படுகின்றது.

குப்பை கூழங்கள் சேர்வதனால் மனிதர்களிற்கு உண்டாகும் நோய் நொடிகள் தவிர்க்கப்படுகின்றன.

உக்கக்கூடிய திடக்கழிவுகளை பயன்படுத்தி சக்திவலுக்களை உருவாக்க முடியும். தாவரக்கழிவுகள் மூலம் உருவாக்கபடும் சேதனப் பசளைகளை பயன்படுத்தி உயிர்வாயு தயாரிக்கும் முறையும் காணப்படுகின்றது.

முடிவுரை

திடக்கழிவு மேலாண்மையானது தனிநபரிற்கும் நாட்டிற்கும் பல்வேறு சிறந்த விளைவுகளை பெற்றுத்தருகின்றன.

அதனால் மக்கள் அனைவரும் திடக்கழிவுகளை சரியான விதத்தில் மேலாண்மை செய்வது அவசியமாகும்.

You May Also Like :
நெகிழி இல்லா உலகம் கட்டுரை
நெகிழியின் தீமைகள் கட்டுரை