தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை

Tamil Mozhi Valarchi Katturai In Tamil

இந்த பதிவில் “தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

மனித நாகரீகங்கள் தோன்ற முன்னரே தமிழர்கள் மிகச்சிறந்த ஒரு மொழியுடனான கலாச்சாரத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்களின் வாழ்வோடு இணைந்து தமிழ் மொழியும் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. முன்தோன்றிய மூத்த மொழி
  3. செம்மொழி ஆகிய பெருமை
  4. மொழி ஆகிய உணர்வு
  5. தலை சிறந்த இலக்கிய பெருமை
  6. இணையத்தில் தமிழ்
  7. முடிவுரை

முன்னுரை

“தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் எம் மொழி மீது நாம் கொண்ட அன்பை அழகாக வெளிப்படுத்துகிறது.

உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் அவை தமிழுக்கு நிகராக முடியாது. பண்டை பெரும் புகழும் உலகமே வியந்து பார்த்த கலாச்சார விழுமியங்களும் பார்போற்றும் கலை நயமும் உடையது நம் தமிழ்மொழி.

மற்றவர்களுக்கு மொழி வெறும் தொடர்பாடலுக்காக பயன்படலாம் ஆனால் தமிழ் மொழி உணர்வோடு கலந்தது. தாயாகவும் தெய்வமாகவும் போற்றப்படக்கூடிய ஒரே மொழி உலகத்தில் தமிழ் என்றே கூறலாம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்க காலம் முதல் இன்று வரை தமிழ் நீண்ட நெடிய வளர்ச்சியை கொண்டிருக்கிறது அவை தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

முன்தோன்றிய மூத்த மொழி

உலகளவில் 6000 மொழிகள் தோன்றியதாகவும் அதில் 2700 மொழிகள் மட்டுமே இன்றளவும் இருப்பதாக ரஸ்ய நாட்டு இதழான “பிராகா” குறிப்பிடுகிறது. இந்தியாவில் காணப்படுகின்ற எல்லா மொழிகளை காட்டிலும் “தமிழ்” தொன்மையான மொழியாக சொல்லப்படுகிறது.

கி.மு 3 ஆம் நூற்றாண்டு தமிழ் மொழிக்குரிய இலக்கிய வரலாற்று காலமான சங்ககாலம் துவங்குகிறது. 4ம் நுற்றாண்டில் பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தோன்றியிருந்தது.

மனித நாகரீகங்கள் தோன்ற முன்னரே தமிழர்கள் மிகச்சிறந்த ஒரு மொழியுடனான கலாச்சாரத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வோடு இணைந்து தமிழ் மொழியும் வளர்ச்சி கண்டது.

தமிழ் ஏறக்குறைய 4400 ஆண்டுகள் பழமையானது என்று மொழியியல் ஆராட்சியாளர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.

செம்மொழி ஆகிய பெருமை

தமிழ் மொழி “செம்மொழி” என்ற பெருமையை 2004 இல் பெற்று கொண்டது. “செம்மொழி” எனப்படுவது தொன்மை, தனித்தன்மை, பொதுமை பண்பு, நடுநிலமை, தாய்மை தன்மை, கலைபண்பாட்டு தன்மை, தனித்து இயங்கும் தன்மை, இலக்கண இலக்கிய வளம், கலைநயம், உயர்ந்த சிந்தனை, மொழிகோட்பாடு என்கின்ற 11 பண்புகளையும் கொண்டிருக்கின்ற மொழியே ஆகும்.

இந்த எல்லா பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட மொழியாக தமிழ் மொழி காணப்படுவதனால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு பெருமை மிக்க தருணம் ஆகும்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் இதனை விட ஒரு கௌரவிப்பு வேறெதுவும் தேவையில்லை.

மொழி ஆகிய உணர்வு

தமிழர்கள் தமிழை ஒரு மொழியாக பார்க்கவில்லை தமது தாயாகவும் தமது அடையாளமாகவும் பெருமையாகவும் தமது தேசமாகவும் கருதி இதனை அரும்பாடு பட்டு வளர்த்தனர்.

தமிழர்களை போல மொழிப்பற்று உடையவர்களை வேறெங்கும் பார்க்க முடியாது. “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என வாழ்ந்தவர்கள் எமது முன்னோர்கள்.

மிகுந்த பற்றோடு தமது உயிரையும் தமிழுக்காக ஈந்தழித்த வரலாறுகள் உள்ளது. அவ்வாறு உணர்வுகளோடு கலந்த மொழியாக தமிழ் விளங்குகிறது.

தலைசிறந்த இலக்கிய பெருமை

காலம் காலமாக எழுந்த இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் தமிழ் மொழியின் பெருமையையும் உலகத்தாருக்கு எடுத்து இயம்புகின்றன.

உலகமே போற்றுகின்ற திருக்குறள் எனும் உலகப்பொதுமறை திருவள்ளுவரால் இயற்றப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடையது.

ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள், தேவார திருமுறைகள், திவ்யபிரபந்தங்கள், கம்பராமாயணம மற்றும் உலா பரணி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் என பல்வேறுபட்ட இலக்கிய வடிவங்கள் தமிழ் மொழியை பெருமைப்படுத்துகின்றன.

பின்பு வந்த புதுக்கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவகை இலக்கிய வடிவங்கள் தமிழில் எழுந்து பெருமை சேர்த்தன.

வள்ளுவன் போல் கம்பனை போல் பாரதியை போல் பல்லாயிரம் இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் மொழியை வளர்த்த பெருமை உடையவர்கள்.

இணையத்தில் தமிழ்

இன்றைய கால கட்டத்தில் பிற மொழிகளின் ஆதிக்கம் சற்று தலை தூக்கினாலும் தமிழன் தனித்துவம் அழிந்து போகாது.

ஆங்கில மோகம், வடமொழியின் ஆதிக்கம் தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினாலும் இன்று இணையத்திலும் தமிழ் தன் தடத்தை பதித்திருக்கிறது. கணணிகள் நவீன ஊடகங்கள் பலவற்றிலும் தமிழியல் ஆக்கங்கள் தனி சிறப்போடு வெளிவருகின்றன.

ஏராளமான தமிழ் இலக்கிய படைப்புக்கள் மற்றும் திரைப்படங்கள் என்பன இணையத்தில் இன்று வெளிவருகின்றன. இவை தமிழ்மொழியின் வளர்ச்சியை காட்டுகின்றன.

முடிவுரை

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்று பறைசாற்றும் வரிகளை போல தமிழ் என்றும் மங்காது அதன் பெருமைகள் என்றும் குன்றாது.

பிறநாட்டவராலும் வியந்து போற்றப்படும் பல பெருமைகளையும் தனித்துவமான அடையாளங்களையும் தமிழ் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல இனிதாவது எங்கும் காணோம்” என்கிறார் பாரதியார். அது போல எமது மொழியின் பெருமையை நாம் அறிந்து அதன் மேன்மைக்காக ஒற்றுமையாக உழைக்க வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கிறது.

You May Also Like :

உழைப்பே உயர்வு தரும் கட்டுரை

பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்