Table of Contents
அறிமுகம்
நம் வீட்டில் ஒரு சுப காரியத்தினை நடத்த வேண்டும் என்றால் அந்த நாள் நல்ல நாளா என்பதை நாட்காட்டியில் பார்த்துவிட்டுத்தான் சுப நிகழ்ச்சியை வைக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வோம்.
இந்தப் பழக்கம் பொதுவாகப் பலபேருக்கு உண்டு. அப்படி அந்த நாட்காட்டியில் கரிநாள் என்று இருந்தால் அந்த நாட்களில் எந்தவொரு நல்ல காரியமும் நடத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சந்திரனை வைத்து சந்திராஸ்டமம் எப்படி கணக்கிடப்படுகின்றதோ அதேபோல் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கரிநாள் கணக்கிடப்படுகின்றது. சந்திராஸ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதை மற்றும் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பதுபோல் கரிநாளில் சுப காரியங்களைச் செய்வதில்லை.
கரிநாள் என்பது நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கையாகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உட்பட எந்த நல்ல காரியமும் கரிநாளில் செய்வதில்லை.
எனினும் தெய்வம் சம்மந்தப்பட்ட கோமங்கள், யாகங்கள், பூஜைகள் இவைகள் எல்லாம் இந்தத் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கரிநாள் என்றால் என்ன
கரிநாள் என்றால் என்ன என்பதை சுரக்கமாகக் கூறினால் சூரியனின் தீட்சண்யம் (கதிர்வீச்சு) அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே ஆகும்.
கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். கரிநாள் அன்று சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியைவிட அதிகமாக இருக்கும்.
கரிநாள் என்பது அஸ்டமி, நவமி போன்றோ அல்லது பரணி, கிருத்திகை போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல.
கரிநாள் கணக்கிடப்படும் முறை
தமிழ்நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்.
தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. சித்திரையில் சூரியன் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கத் தொடங்கி பங்குனியில் மீன ராசியில் தனது சுற்றினை முடிக்கின்றார்.
12 ராசிகளில் சூரியன் கடந்து செல்வதை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுவதால் சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை வைத்து கரிநாள் கணக்கிடப்படுகின்றன.
இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாள்களாகும். இவ்வாறு நமது நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ்மாத நாட்களில் மாறுபடாது. எல்லா வருடமும் ஒரே தேதியில்தான் கரிநாட்கள் வரும். அதாவது
- தை மாதம் – 1,2,3,11,17
- மாசி மாதம் – 15,16,17
- பங்குனி – 6,15,19
- சித்திரை – 6,15
- வைகாசி – 7,16,7
- ஆனி – 1,6
- ஆடி – 2,10,20
- ஆவணி – 2,9,28
- புரட்டாசி – 16, 29
- ஐப்பசி – 6,20
- கார்த்திகை – 1,10,17
- மார்கழி – 6,9,11
இவை கரிநாட்களாகும்.
இது அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட நாட்களே அன்றி ஜோதிட ரீதியாக கடைப்பிடித்துவரும் விடயம் அல்ல.
இந்நாளில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதனால் உடலிலுள்ள அனைத்துச் சுரப்பிகளும் ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று அதிகமாகத் தூண்டப்படும். இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்புண்டு எனக் கூறப்படுகின்றது.
You May Also Like : |
---|
மோட்சம் என்றால் என்ன |
ஆவணி அவிட்டம் என்றால் என்ன |