ஒளிச்சேர்க்கை என்றால் என்ன

ஒளித்தொகுப்பு என்றால் என்ன

இந்த பதிவில் தாவரங்களின் உணவு தயாரிக்கும் முறையான “ஒளிச்சேர்க்கை என்றால் என்ன” என்பது பற்றி பார்க்கலாம்.

ஒளிச்சேர்க்கை விளக்கம்

இயற்கையின் மிக சிறந்த படைப்புகளுள் ஒன்றான தாவரங்கள் தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்துக் கொள்ளும் தற்போசணை அங்கிகளாக காணப்படுகின்றன.

இவை உணவை தாமே உற்பத்தி செய்யும் செயன்முறை ஒளிச்சேர்க்கை என எனப்படும். இது ஒளித்தொகுப்பு, உணவுத் தொகுப்பு, உணவுத் தொழிற்சாலை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கில மொழியில் Photosynthesis என அழைக்கின்றனர்.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டு, நீர் என்பவற்றை மூலப்பொருட்களாக கொண்டு பச்சைத் தாவரங்களின் கலங்களிலுள்ள பச்சையவுருமணிகளில் நடைபெறுகின்ற உணவு தொகுக்கும்  மற்றும் ஒட்சிசன் வாயு தொகுக்கும் செயல்முறையானது “ஒளிச்சேர்க்கை” என அழைக்கப்படும்.

ஒளிச்சேர்க்கை நடைபெறும் தாவரங்களின் பகுதிகள்

  • இலைகள் (முதன்மை பகுதி)
  • பசுமையான தண்டுகள்
  • மலர் மொட்டுகள்

ஒளிச்சேர்க்கை நிறமிகள்

தாவர ஒளிச்சேர்க்கையில் இடம்பெறுகின்ற நிறமிகளை ஒளிச்சேர்க்கை நிறமிகள் என அழைக்கின்றனர். இவை முதன்மை நிறமிகள், துணை நிறமிகள் என இரு வகைப்படும்.

முதன்மை நிறமிகளுள் பச்சை-a  முக்கியமானது. இது சூரிய ஆற்றலை அதிகமாக கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது ஆகும். சூரிய ஆற்றலை குளுக்கோஸாக மாற்றக்கூடியது. இது வினைமையம் எனவும் அழைக்கப்படுகிறது.

துணை நிறமிகள் பச்சையம்-b மற்றும் கரோட்டினைட்டு என்பவற்றை கொண்டுள்ளது. இவை சூரிய ஆற்றலை கவர்ந்து முதன்மை நிறமிக்கு அனுப்ப கூடியது. இது ஏற்பி நிறமி, சேர்க்கை மையம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒளிச்சேர்க்கையின் விளைபொருள்கள்

ஒளிச்சேர்க்கையின் பிரதான விளைப்பொருளாக குளுக்கோசும் பக்க விளைபொருளாக ஒட்சிசனும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இக்குளுக்கோசானது இலைகளில் தற்காலிகமாக மாப்பொருளாக சேமிக்கப்பட்டு பின்னர் இவற்றின் ஒரு பகுதி சுக்குரோசு வடிவத்திற்கு மாற்றப்பட்டு உரிய இழையங்களினூடாக  தாவரத்தின் ஏனைய பகுதிகளை சென்றடைந்து, சேமிப்பு இழையங்களை நோக்கி சென்று மீண்டும் அங்கு மாப்பொருளாக மாற்றம் பெறுகின்றன. இவையே உணவாக பயன்படுகின்றது.

ஒளிச்சேர்க்கையின் பக்க விளைப்பொருளான ஒட்சிசன் இலைவாய்களினூடாக வளிமண்டலத்தை பரவல் செயற்பாடுகளின் மூலம் வந்தடைகின்றது. ஒட்சிசன் எம் சுவாசத்திற்கும் மற்றும் பொருட்களின்  தகனத்திற்கும் பயன்படுகிறது.

ஒளிச்சேர்க்கை பாதிக்கும் காரணிகள்

காபனீரொக்சைட்டின் செறிவு

ஒளிச்சேர்க்கை சிறந்த முறையில் இடம்பெற காபனீரொக்சைட்டின் செறிவு இன்றியமையாததாக காணப்படுகிறது. அதாவது அதிக வெப்பமான காலங்களில் இலைகள் ஆவியீர்ப்பை குறைப்பதற்காக இலைவாய்களை மூடிக் கொள்வதனால் காபனீரொக்சைட்டு உள்செல்ல முடியாது தடைப்பட்டு ஒளிச்சேர்க்கை குறைவடைகின்றது.

ஒளி

சீரான சூரிய ஒளி இன்மையினால் ஒளிச்சேர்க்கை நடவடிக்கைகள் குறைவடைகின்றது.

வெப்பநிலை

அதிகப்படியான வெப்பநிலை காரணமாக இலை வாய்கள் மூடிக்கொள்வதனால் ஒளிச்சேர்க்கை தடைப்படுகிறது.

நீர்

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை புரிவதற்கான போதியளவு நீர் பற்றாக்குறை காரணமாக ஒளிச்சேர்க்கை தடைப்படுகிறது.

மாசுப்படுத்திகள் அல்லது தடுப்பான்கள்

தாவர இலைவாய்களை தூசுக்கள் மற்றும் மண் அடைப்பதால் ஒளிச்சேர்க்கை தடைப்படுகிறது.

ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம்

தாவரங்களின் ஒளிச்சேர்க்கையானது புவியில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களின் நிலவுகைக்கு, அதாவது உணவு தேவையில்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபற்றுகிறது. ஒளிச்சேர்க்கை செயற்கையாக செய்ய இயலாத விடயமாகும்.

ஒளிச்சேர்க்கையின் போது சூழல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் வாயுவான காபனீரொக்சைட்டு உறிஞ்சப்பட்டு சுவாசத்திற்கும் தகனத்திற்கும் தேவையான ஒட்சிசன் வாயு வெளிவிடப்படுவதனால், சூழலில் வாயுக்களின் சமநிலை பேணப்படுகிறது.

மண்ணைப் பாதுகாக்கின்றது. அதாவது தாவரங்களின் கரிமப் பொருட்களின் சிதைவு (முக்கியமாக தாவரங்கள்) விவசாயத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண் பெற அனுமதிக்கிறது.

கேள்வி பதில்கள்

1. ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி எது?

இலைகள்

2. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு?

O2 (ஆக்சிஜன்)

You May Also Like :
மலைகளின் அரசி என்றால் என்ன
அமாவாசை என்றால் என்ன