இறைவன் மனிதனுக்கு அளித்த பெறுமதிமிக்க பரிசு இயற்கையாகும். இயற்கையே மனிதனின் மூச்சு. இயற்கையின்றி மனித குலம் வாழ இயலாது. ஆனால் சுயனலமுடைய மனித குலம் இயற்கையை அழித்து வருகின்றது.
இதனால் அழியப்போவது இயற்கை மட்டுல்ல மனித குலமும்தான் என்பதை உணர வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது என்பது அனைவரதும் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து இயற்கையைப் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
Table of Contents
இயற்கை என்றால் என்ன
இயற்கை என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் ஆகும். அதாவது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படாதவை ஆகும்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி நட்சத்திரங்களும், ஐம்பூதங்களும், கோள்கள் முதல் பால்வெளி மண்டலம் வரை அதுமட்டுமில்லாமல் ஓரறிவு தாவரமாகிய உயிரினம் முதல், ஆறறிவு கொண்ட மனிதன் வரை பல்வேறு எண்ணிலடங்கா எண்ணற்ற பல்வகை உயிரினங்கள் அனைத்தும் இயற்கை ஆகும்.
இயற்கை மருத்துவம்
யுனானி, ஆயுர்வேதம், சித்தா மருத்துவம், ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் இயற்கை மருத்துவமும் ஒன்றாகும். இயற்கை மருத்துவம் நமக்கு நாமே செய்து கொள்வதாகும்.
இயற்கை மருத்துவத்தை அன்றாட வாழ்வியல் நெறிகளாகவே நாம் பார்க்க முடியும். அதாவது மருந்தில்லா மருத்துவமாக இயற்கை மருத்துவத்தைப் பார்க்கலாம். மருந்து என்று எதையும் எடுத்துக் கொள்ளாமல் உணவின் மூலம் எடுத்துக் கொள்வது ஆகும்.
இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை இயற்கையின் நல்ல விளைவுகளை மண்ணினுள்ளும், பயிரிலும் ஏற்படுத்தும். இயற்கை விவசாயம் மூலம் இலைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து தவிர ஏனைய சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கின்றன.
இயற்கை விவசாயத்தால் மண்ணின் அமைப்புப் பாதுகாக்கப்பட்டு, உற்பத்தித்திறன் கூடுகின்றது. மண்புழு மற்றும் நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி மண்ணை செழிப்பாக்கும்.
மண்ணில் மக்கு அதிகரித்து நிலம் பொல பொலப்பதால் காற்றும் நீரும் வேகமாக பூமிக்குள் ஊடுருவுகிறது. நிலத்தின் ஈரப்பதம் நீண்ட நாட்களுக்கு தக்க வைக்கப்படுகிறது.
இயற்கை விவசாய நிலத்தில் வெப்பநிலை சீராக உள்ளது. பயிரைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதால் கட்டுப்படுத்திவிடலாம்.
இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் ருசியாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். இயற்கை விவசாய முறையில் குப்பை கூலம், சண்டி சருகு, இலை, தழை போன்றவை உரமாக மாற்றப்படுவதால் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதுகாக்கப்படுகின்றது.
இயற்கை விவசாயத்தில் வேளாண்மை உற்பத்தி செலவு குறைவதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
இயற்கை வளங்கள்
ஒரு நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்களாகும். நாம் வாழும் பூமியானது காடு, நீர், கனிம வளங்கள், மலைகள், புல்வெளிகள் போன்ற எனண்ணற்ற இயற்கை வளங்களால் நிறைந்தவை ஆகும்.
இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை, பாசனத்திற்கான ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றை அளிப்பதுடன் மின்சக்தி, அதிக கனிமங்கள், காடுகள் மற்றும் பல்வேறு மண்வளங்கள் போன்றவற்றை வழங்குகின்றது.
இத்தகைய இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் ஒவ்வொரு நாடும் நாட்டு மக்களும் செழிப்புடனும், சிறப்புடனும் வாழ முடியும்.
Read more: இயற்கை வளம் காப்போம் கட்டுரை