அளபெடையென்பது சார்பெழுத்துக்களின் ஒரு வகையாகும். எழுத்தின் இயல்பான ஒலி மிகுந்த மாத்திரையை நீட்டித்தலே அளபெடை எனப்படுகின்றது.
அதாவது பாடல்களை இசைக்கும் போதும், பிறரை விழிக்கும் போதும், முறையீடு செய்யும் போதும், துன்பத்தினால் புலம்பும் போதும், பண்டங்களைக் கூவி விற்கும் போதும் அளபடை ஏற்படும்.
அன்றாட வாழ்விலேயே அளபெடுக்கும் பல உதாரணங்களைக் கூறலாம். கோயில் தேவாரம் பாடுபவர் பொன்னார் மேனியனேஎஎ… என நீட்டி முழங்குவதும்,
வீதியில் தயிர் விற்கும் பெண் தயிர்ஒஒஒ தயிறு எனக்கூவி விற்பதும் அளபெடையேயாகும்.
Table of Contents
அளபெடை என்றால் என்ன
அளபெடை என்பதனை அளவு+ எடை என பிரிக்கலாம். அளபு என்கின்ற போது அளவு எனவும், எடை என்பதற்கு எடுத்தல் எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது.
அதாவது எழுத்துக்கள் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபடை எனப்படுகின்றது.
மாத்திரை என்பது எழுத்துக்கள் ஒலிக்கும் காலவளவாகும். அதாவது ஒரு கைக்கு சொடக்கு நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரம் தான் மாத்திரை.
அளபெடையானது
- ஒற்றளபெடை
- உயிரளபெடை
என வகைப்படுத்தப்படுகிறது.
ஒற்றளபெடை என்றால் என்ன
ஒற்றளபெடை செய்யுளில் மட்டுமே வரும். உரைநடையில் எழுதுவது இல்லை. ஒற்றளபடை என்பது செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்களான ங், ஞ், ண், த், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும் ஆயுத எழுத்தும் அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு – எங்ங் கிறைவன், அஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்
உயிரளபெடை என்றால் என்ன
ஒரு செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய உயிர்நெட்டெழுத்துக்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் தன்னுடைய அளவிலிருந்து நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும்.
உயிர் எழுத்துக்கள் மொழிக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் அளபெடுக்கும்.
- “ஓஒதல் வேண்டும்” – மொழிக்கு முதலிலும்
- “உராஆர்க்கு உறுநோய்” – மொழி இடையிலும்
- “நல்ல படாஅ பறை” – மொழிக்கு இறுதியிலும் அளபெடுத்துள்ளது.
உயிரளபெடையைத் தெளிவாக குறிப்பதற்கு நெடில் எழுத்துக்களுக்கு இனமாகக் குறில் எழுத்துக்கள் அதனுடைய பக்கத்தில் வரும். (அ-ஆ, ஈ-இ, ஊ-உ, ஏ-எ, ஐ-இ, ஓ-ஒ, ஒள-உ)
உயிரளபெடையானது
- இயற்கை அளபெடை
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
என நான்கு வகைப்படும்.
இயற்கை அளபெடை
இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்துநின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர்.
மரூஉ. ஒரூஉ, ஆடூஉ, மகடூஉ, குரீஇ குழூஉக்குறி, குளாஅம்பல் பேரூர்கிழாஅன்
இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடைஎனப்படுகின்றன
செய்யுளிசை அளபெடை
செய்யுளின் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுத்தல் செய்யுளிசை அளபெடை என்பர். இதனை இசைநிறை அளபெடை எனவும் அழைப்பர். செய்யுளிசை அளபெடை ஆனது “அ” எனும் எழுத்தில் முடிவு பெறும்.
எடுத்துக்காட்டு – கடா அக்களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.
இன்னிசை அளபடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசையாக அளவெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.
எடுத்துக்காட்டு – கொடுப்பதூஉம் கெட்டார்க்கும் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
சொல்லிசை அளபெடை
சொல்லிசை அளபெடையென்பது செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் வினையெச்ச சொல்லாக திரிந்து அளபெடுத்து வருவதாகும்.
எடுத்துக்காட்டு- உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார். வரனசைஇ இன்னும் உளேன்
நசை – விருப்பம். நசைஇ – விரும்பி என்னும் பொருள் தருவதாக நசை என்னும் சொல் நசைஇ என்று அளபெடுத்து வந்துள்ளது. சொல்லிசை அளபெடை “இ” எனும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும்.
Read more: வெண்பாவின் வகைகள்