இந்த பதிவில் “விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை” பதிவை காணலாம்.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக விவசாய முறை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது.
அதிகரித்து வரும் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு இந்த நவீன தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன.
- விவசாயம் கட்டுரை
- Vivasayam Katturai In Tamil
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை
Table of Contents
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விவசாயத்தின் அவசியம்
- பண்டைய விவசாயம்
- நவீன விவசாயம்
- விவசாயத்தில் தொழில்நுட்பம்
- முடிவுரை
முன்னுரை
விவசாயத்தில் தொழில்நுட்பம் என்கின்ற கருப்பொருளானது இன்று அனைவராலும் அதிகமாக பேசப்படுகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.
ஒரு மனிதனிற்கு அடிப்படைத் தேவைகளாக விளங்குகின்ற உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிக அவசியமானது.
உணவு இல்லையேல் மனிதனில்லை எனும் நிலையில், அவ்வுணவை மனிதர்களிற்கு அள்ளித்தருவதில் முதன்மையான இடத்தை வகிப்பது விவசாயம்.
கடலுணவுகள், மாமிசம் போன்றவற்றை மனிதன் உட்கொண்ட போதிலும் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்களே முதன்மை உணவாகக் கொள்ளப்படுகின்றது.
இந்த கட்டுரையில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும் விவசாயம் அன்றும் இன்றும் பற்றி நோக்கலாம்.
விவசாயத்தின் அவசியம்
விவசாயத்தின் தேவை அதிகமாக உணரப்பட்டதால் அன்றுதொட்டு இன்றுவரை மனிதர்களால் சிறப்பிக்கப்படும் ஒன்றாகவே விவசாயம் காணப்படுகின்றது.
ஒரு மனிதனிற்கு அவன் இயங்குவதற்கு தேவையான சக்திகளை உருவாக்கும் சத்துக்களையும், கனியுப்புக்களையும் வாரி வழங்குவதில் தாவரவழி உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் கிழங்குவகைகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன.
கடலுணவுகள் மற்றும் மாமிசம் போன்றன உணவாகப் பயன்பட்ட போதும் அவற்றில் கொழுப்புச்சத்து அதிகமாகக் காணப்படுவதனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலிற்கு தீங்கை விளைவிக்கும்.
எனவே உடலிற்கு தீங்கற்ற தாவர உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதே விவசாயத்தின் மிகமுக்கிய பணியாகும்.
அத்தோடு தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பிரதானபங்கு வகிப்பது நெல் அரிசிச்சோறு. அந்த நெல்லை உற்பத்தி செய்யும் உழவுத் தொழில் இல்லையேல் உணவின்றி அல்லல்பட வேண்டிய நிலை உருவாகும்.
பண்டைய விவசாயம்
வரலாற்று மனிதன் வாழ்ந்ததாகக் கருதப்படும் அனைத்து நாகரீகங்களும் நதிக்கரைகளை அண்டியே அமையப்பெற்றமையானது, ஆதி மனிதர்கள் விவசாயத்தை வாழ்தாரமாகக் கொண்டு வாழ்ந்தமையை எடுத்துக் காட்டுகின்றது.
அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொண்டு தனக்குத் தேவையானதை தானே உற்பத்தி செய்து தன்னிறைவுப் பொருளாதாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்தார்கள்.
நதிக்கரை தவிர்ந்த ஏனைய மேட்டு நிலங்களில் வசித்தவர்கள் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து, மழை கிடைக்கும் காலங்களைக் கணக்கிட்டு அதற்கேற்றாற் போல விவசாயத்தை மேற்கொண்டார்கள்.
சில சமயங்களில் காலநிலைகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்ட போது அவர்களால் விவசாயத்தை தொடரமுடியாமல் போனது. எனவே பாரிய குளங்கள், அணைக்கட்டுகள் அமைத்து மழைநீரை சேகரித்து அதனைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொண்டார்கள்.
பண்டைய விவசாய நடவடிக்கைகளில் பெரும்பாலும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டதோடு கூட்டாக இணைந்து தமக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யும் முறையே காணப்பட்டது.
விவசாயத்தின் வளர்ச்சி
பண்டையகால விவசாயமுறைகள் அக்கால உணவுத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு போதுமானதான இருந்தபோதும், அதிகரித்துவரும் சனத்தொகைப் பெருக்கம் மற்றும் மக்களின் தேவைப்பாட்டிற்கு ஏற்றவாறு விவசாய முறைகளானவை படிப்படியாக மாற்றமடைந்து இன்று அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் அளவிற்கு இவ்வுலகம் முன்னேறியுள்ளது.
ஆரம்பத்தில் கால்நடைகளையும் பெருமளவு மனிதவலுவையும் பயன்படுத்தி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மனித உழைப்பு குறைவாகவும், இயந்திரப்பாவனை அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஆதிகாலத்தில் நெல் பயிர்ச்செய்கையின் போது மாடுகளில் கலப்பை பூட்டி வயலை உழுது, மனிதர்களைப் பயன்படுத்தி களை எடுத்தல், அறுவடை போன்றவற்றை மேற்கொண்டார்கள்.
தற்போது உழவு இயந்திரங்களில் கலப்பைகளைப் இணைத்து வயலை உழுதல், இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்தல் என தொழில்நுட்ப ரீதியிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயமானது இலகுவாகவும் விரைவாகவும் நடைபெறுகின்றது. பாரியளவில் விவசாயம் செய்ய முடிவதோடு அதனை வேறுநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யவும் முடிகின்றது.
இவ்வாறு விவசாயமானது படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று தொழில்நுட்பமயமாக மாறியுள்ளது.
விவசாயத்தில் தொழில்நுட்பம்
இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பல தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்பத்தால் உருவான உபகரணங்கள் மட்டுமின்றி அதி உச்ச கண்டுபிடிப்பாக விவசாயத்தின் அடிப்படை தேவைப்பாடுகளான மண், உரம் போன்றனவற்றின் பயன்பாடின்றி விவசாயம் மேற்கொள்ளும் முறைகள் கூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக அரேபியா நாடுகள், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலப்பரப்புக்கள் குறைவாகவுள்ள பிரதேசங்களில் நீரின் மீது விதைகளை மிதக்கவிட்டு நீரில் காணப்படும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி பயிர்களை வளரச் செய்யும் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
முடிவுரை
பண்டையகாலத்திலிருந்து வளர்ச்சியடைந்து வந்த விவசாயமானது இன்றைய நவீன வடிவத்தை எட்டியுள்ளது.
விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் தொடர்பான அறிவை அனைவரும் பெற்றுக் கொள்வதனூடாக விவசாய நடவடிக்கைகள் இலகுவான ஒன்றாக மாற்றமடைந்து. அழிந்து வரும் விவசாயம் மீள கட்டியெழுப்பப்பட உதவியாக இருக்கும்.
You May Also Like :