வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை

vallavanukku pullum aayudham katturai in tamil

இந்த பதிவில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை” பதிவை காணலாம்.

வலிமை மனிதர்களிற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. மற்றவர்களில் இருந்து தனித்துவமானவர்களாக எம்மைக் காட்டுவதோடு, மரியாதையையும் பெற்றுத்தரும்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வலிமை ஓர் ஆயுதம்
  3. வள்ளுவரின் கருத்து
  4. வலிமை தரும் சிறப்பு
  5. இயலாமை என்று எதுவுமில்லை
  6. முடிவுரை

முன்னுரை

பழமொழிகள் விளங்கிக் கொள்ள இலகுவாகவும், வாழ்வியல் பண்புகளோடு தொடர்படையனவாகவும், மக்களின் அன்றாட பேச்சு வழக்கோடு கலந்தனவாகவும் காணப்படுகின்றன.

அவற்றுள் ஒன்றாகக் கருதப்படுவது “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” மக்கள் வலிமையானவர்களாக, அவர்களின் எண்ணங்கள் வலிமையானதாக இருக்கும் போது சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவார்கள்.

ஒரு காட்டை எரிப்பதற்கு எவ்வாறு சிறு தீப்பொறியால் முடியுமோ, சிறு விதை எவ்வாறு பெரு விருட்சமாகின்றதோ அதேபோல் ஒரு சிறு மனிதனை வெற்றி பெறசெய்ய சிறு ஆயுதம் போதுமானது.

பல்வேறு சவால்களை எதிர்நோக்கிட்ட போதும், வலிமை இருந்தால் அதிலுள்ள சிறு வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

இந்த கட்டுரையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை பற்றி விளக்கமாக காணலாம்.

வலிமை ஓர் ஆயுதம்

நாம் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகளிற்காக காத்திருக்க வேண்டியதில்லை. வலிமையானவர்களிற்கு சிறு புல்லும் அவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றுவிடும்.

நாம் வெற்றிக் கனியை சுவைக்க வேண்டுமாயின், துணிந்து செயற்படுதல் அவசியமாகும். சிறு வாய்ப்புக்கள் எமக்கு கிடைக்கும் போது தோல்வியை நினைத்து அஞ்சாது அவற்றை பயன்படுத்த வேண்டும்.

வலிமையானவர்களாக இருப்பது அனைவரையும் விட நாம் தனித்து தெரிவதற்கான சிறந்த வழியாகும். அது எம்மை சாதனைப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

நாம் இலக்கை ஆராய்ந்து தெரிவு செய்து அதன் பின் உறுதியாக அதில் நின்று வெற்றி பெறவேண்டும். அஞ்சுபவர்கள் எதையுமே சாதிக்க முடியாது. அஞ்சாமையே வெற்றியைத் தேடித்தரும்.

இதனையே பாரதியார் “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை” என்று குறிப்பிடுகின்றார்.

வள்ளுவரின் கருத்து

வலிமையைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகையில் “ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்” என்கின்றார்.

அதாவது ஆராய்ந்து, நம்மால் முடியக் கூடியவற்றை தெரிவு செய்து அதில் நிலைத்து நின்று வெற்றி பெறவேண்டும். இலக்கை நிர்ணயம் செய்த பின் அதிலிருந்து பின் வாங்காமல் முழுமுயற்சி செய்ய வேண்டும்.

இதனைத் தவிர “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் இடைக்கண் முறிந்தார்” என்றும் குறிப்பிடுகின்றார்.

தம்முடைய வலிமை மற்றும் இயலுமையை சரிவர அறியாமல், எந்தளவு ஊக்கமாக எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் இடையில் தோல்வியையே தழுவுவர். வலிமையானவராக இருப்பது மட்டுமல்லாமல் எம்முடைய பலங்களை சரிவர அறிந்தவராகவும் இருக்க வேண்டும்.

வலிமை தரும் சிறப்பு

வலிமை மனிதர்களிற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. மற்றவர்களில் இருந்து தனித்துவமானவர்களாக எம்மைக் காட்டுவதோடு, மரியாதையையும் பெற்றுத்தரும்.

நாம் எதையும் துணிந்து செய்யும் போது தோல்வி நேரிட்டாலும் அதனை சமாளித்து மீண்டும் முயற்சியை மேற்கொள்ளக் கூடிய தன்னம்பிக்கையும் பக்குவமும் கிடைக்கின்றது.

இதனைத் தவிர தலைமைத்துவ அங்கீகாரமும், வெற்றியும் வலிமையானவர்களிற்கே கிடைக்கின்றது. வெறுமனே உடல் வலிமையை மட்டும் கொண்டிராது மனவலிமையையும் கொண்டிருக்க வேண்டும்.

இயலாமை என்று எதுவுமில்லை

மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் பல்வேறுபட்ட பலங்களும் பலவீனங்களும் காணப்படும். பலங்களை சரியாகப் பயன்படுத்துவதும், பலவீனங்களை பலங்களாக மாற்றுவதும் நம் ஒவ்வொருவரினதும் கைகளிலே தங்கியுள்ளது.

மனிதர்களால் இயலாது என்று எதுவுமில்லை. இவ்வுலகத்தின் அனைத்து சக்திகளும் மனிதர்களிற்கு ஆட்பட்டவையாகவே உள்ளன. அனைத்தும் எம்மால் முடியும் என்ற மனநிலையில் அணுகினோமானால் அதில் நிச்சயம் வெற்றி பெற முடியம்.

உலகில் மிகப்பெரிய சாதனை புரிந்த அனைவருமே வறுமையில் பிறந்தவர்களே. ஆனால் தம்முடைய வறுமையை நினைத்து வருந்தாமல் தம்மை வலிமையானவர்களாக மாற்றி, தமக்கு கிடைத்த சிறுவாய்ப்பை பயன்படுத்தியே உணர்ந்தார்கள்.

இவர்களிற்கு உதாரணமாக இந்திய குடியரசு தலைவான அப்துல் கலாம், அமெரிக்க ஐனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் போன்றோரை குறிப்பிடலாம்.

முடிவுரை

வலிமையானவர்களிற்கு சிறு துரும்பும் வெற்றி பெறுவதற்கான ஒரு ஆயுதமாகும். வலிமையே வெற்றியின் முதற்படி. நாம் வலிதற்வர்களாக இருக்கும் போது உலகமே நம்மை ஏளனமாக பார்க்கும்.

நாம் அனைவரும் எளிதில் உணர்ச்சி வசப்படாதவர்களாக இருக்க வேண்டும். மலைபோல துயர் வந்திட்ட போதும் சிறுகுன்றென அதை எண்ணி மனதை தளர விடாது முயற்சி செய்து வலிமை மிகுந்தவர்களாக வாழ்வோமாக.

You May Also Like :

அறிவே ஆற்றல் தரும் கட்டுரை

நேர்மை பற்றிய கட்டுரை