இந்த பதிவில் இந்துக்களால் பெரிதாக கொண்டாடப்படும் “ராம நவமி என்றால் என்ன” என்பது பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
ராம நவமி என்றால் என்ன
தர்மம் அழிந்து அதர்மம் தலைத்தூக்கும் வேலையில் தர்மத்தை நிலைநாட்ட தோன்றிய கடவுளர்களுள் ஒருவராக விஷ்ணு காணப்படுகின்றார்.
விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவரான இராமபிரான் உலகில் அவதரித்த சித்திரைமாத சுக்கில பட்ச (வளர்பிறை) நவமி நாளினையே ராமநவமி என இந்துக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இந்நாளினை ‘ஸ்ரீராமநவமி‘ எனவும் அழைப்பர்.
ராம நவமி வரலாறு
கோசலை நாட்டின் தலைநகராகிய அயோத்தியை ஆண்ட மன்னரான தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் இருந்தனர்.
தேசமெங்கும் வெற்றிக் கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தசரத சக்கரவர்த்தி மனம் நொந்து தமது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பெற என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.
முனிவர் அவருக்கு ‘புத்ர காமேஷ்டி’ யாகத்தை நடத்துமாறு அறிவுரை கூறினார். தசரத சக்கரவர்த்தி யாகத்தை சிறப்பாக நடத்தினார், அச்சமயத்தில் யாகத்தீயில் இருந்து யக்னேஸ்வரர் தோன்றி பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரதரின் கையில் கொடுத்து அதை அவரது மனைவிமார் அருந்த செய்யுமாறு கட்டளை இட்டார்.
தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவிமாரும் அதனை பகிர்ந்து அருந்தினார்கள். அதன் பின் சித்திரை மாத சுக்கில பட்ச (வளர்பிறை) தினத்தில் கோசலை ராமப்பிரானையும், கைகேயி பரதனையும், சுமித்திரை லட்சுமனையும் சத்ருக்கனையும் ஈன்றெடுத்தனர். இந்நாளினையே இராமநவமி என சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
ராமர் ஐந்து கிரகங்களும் உச்சத்தில் அதாவது இராமரின் ஜாதகத்தின்படி சூரியன் மேஷத்திலும், செவ்வாய் மகரத்திலும், குரு கடகத்திலும், சுக்கிரன் மீனத்திலும், சனி துலாமிலும் இருந்தவேளை பூமியில் அவதரித்தமையால் அவரது ஜாதகத்தை எழுதி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால்,
நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்றும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்றும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீராத நோய்களும் கூட தீரும், ஐஸ்வரியத்தோடு வாழலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ராமர் நவமியில் தோன்றிய வரலாறு
பொதுவாக அஷ்டமி, நவமி திதிகளில் எந்த நற்காரியத்தை செய்வதையும் மக்கள் தவிர்த்து விடுவார்கள். அதாவது இந்நாட்களில் எந்த நல்ல காரியத்தையும் புதிதாக ஆரம்பிப்பதில்லை.
இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள் மகாவிஷ்ணுவிடம் சென்று “நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக எண்ணி எந்த நற்காரியத்தையும் செய்ய தயங்குகிறார்கள் ஏன் எங்களை ஒதுக்குகிறார்கள்?” என்று கேட்டனர்.
அத்திதிகளுக்கு “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும் அது வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று உறுதி அளித்தார்.
அதன்படியே நவமி திதியில் இராமபிரானாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணப்பிரானாகவும் விஷ்ணு அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ராம நவமி வழிபாடு முறை
நவமி நன்னாளில் ராம ஆலயங்கள் தோறும் விசேட பூஜை, ஆராதனைகள் இடம்பெறும் இங்கு பெரும் திரளான மக்கள் கூடி வழிபாடு ஆற்றுவார்கள்.
வீடுகளிலும் சிலர் விரதமிருந்து அல்லது சில உணவுகளை தவிர்த்து விரதமிருந்து, ராமரின் பட்டாபிஷேகப் படத்தை பூஜையறையில் வைத்து பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம் என்பவற்றை படைத்து வழிபாடு செய்கின்றனர்.
அன்று முழுவதும் ராமப்பிரானை எண்ணிக் கொண்டும் “ஸ்ரீராம ஜெயம்” என்னும் ராமஸ்லோகங்களையும் உச்சரிப்பார்கள்.
தென்னிந்தியாவில் இந்நாள் சீதாராமன் திருமணநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதனால் மாதிரி திருமணச் சடங்குகள் இராமர் ஆலயங்கள் தோறும் நடாத்துவார்கள்.
இங்கு பெரும் திரளான மக்கள் கூடி குழுவாக இராமநாமஸ்லோகம் ஓதுவார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ‘பத்ராச்சலத்தில்’ நடத்தப்படும் கல்யாண விழா மிகவும் பிரபலமானதாகும்.
ராம நவமி பலன்கள்
மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு சிறப்பை எடுத்துரைக்கின்றன. அந்தவகையில் இராம அவதாரம் தனிமனித ஒழுக்கத்தையும், அதர்மத்தை வென்று தர்மத்தை நிலைநாட்டுவதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் மற்றும் ராமர் சிறந்த மாணவனாக, மகனாக, கணவனாக, அரசனாக வாழ்ந்த விரதத்தினையும் எடுத்தியம்புகின்றது.
இவ் உத்தம புருஷரின் பிறப்பு தினத்தில் விரதமிருந்து அதனை சரிவர அனுஷ்டிப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும், நல்லாரோக்கியம் கிடைக்கும், குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும், துன்பத்திலும் கலங்காத மனநிலை உண்டாகும், எடுத்த காரியத்தில் வெற்றி, ஐஸ்வர்யம் கிட்டும்.
You May Also Like: |
---|
அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை |
பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் |