மரங்கள் இல்லையெனில் மனித இனம் இல்லை. மரங்கள் நம் வாழ்வோடும், கலாசாரத்தோடும் இணைந்துள்ளன. மரங்கள் மற்றும் தாவரங்களில் இலைகளிலிருந்து வெளியேறும் ஆக்சிஜன் மனிதனின் சுய மூச்சுக்கு இன்றியமையாததாகும்.
மரங்களின் முக்கியத்துவம் பற்றி அறியாத மனிதன் தனது சுயநலத்திற்காகவும், தனது தேவைக்காகவும் மரங்களை வெட்டி வருகின்றான்.
இதனால் குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு நமக்கு தீங்கு விளைவிக்கப்படுகின்றது என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. மரங்களை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
மரங்கள் அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
#1. ஆக்சிஜனின் அளவு குறையும்
மனிதன் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவை மரங்களே உற்பத்தி செய்யும் மையங்களாக காணப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் ஆக்சிஜன் எதிர்காலத்தில் கிடைக்காமல் போய்விடும் அபாய நிலை தோன்றலாம்.
#2. மண்ணரிப்பு ஏற்படுகின்றது
மரங்களின் வேர்கள் நிலத்தை பற்றி பிடிப்பதனால் மண் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப்படுகின்றது.
மரங்களை வெட்டும் போது சரிவுகள் அல்லது திறந்த பகுதிகள் போன்றவற்றில் காற்றைத் தடுக்க ஏதுவாக எதுவும் இருப்பதில்லை. இதனால் மண் அடித்துச் செல்லப்படுகிறது.
#3. புவி வெப்பமடைகிறது
புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களில் முதலிடத்தில் இருக்கும் கரியமில வாயுவை உள்ளீர்த்து பூமியை மிதமான வெப்பநிலையில் வைத்திருப்பதில் மரங்களே முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. எனவே மரங்களை வெட்டும் போது புவி வெப்பமடைகின்றது.
#4. பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன
மரங்களில் பறவைகள் பொந்து அமைத்தும், கூடுகள் கட்டியும் வாழ்கின்றன. மரங்களை வெட்டும் போது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன் வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றன.
#5. மண்வளம் பாதிக்கப்படுகின்றது
பூமியின் மீது நேரடியாக வேகமாக விழும் மழை மரங்கள் தங்கள் மீது தாங்கிக் கொள்கின்றன. மழை நேரடியாக பூமியில் விழுந்தால் நிலப்பரப்பின் மேல்மண் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டு நிலம் பலவீனம் அடையும்.
#6. பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு
ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும்.
மரங்கள் மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றது அதேபோல் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவு மற்றும் வாழ்விடங்களை அளிக்கின்றது. மரங்களை அழித்தால் அதை நம்பி வாழும் உயிரினங்களின் அழிவுக்கும் வழிவகுக்கும்.
#7. மழைப்பொழிவு குறையும்
மழை அதிகமாகப் பெய்யக் காரணம் மரங்கள் நிறைந்திருப்பதுதான். ஆனால் மரங்கள் அழிக்கப்படும் போது பருவமழை காலங்களில் பெய்யும் மழை கிடைக்காமல் போய் விடுகின்றது. இதனால் எதிர்காலத்தில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.
#8. அரிய வகை இனங்கள் அளிக்கப்படுகின்றன
மரங்களை வெட்டுவதும், மரங்களின் இனங்களை முன்கூட்டியே அழிப்பதற்கு சமன் ஆகிவிடுகின்றது. தொடர்ந்து அழிக்கப்படுவதால் அரிய வகை மரங்கள் முற்று முழுதாகவே அழிந்துவிடும்.
#9. நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைகின்றது
பல்லுயிர் இழப்பு, மண் சரிவு மற்றும் இயற்கை வளங்களின் குறைப்பு, தட்பவெப்பநிலைகளை கடுமையாக பாதிக்கிறது, நகரங்களின் இயற்கை நிலைமைகளை மாற்றியமைத்தல், தொழில்துறைக்கு தேவையான உயிரினங்களின் இழப்பு போன்ற பல விளைவுகள் மரம் அழிப்பதனால் ஏற்படுகின்றது. இவ் விளைவுகள் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
#10. மண்ணின் ஈரப்பதன் குறையும்
மரங்களால் மண்ணின் ஈரப்பதன் பாதுகாக்கப்படுகின்றது. மரங்கள் அழிக்கப்பட்டால் மண்ணின் ஈரப்பதன் குறைந்து அதன் வளம் குன்றும்.
You May Also Like: |
---|
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் |
பற்களில் மஞ்சள் கறை நீங்க |