மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

Mahakavi Bharathiyar History In Tamil

மகாகவி பாரதியார்

இந்த பதிவில் “மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

புரட்சிகர வரிகளால் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர். சாதி பாகுபாடு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் என சமூகத்திற்கு எதிரானவற்றிற்கும் தமிழுக்கும் குரல் குடுத்த கவிஞன் பாரதி.

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

மறைந்தும் மறையாமல் வாழ்வது ஒரு சிலரே அத்தகைய உயிர்ப்புடன் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பாரதியார். பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று உலகம் போற்றும் உன்னத கவிஞராகத் திகழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

மகாகவி⸴ தேசிய கவிஞர்⸴ காளிதாசன்⸴ புதுக்கவிதையின் முன்னோடி⸴ மக்கள் கவிஞர்⸴ வரகவி⸴ தமிழ்க்கவி⸴ விடுதலைக்கவி⸴ சக்திதாசன் உள்ளிட்ட பல சிறப்புப் பெயர்களால் இன்றும் போற்றப்பட்டு வருகிறார்.

சிறந்த தமிழ் கவிஞர் என்று போற்றப்பட்டவர். கவிதைகள் எழுதிய கவிஞர் மட்டுமல்ல இவர் ஒரு எழுத்தாளர்⸴ பத்திரிகையாசிரியர்⸴ சமூக சீர்திருத்தவாதி⸴ இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர்.

கம்பருக்கு பின் மக்கள் மனதில் அழியா இடம் பிடித்த கவிஞர் என்றால் அது பாரதியார் என்றே கூறலாம். நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். தமிழ்⸴ தமிழ் நலன்⸴ பெண் விடுதலை⸴ தீண்டாமை போன்றவற்றிற்காய் ஒரு நூற்றாண்டிற்கு முன்பே தன் கவிதையால் உரக்கக் கூறியவர் தான் மகாகவி பாரதியார்.

மக்களின் சிந்தனைகளைத் தனது பாடல்கள் மூலம் தட்டி எழுப்பியவர் பாரதியார். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்ˮ என்று பெண் விடுதலைக்கு பாடுபட்டவரும் இவரே⸴

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்ˮ என்று சாதிய ஒழிப்புப் பற்றியும் பாடியுள்ளார். மகா கவி எனப் போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் இன்றைய மாணவ⸴ மாணவிகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பது சந்தேகமில்லை.

பெயர்சுப்பிரமணிய பாரதியார்
இயற்பெயர்சுப்பிரமணியன்
பிறந்த திகதிடிசம்பர் 11, 1882
பிறந்த இடம்எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ்நாடு
தாய்இலக்குமி அம்மாள்
தந்தைசின்னசாமி ஐயர்
இறப்புசெப்டம்பர் 11, 1921
வேறு பெயர்கள்மகாகவி⸴ தேசிய கவிஞர்⸴ காளிதாசன்⸴
புதுக்கவிதையின் முன்னோடி⸴
மக்கள் கவிஞர்⸴ வரகவி⸴ தமிழ்க்கவி⸴
விடுதலைக்கவி⸴ சக்திதாசன்,
சுப்பையா, முண்டாசுக் கவிஞன்

வாழ்க்கைக் குறிப்பு

1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11, சின்னச்சாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பாரதியார் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டையபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.

இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம். இளம் வயதில் சுப்ரமணியம் அனைவராலும் செல்லமாக சுப்பையா என்ற பெயரோடுதான் அழைக்கப்பட்டார். இவருடைய ஐந்தாவது வயதில் தாயார் இறந்துவிட்டார்.

கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட சுப்பிரமணியம் தனது 11வது வயதிலேயே கவிதை எழுதுவதைத் தொடங்கிவிட்டார். இவரின் கவிதை எழுதும் திறனைக் கண்ட எட்டயபுர மன்னர் “பாரதிˮ என்ற பட்டத்தை வழங்கினார்.

பாரதி என்ற சொல்லிற்கு சரஸ்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பது பொருளாகும். அன்றிலிருந்து சுப்ரமணியம் என்று அழைக்கப்பட்டவர் சுப்பிரமணிய பாரதியாராக மாறினார்.

1897 ஆம் ஆண்டு பெற்றோர்கள் இவருக்கு செல்லம்மாளைத் திருமணம் செய்து வைத்தனர். அப்போது இவருக்கு வயது பதினான்கு மட்டுமே. இத்தம்பதியினருக்கு தங்கம்மாள்⸴ சகுந்தலா என இரண்டு மகள்கள் இருந்தனர்.

பாரதியாரின் தொண்டு

4 ஆண்டு காலம் காசியில் இருந்து தமிழகம் வந்த பாரதியார் எட்டையபுர மன்னரின் அரசவையில் அவரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராகச் சிலகாலம் தொண்டாற்றினார். பாரதியின் எழுத்துக்கள் முதன் முதலில் 1903ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளிவந்தது.

மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகவும் சிலகாலம் பணிபுரிந்தார். “சுதேசமித்திரன்ˮ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை சென்னையில் சுப்பிரமணிய ஐயர் என்பவர் நடத்தி வந்தார்.

இவர் பாரதியின் எழுத்துத் திறமையை முன்னரே அறிந்திருந்ததால் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியர் பொறுப்பை பாரதிக்கு வழங்கவே அதை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் பாரதியார் “இந்தியாˮ எனும் பத்திரிகையில் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இப்பத்திரிகையில் தான் ஆங்கில அரசுக்கு எதிராக பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

இது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைக் கடுமையாகத் தாக்கியது. ஆங்கிலேயே அரசு பாரதியாருக்கு எதிராக சட்டப்படியாகவும்⸴ சட்டத்திற்கு புறம்பாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவரின் இந்த காரசாரமான கட்டுரைகள்⸴ காட்டூண்கள் காரணமாக கைது செய்யப்பட்டார்.

பாலபாரதி என்னும் ஆங்கில ஏட்டையும் தொடங்கினார். 1906ஆம் ஆண்டு “இந்தியாˮ இதழில் பாரதியார் வேதாந்தி என்னும் புனைபெயரில் கவிதையை எழுதி வெளியிட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு

பாரதியார் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவராவர். இந்தியா பத்திரிக்கையின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகின்றார்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திர வேட்கையை பாடல் மூலம் மக்களுக்கு ஊட்டினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்ˮ எனும் பாடல் மூலம் தனது சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பாரதியார் நினைவுச் சின்னங்களாக அவர் வாழ்ந்த இல்லங்களைப் போற்றி வருகின்றது. இவ்வகையில் எட்டயபுரம்⸴ சென்னை திருவல்லிக்கேணி⸴ புதுச்சேரி ஆகிய இடங்களில் அவர் வாழ்ந்த இல்லங்களை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.

மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் இவர் பிறந்த எட்டயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

பாரதியின் படைப்புகள்

  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு
  • பாப்பா பாட்டு
  • சுயசரிதை (பாரதியார்)
  • தேசிய கீதங்கள்
  • தோத்திரப் பாடல்கள்
  • விடுதலைப் பாடல்கள்
  • விநாயகர் நான்மணிமாலை
  • பாரதியார் பகவத் கீதை
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • நவதந்திரக்கதைகள்
  • ஹிந்து தர்மம்
  • சின்னஞ்சிறு கிளியே
  • பாஞ்சாலி சபதம்
  • புதிய ஆத்திசூடி
  • ஆறில் ஒரு பங்கு
  • ஞானப் பாடல்கள்
  • தோத்திரப் பாடல்கள்
  • விடுதலைப் பாடல்கள்
  • பாரதி அறுபத்தாறு
  • ஆறில் ஒரு பங்கு பொன் வால் நரி
  • சந்திரிகையின் கதை
  • ஞானரதம்

1921 ஆம் ஆண்டு ஜூலை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியது. சிறு நாட்கள் மருத்துவமனையிலிருந்த பாரதி தனது 39ஆவது வயதில் 1921 இல் செப்டம்பர் 11 மரணித்தார். தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர் பாரதி உலகத் தமிழர் நாவில் இவர் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

You May Also Like :

மணிமேகலை வாழ்க்கை வரலாறு

பாரதியார் பற்றிய கட்டுரை