சமூகத்திலுள்ள அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குவதனூடாக பாலின சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்
Table of Contents
பாலின சமத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பாலின சமத்துவம்
- பாலின சமத்துவமின்மை
- பாலின சமத்துவமின்மையாலான சவால்கள்
- பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம்
- முடிவுரை
முன்னுரை
சுபீட்சமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பாலின சமத்துவம் அவசியமானது. உயிரியல் வகைப்பாட்டின் அடிப்படையில் ஆண் என்றும் பெண் என்றும் வேறுபடுத்திப் பார்க்கப்படுவது பால் எனப்படுகிறது.
பாலினம் என்பது குணவியல்பு, ஆண்மை மற்றும் பெண்மைக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் ஆகும். சமூகத்திலுள்ள அனைத்து பாலினத்தவரும் சம உரிமைகளோடு வாழ வேண்டும் என்பது பாலின சமத்துவம் எனப்படுகின்றது.
மரபு வழியாக காணப்படும் பல்வேறு காரணங்களினால் பாலின சமத்துவத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருக்கிறது.
பாலின சமத்துவம்
“பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல் நடத்தப்பட வேண்டும்“ என பாலின சமத்துவத்தை யுனிசெப் வரையறுக்கிறது.
ஜெனிவாவில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் (WEF) வருடாந்த பாலின இடைவெளி அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டின் முடிவில் பாலின சமத்துவம் நிலவும் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் என்பவற்றை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் ஏதொவொரு வகையில் தொடர்ந்து பாகுபாடு மற்றும் வன்முறையினை எதிர்நோக்குகின்றனர்.
பாலின சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை மட்டுமல்ல, அமைதியான, வளமான மற்றும் நிலையான உலகத்திற்கு தேவையான அஸ்திவாரம் ஆகும்.
பாலின சமத்துவமின்மை
பாலின சமத்துவமின்மை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எழும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. இன்றும் கூட அநேக இடங்களில் ஒரே மாதிரியான வேலைகளை செய்யக்கூடிய ஆண்களுக்கு அதிக ஊதியமும், பெண்களுக்கு குறைவான ஊதியமும் வழங்கும் நிலைதான் காணப்படுகிறது.
கல்வி, உயர்ந்த பதவிகள், பொருளாதார வளர்ச்சி, சமூகப்பொறுப்புகள் போன்றவற்றில் தற்போது பாலின சமத்துவம் என்பது சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும், சாதாரண மனிதர்களுடைய வாழ்வில் அந்த சமத்துவம் இல்லை என்றே கூறலாம்.
பாலின சமத்துவமின்மையாலான சவால்கள்
பாலின சமத்துவமின்மை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
ஆண்களை வலிமை மிக்கவர்களாகவும், பெண்களை மென்மையானவர்களாகவும் நோக்குகின்ற இந்த சமூகத்தின் பார்வையே தவறானதாகும். பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது.
வீட்டை விட்டு வெளியே போகும் பெண்களை “கவனமாக இரு, யாரிடமும் அநாவசியமாக பேசாதே” என ஆயிரம் அறிவுரைகளை கூறும் சமூகம், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆணைப் பார்த்து “ஒழுங்கான யோக்கியமான ஆண்மகனாக நடந்துகொள்” என அறிவுரை சொல்கிற காலம் வந்தால் மட்டுமே பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்.
பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம்
அனைத்து பாலினத்தவரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளவும் தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி நிறைவேற்றிக்கொள்ளவும் பாலின் சமத்துவம் முக்கியமாகின்றது.
பெண்களும் ஆண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அவர்களுக்கான உரிமைகள், பொறுப்புக்கள், வாய்ப்புக்கள் ஆகியவை ஆண், பெண் என்பதை பொறுத்து வேறுபடக்கூடாது.
பாலின சமத்துவமானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், மனித உரிமையை நிலைநாட்டுவதற்கும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தைச் கட்டியெழுப்புவதற்கும் அவசியமாகின்றது.
முடிவுரை
சமூகத்திலுள்ள அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குவதனூடாக பாலின சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். பாலின சமத்துவமின்மை என்பது மனித குலத்தின் சாபக்கேடு.
இவ்வுலகில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். எவ்வித பாகுபாடுகளுமின்றி சக மனிதனை மனிதனாக மதிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதனூடாக பாலின சமத்துவத்தை கட்டியெழுப்ப முடியும்.
Read more: அதிகாலையில் சீக்கிரம் எழுவது எப்படி