பாடசாலை பற்றிய கட்டுரை

Padasalai Katturai

இந்த பதிவில் நற்பிரஜைகளை உருவாக்கும் “பாடசாலை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நாட்டினை வளப்படுத்தும் நற்பிரஜைகளை வழங்கும் பாடசாலைகள் கோவில்கள் போல் மதிக்கவும் போற்றுதற்கும் உரியவையாகும்.

பாடசாலை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பாடசாலைகளின் முக்கியத்துவம்
  3. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாடசாலையின் பங்களிப்பு
  4. சமூகத்தில் பாடசாலை
  5. மழலையர் பாடசாலையும் கல்வியும்
  6. முடிவுரை

முன்னுரை

கல்விச் சேவை என்பது உலகில் மிகச்சிறந்த சேவையாகும். இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது” என்று கூறுவர்.

குழந்தைகள் அன்றாட வாழ்வில் பாடசாலையிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

ஒரு மனிதன் தன் கற்றலின் மூலம் அறிவு தெளிவடைதல், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், சுயமதிப்பு, மரியாதை, நம்பிக்கை வளர்த்தல் மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களைக் கையாளுதல், தனது சமூகத்தை வழிநடத்துதல் போன்ற செயல்களைப் பெற்றுக்கொள்ளும் இடமே பாடசாலையாகும்.

இத்தகைய பாடசாலை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

பாடசாலைகளின் முக்கியத்துவம்

தனியாளின் ஆளுமையை வளர்த்தெடுத்து அதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்று, சமூகமானது அழியாமல் பாதுகாக்கும் கருவியாக விளங்கும் கல்வியை வழங்குவதற்கு பாடசாலைகள் முக்கியமாகின்றன.

பிள்ளைகளை வளப்படுத்தி அவர்களை நற்பிரஜைகளாக சமூகத்தினுள் புகுத்த பாடசாலைகளை துணை நிற்கின்றன. ஒரு நாட்டின் வளமான எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பாடசாலைகள் முதன்மை வகிக்கின்றன.

பாடசாலைகளில் இருந்தே நாட்டை ஆளப் போகும் தலைவர்கள் முதல் வைத்தியர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல அறிவார்ந்த பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர்.

அறிவுசார் முன்னேற்றத்திற்கும், ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கும் பாடசாலைகள் துணைபுரிகின்றன.

பாடசாலைகள் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி இவற்றைப் பேணிக்காத்து ஒழுக்கமுள்ளவர்களாக மாணவர்கள் வளர்வதற்கு காரணமாகின்றன.

மாணவர்களின் சீரான வாழ்வு முறைக்கு வழிகாட்டுகின்றது. சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பாடசாலை முக்கிய இடத்தை வகிக்கிறது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாடசாலையின் பங்களிப்பு

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாடசாலைகளின் பங்களிப்பு முக்கிய இடத்தை வகிக்கின்றது.

பிள்ளைகளுக்கு பாடசாலை மட்டத்தில் தேவையான உதவிகளை வெளியிடங்களில் இருந்தாவது பெற்றுக் கொடுப்பதும், அவர்கள் கல்வியிலிருந்து இடைவிலகிச் செல்லாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் பாடசாலைகள் உதவியாகவுள்ளன.

சமூகத்தில் பாடசாலை

பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் ஆகும். சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு நிறுவனங்களுள் ஒன்றாக பாடசாலை விளங்குகின்றது. இந்த வகையில் இப்பாடசாலைக்கும் சமூகத்திற்குமான தொடர்பானது நெருக்கமானதாகக் காணப்பட வேண்டும்.

ஒரு பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டுமானால் அப்பாடசாலை அமைந்துள்ள சமூகத்தினுடைய பங்கானது மிகவும் இன்றியமையாதது. அது நிதி, பாதுகாப்பு, மனித வளம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கி இருக்கலாம்.

பாடசாலையில் துரித அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் அங்கு சமூகத்தினுடைய பங்கு அவசியம் ஆகும்.

மழலையர் பாடசாலையும் கல்வியும்

சிறுவர்களை ஆதரித்துக் கல்வி போதிக்கும் நிலையங்களாக மழலையர் பள்ளிகள் காணப்படுகின்றன. இங்கு மழலைகள் பல மணிநேரங்கள் கல்வி விளையாட்டுகளில் செலவிடுகின்றனர்.

குழந்தைகள் உலகின் அடிப்படைகளை மட்டுமல்ல, புதிய மனிதர்களுடன் ஒன்றிணைவதையும் இங்கு கற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு குழந்தையின் அடிப்படைக் கல்வி, பழக்கவழக்கம் போன்றன குடும்பத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் போதிக்கப்படுகின்றன.

முடிவுரை

கல்வி அறிவானது தனிமனிதனுக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் இன்றியமையாததாகும். அத்தகைய கல்வியறிவினை சமூகத்திற்கு வழங்குவது பாடசாலைகளாகும்.

மாணவர்களது அறிவினை வளர்த்தெடுத்து நாட்டினை வளப்படுத்தும் நற்பிரஜைகளை வழங்கும் பாடசாலைகள் கோவில்கள் போல் மதிக்கவும் போற்றுதற்கும் உரியவையாகும்.

You May Also Like :
இளமையில் கல்வி கட்டுரை
கல்வியின் சிறப்பு கட்டுரை