இந்த பதிவில் “நோய் வருமுன் காப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.
எம்மை நாம் காத்துகொண்டால் தான் எமது குடும்பம், எமது நண்பர்கள், எமது சமூகம் என அனைவரையும் நன்றாக பார்த்து கொள்ள முடியும்.
Table of Contents
நோய் வருமுன் காப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- முன்னாயத்தமாயிருத்தல்
- நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
- அன்றாட வாழ்க்கையில் சுத்தம்
- ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்
- நோய்களும் இடர்நிலையும்
- முடிவுரை
முன்னுரை
“வெள்ளம் வரும் முன்னர் அணைகட்ட வேண்டும்” என்றொரு பழமொழி இருக்கிறது. அதாவது எந்த பாதிப்புக்களும் வருவதற்கு முன்னரே முன்னாயத்தமாக இருக்கவேண்டும் என்பது இதன் பொருள்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்த தற்காப்பு உத்தியாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் வருமுன் காப்போம் என்ற விடயத்தை வலியுறுத்தி இருக்கின்றார்கள்.
இக்கட்டுரையில் வருமுன் காக்க வேண்டியதன் அவசியம், அதற்கான வழிமுறைகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.
முன்னாயத்தமாய் இருத்தல்
மனித வாழ்க்கை அடுத்த நிமிடம் நிச்சயமற்ற நிலையில்லாத வாழ்க்கை என்பதனால் நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். பிரச்சனைகள் பலவடிவங்களில் உருவாகுவதனால் அவற்றை முகங்கொடுக்க எம்மை முன்னரே தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
“கண் கெட்ட பிறகு எதற்கு சூரிய நமஸ்காரம்” என்பது போல பாதிப்படைந்த பின் புலம்பி தீர்ப்பதில் எந்த பயனுமில்லை.
பெரும் பஞ்சம் ஒன்று உருவாக முன்னர் உணவை சேமிப்பது போலவும், வரட்சி வர முன்னர் நீரை பாதுகாப்பது போலவும் நாம் முன்னாயத்தமாய் இருக்கவேண்டும்.
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
நோய்கள் வரும்முன் எம்மை நாம் பாதுகாத்து எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வது என்பது வாழ்வில் முக்கியமானது. நோய்கள் இல்லாத வாழ்வே மிக பெரிய வரப்பிரசாதம்.
ஒருவர் எவ்வளவு பெரிய அறிவாளியாகவோ செல்வந்தராகவோ இருக்கலாம் ஆனால் அவர் ஆரோக்கியம் அற்றவராக இருந்தால் அனைத்துமே வீணாகும். அவர்களது வாழ்வே வேதனை மிகுந்ததாக மாறி அவர்களது மகிழ்ச்சியை பறித்துவிடும்.
எனவே நாம் நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் இதற்கு எம்மை முன்னாயத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அன்றாட வாழ்வில் சுத்தம்
நோயற்ற வாழ்வு வாழ எம்மால் மேற்கொள்ள கூடிய சிறந்த வழிகளில் ஒன்று அன்றாட வாழ்வில் சுத்தமாக இருத்தல், வாழ்கின்ற வாழ்விடம் அதனை சுற்றியுள்ள சூழல் இவற்றை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருத்தல், நோய்கிருமிகள் இல்லாத சுத்தமான வாழ்விடம் நோய்களை எம்மிடமிருந்து தூர விரட்டும்.
மற்றும் சுத்தமான உணவு, தூய்மையான காற்று, தூய்மையான குடிநீர் இவற்றை எடுத்து கொள்வதனால் எமது உடல் ஆரோக்கிய்தை மேம்படுத்தி கொள்ள முடியும்.
அன்றாடம் இவ்வாறான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதால் எம்மால் நோய்களில் இருந்து பாதுகாப்பாகவும் முன்னாயத்தமாகவும் இருக்க முடியும்.
ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்
“கந்தலானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்து குடி, ஏழையானாலும் இரவில் உறங்கு” இது போன்ற கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களுடைய வரிகள் நோயற்ற வாழ்வுக்கான வழிகளை காட்டி நிற்கிறது.
தினம் தோறும் குளித்தல், உடலை சுத்தமாக வைத்திருத்தல், ஆடைகளை தூய்மையாக அணிதல், ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளல், வழக்கமான உடற்பயிற்சி, விளையாட்டு இவை போன்ற நல்ல பழக்கவழக்கங்களை நாம் வழக்கப்படுத்தி கொள்வதன் மூலம் நோய்களில் இருந்து எம்மை காத்து கொள்ளலாம். இதுவே மிகச் சிறந்த முன்னாயத்தமாகும்.
நோய்களும் இடர்நிலையும்
“உடலை வலிமை செய்ய வேண்டும்” இல்லாவிடின் எம்மால் வாழ்வில் வெற்றி பெறமுடியாது. “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்பதனால் நாம் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லா விட்டால் இலகுவில் நோய்வாய்படுவதனால் வைத்தியசாலைகளில் அதிக நேரம் செலவிட நேரும். வாழ்வே கண்ணீரும் கம்பலையுமாக தான் இருக்கும்.
தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் நன்றாக பார்த்து கொள்ள முடியாத நிலையானது உருவாகும். நோய்கள் வாழ்வில் மிகப்பெரும் சாபம் ஆகையால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
முடிவுரை
“எண்ணி துணிக கருமம்” ஆதலால் எமது வாழ்க்கை எமது கைகளில் தான் உள்ளது. எம்மை நாம் காத்துகொண்டால் தான் எமது குடும்பம், எமது நண்பர்கள், எமது சமூகம் என அனைவரையும் நன்றாக பார்த்து கொள்ள முடியும்.
எனவே வருமுன் காத்தல் என்கின்ற மாற்றம் எம்மில் இருந்து துவங்கட்டும். இந்த மாற்றம் அனைவரிடத்திலும் உண்டாவதனால் மிகச்சிறந்த மகிழ்ச்சியான சமூகம் ஒன்று கட்டியமைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like :