நான் கண்ட கனவு கட்டுரை

Naan Kanda Kanavu Katturai In Tamil

இந்த பதிவில் “நான் கண்ட கனவு கட்டுரை” எனும் தலைப்பில் இரண்டு(02) கட்டுரை தொகுப்பை காணலாம்.

ஆழ்மனதில் இருக்கும் சிந்தனைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன. என் வாழ்வில் ஏற்பட்ட கனவுகளின் வெளிப்பாடே இந்த கட்டுரை.

நான் கண்ட கனவு கட்டுரை – 1

எம் ஆழ்மனதின் சிந்தனைகளே கனவுகளாக எழுகின்றன. எமக்கு உத்வேகம் தந்து எம்மை செயற்பட வைக்கின்றன. அவ்வாறு என்னை குறிக்கோளுடையவனாக மாற்றி வைத்த கனவைப் பற்றி கூறப் போகின்றேன்.

என்னுடைய நான்காம் ஆண்டு விடுமுறையை சந்தோசமாக கழிப்பதற்காக என்னுடைய தாத்தா வீட்டிற்கு புகையிரதத்தில் சென்று கொண்டிருந்தேன். யன்னலருகில் அமர்ந்தவாறு தூரத்தே வானத்தில் பறந்த பறவைகளை பார்த்து இரசித்தவாறு உறங்கிவிட்டேன்.

அப்போது ஒரு அழகிய கனவு என்னை ஆட்கொண்டது. எல்லைகளற்ற வானவெளியில் இறக்கைகள் எதுவுமின்றி கைகளை அசைத்தவாறு பறந்து கொண்டிருக்கின்றேன். என்ன ஆச்சரியம்! பஞ்சுக் குவியல் போன்ற மேகக் கூட்டங்களைக் கடந்து காற்றில் மிதப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது.

குளிர்ந்த காற்று முகத்தில் மோத சூரியக்கதிர்களினூடே பறப்பது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகின்றது. மேலிருந்து தூரத்தே தெரியும் கட்டங்களை பார்க்கும் போது பூமியிலிருந்து தனித்து வந்துவிட்ட உணர்வு பயத்தை தராமல் இன்னும் தூரப் பறக்க வேண்டும் போன்ற பேராவலைத் தருகின்றது.

திடீரென கருத்த மேகமூட்டங்கள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. கனத்த மழை பெய்வதற்கு அறிகுறியாக குளிர்காற்று சுழன்றடிக்கின்றது. பென்னம்பெரிய மழைத்துளிகள் முகத்தில் விழுகின்றன.

திடீரென கண்னை கூசச் செய்த மின்னல் ஒளியிலும், செவிப்பறையை பிளப்பது போன்று எழுந்த இடி ஒலியிலும் “அம்மா” என் அலறியவாறு கண்களைத் திறந்தேன். அன்று அந்த கனவு என்னை பயமுறித்திய போதும் அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறு வானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை என்னை விட்டு அகலவில்லை.

பின்பு தந்தையுடன் அக்கனவைப் பற்றி பகிர்ந்த போது ஒரு விமானியாக வந்தால் மட்டுமே வானத்தில் பறக்கமுடியும் என்று கூறினார். அன்றிலிருந்து இன்றுவரை அதற்காக கடினமாகப் படித்து வருகின்றேன்.

நான் கண்ட கனவு கட்டுரை – 2

ஒவ்வொரிடமும் தமது வாழ்க்கையில் பலவற்றை சாதிக்க வேண்டும் என்ற பல கனவுகள் காணப்படும். இந்திய நாடே போற்றிப் புகழும் அப்துல்கலாம் சிறுவயதாக இருக்கும் போது கண்ட கனவுகள் அவரை இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக மாற்றின.

அவர் தனது சுயசரிதையில் “கனவு என்பது தூக்கத்தில் காண்பதல்ல, மாறாக தூங்கவிடாமல் செய்வதே கனவு” என்று குறிப்பிடுகின்றார். அவ்வாறு என்னை தூங்க விடாமல் செய்த கனவைப் பற்றியே நான் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

சிறுவயது முதலே நான் படிக்காமல் விளையாட்டு, தொலைக்காட்சி பார்ப்பது என பொழுதை போக்கிக் கொண்டிருப்பேன். எனது அம்மா என்னை படிக்க சொல்லும் போதெல்லாம் சரிவரப் படிக்காமல் அக்கறையின்றியே இருப்பேன்.

இதன் விளைவாக ஒருமுறை வகுப்பறையிலே மிகுக்குறைந்த புள்ளிகளை பெற்று, இறுதி மாணவனாக வரநேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.

எனது அம்மா, அப்பா இருவரும் என்னை நினைத்து வருந்தியபோது, மனதிற்குள் அடுத்த தடவை முதல் மாணவனாக வந்து அவர்களை பெருமைப்படுத்த வேண்டும் என சபதம் செய்து கொண்டேன்.

அன்றிலிருந்து எனது வெற்றியைப் பற்றி கனவு காணத் தொடங்கினேன். கனவு காண்பது மட்டுமில்லாமல் அதற்காக கடினமாக உழைத்தேன். பள்ளிப் பாடங்களை சரிவரப் படிப்பதோடு, தெரியாதவற்றை தெளிவுபடுத்தி இரவு பகல் பாராது படிப்பில் கவனம் செலுத்தினேன்.

அதன் பிரதிபலனாக அடுத்த தவணைப் பரீட்சையின் போது அதிகபுள்ளிகளை பெற்று முதல் மாணவனாக வந்து என் பெற்றோரிற்கு அளவில்லா ஆனந்தத்தை பெற்றுக் கொடுத்தேன்.

இதுவே நான் கண்ட கனவு ஆகும். நல்ல கனவுகள் எப்போதும் நம்மை ஊக்குவித்து சரியான பாதைக்கு வழிகாட்டும்.

You May Also Like :

நான் ஒரு பறவையானால் கட்டுரை

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை