தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

thogai nilai thodar in tamil

சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர் ஆகும். “எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய” என்கின்றார் தொல்காப்பியர்.

தொகைநிலைத் தொடர் என்றால் என்ன

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் அல்லது பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) நிற்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுர்.

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவை

  1. வேற்றுமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. உவமைத்தொகை
  5. உம்மைத்தொகை
  6. அன்மொழித்தொகை

வேற்றுமைத் தொகை

இரு சொற்களுக்கிடையே ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாகும்.

தொகை என்பது உருபு மறைதல் என்பதால் தொகைநிலைத் தொடரில் வேற்றுமைத் தொகை என்பது இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைத் தொகைகளையே குறிக்கும்.

எடுத்துக்காட்டு – மதுரை சென்றார்.

இத்தொடரில் “கு” என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்து மதுரைக்குச் சென்றார் என பொருள் தருகிறது.

இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வந்தால் உருபும் பயனுடன் தொக்க தொகை ஆகும்.

எடுத்துக்காட்டு – பொற்சிலை.

இதில் பொன்னாலாகிய சிலை என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

வினைத்தொகை

வினைத்தொகை என்பது ஒரு வினைச்சொல்லும் ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல்லாகும். இதில் முதல் சொல் வினைச் சொல்லாக இருக்கும். இரண்டாவது வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முதலாவது வரும் வினைச் சொல்லானது மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும்.

எடுத்துக்காட்டு -எரிதழல்

எரிந்த தழல் – இறந்த காலம்
எரிகின்ற தழல் – நிகழ்காலம்
எரியும் தழல் – எதிர்காலம்

பண்புத்தொகை

நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும், அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ‘ஆகிய, ஆன‘ என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டு

இன்மொழி – இனிமையான மொழி

உவமைத் தொகை

உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். உவமைக்கும் உவ மேகத்துக்கும் இடையில் “போல, போன்ற” ஆகிய உவம உருபு மறைந்து வந்தால் அது உவமைத்தொகை ஆகும்.

எடுத்துக்காட்டு

வினை உவமத் தொகை – புலிக் கொற்றன் (புலி போலும் கொற்றன்)
பயன் உவமத்தொகை – மழைக்கை (மழை போலும் கை)
மெய் உவமத் தொகை – துடியிடை – (துடி போலும் இடை)
உரு உவமத் தொகை – பொற் சுணங்கு (பொன் போலும் சுணங்கு)
பன்மொழித்தொடர் – மரகதக் கிளிமொழி (மரகதம் போலும் கிளி)

உம்மைத் தொகை

இரு சொற்களுக்கு இடையில் இறுதியில் “உம்” எனும் இடைச்சொல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை ஆகும். இரு சொற்களுக்கிடையில் “உம்” சேர்ப்பின் பொருள் சரியாக இருத்தல் வேண்டும்.

எடுத்துக்காட்டு – சேர சோழ பாண்டியர்

இதில் சேரரும், சோழரும், பாண்டியரும் என்று பொருள் தரும்.

அன்மொழித்தொகை

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகியவை அல்லாத சொற்கள் மறைந்து வந்தால் அது அன்மொழித்தொகை ஆகும்.

எடுத்துக்காட்டு

பொற்றொடி வந்தாள் – (தொடி – வளையல்)
பொன்னாலான வளையலை அணிந்த பெண் வந்தாள் என்று பொருள் தரும்.

You May Also Like :
நால்வகைச் சொற்கள்
ஆகுபெயர் வகைகள் எடுத்துக்காட்டு