உலகத்தின் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் அவர்களது கற்றலானது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும்.
Table of Contents
தாய்மொழி கற்றலின் அவசியம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தாய்மொழி சிந்தனை
- அறிஞர்களின் பார்வை
- கற்கும் திறன்
- பயன்கள்
- முடிவுரை
முன்னுரை
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று முழங்கு சங்கே முழங்கு” என்ற பாவேந்தரின் புரட்சி வரிகளுக்கேற்ப தமிழ் தமிழர்களோடு இரண்டற கலந்த ஒன்றாகும்.
உலகத்தின் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் அவர்களது கற்றலானது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டிய மிகப்பெரும் வரப்பிரசாதமாகும்.
ஒவ்வொரு மனிதர்களது வாழ்வோடும் பின்னி பிணைந்த தாய்மொழி கற்றலின் அவசியம் பற்றி நாம் இந்த கட்டுரையில் நோக்கலாம்.
தாய்மொழி சிந்தனை
தாய் புகட்டிய மொழியில் எம்முடைய அறிவை வளர்க்கவும் சிந்திக்கவும் செய்தால் எமது உயரிய இலட்சியங்களை எம்மால் விரைவில் அடைந்துவிட முடியும்.
அதாவது அனைத்து துறைசார்ந்த கல்வியையும் நாம் தாய்மொழி வழியே பயின்றால் புதுமை படைப்புக்களை எளிதாக எம்மால் அடைந்து கொள்ள முடியும்.
இவ்வாறு சிந்திப்பதனால் தான் உயர்ந்த படைப்புக்களும் கொள்கைகளும் தோன்றுவதற்கு இவை அடிப்படையாக அமைகின்றன.
அறிஞர்களின் பார்வை
“தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துடித்தெழுந்தே” என்கிறார் பாவேந்தர் அதாவது உலகத்தின் எல்லா வல்லுனர்களும் தெரிவிப்பது என்னவெனில் தாய்மொழியில் கற்பதுவும் தாய்மொழியை பயன்படுத்தி வாழ்வதும் சிறந்த விடயம் என்றே குறிப்பிடுகின்றனர்.
மாணவர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் செயலாற்றவும் தாய்மொழி வழி கற்றல் மிகவும் அவசியமாகும். நம் தாய்மொழியில் உள்ள புரிதலும் சிந்தனையும் பிறமொழியில் பயிலும் போது ஏற்படாது எனவும் அவர்கள் வலியுறுத்திகின்றனர்.
கற்கும் திறன்
பிற மொழிகளில் கல்வி கற்க வேண்டிய நிர்ப்பந்தமானது இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில மொழியின் ஆதிக்கமானது கல்வி துறை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
ஆனால் பிறமொழியில் கற்பது மனப்பாடம் செய்யும் முறையினையே பெருக்கி வருகின்றது. இன்று மாணவர்கள் மதிப்பெண்ணை தேடியே ஒடுகின்றனரே அன்றி தம் அறிவினை விருத்தி செய்து கொள்ளாமைக்கு காரணம் தாய்மொழி கற்றலின் அளவு குறைதலே ஆகும்.
பயன்கள்
“குறிக்கோள் இல்லாது கெட்டேன்” என்ற வார்த்தையின் படி எம்மிடையே பல பிரச்சனைகள் தோன்றுவதற்கான காரணம் குறிக்கோளற்ற கல்வியாகும்.
விதியின் வழியே செல்லாது நம் மதியால் விதியை வெல்ல நாம் கற்று கொள்ள வேண்டும் இவ்வகையான தாய்மொழி கற்றலானது நமக்கு நிறைய ஒழுக்க விழுமியங்களை கற்று தருகின்றது.
இவ்வாறு நல்ல எண்ணம் உயர்ந்த இலக்குள் என்பவற்றையும் பகுத்தறிவு ஆகிய விடயங்களை எமக்கு கற்று தருவது எம் தாய்மொழி கல்வியின் பயன்களே ஆகும்.
முடிவுரை
நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ள எமது அடிப்படையான அறிவை வளர்க்க எமது தனிப்பெரும் பெருமை உடைய தமிழ் மொழியில் கற்பதனை பெருமையாக கருதி கற்று கொள்வதன் மூலமாக
எமது மொழியையும் எமது வாழ்வியலையும் மென்மேலும் வளர்த்து கொள்வோமாக. இந்த வழிமுறை எம்மை மென்மேலும் உயர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.
Read more: கல்வியின் பயன்கள்