தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார் | உ.வே.சாமிநாத ஐயர் |
Table of Contents
உ.வே.சாமிநாத ஐயர்
இளமைப்பருவம்
உ.வே. சாமிநாத ஐயர் 1855 பெப்ரவரி 19 அன்று தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்தில் உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது தந்தை ஓர் இசைக்கலைஞர். உ.வே.சா தனது தொடக்கக் கல்வியையும் இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியரிடம் கற்றார்.
பின்னர் தன்னுடைய 17வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்து கொண்டிருந்த புகழ்பெற்ற மகா வித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழ் அறிஞர் ஆனார்.
இவரது குடும்பம் தீராத வறுமையில் வாடிய போதும் குடும்பம் பிழைப்பதற்கும் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை கடும் முயற்சி எடுத்தார்.
அந்த காலகட்டத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிரந்தரமாக தங்க வசதி இல்லாமல் ஊர் ஊராக இடம்பெயர்ந்து வாய்ப்புக்களைத் தேடி அலைந்த போதும் மனம் தளராமல் கடினமான சூழ்நிலையில் தமிழை விடா முயற்சியுடன் கற்றார்.
கல்விப்பணி
சாமிநாதர் தொடக்கத்தில் கும்பகோணத்தில் இருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியில் இருந்து பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக சேவை ஆற்றினார்.
உ.வே.சா என அழைக்கப்படும் உ.வே. சாமிநாத ஐயர் தோன்றி இருக்காவிட்டால் தமிழ் உலகுக்கு சிலப்பதிகாரத்தைப் பற்றி தெரியாமலேயே போயிருக்கும். அகநானூற்றுக்கும் புறநானூற்றுக்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும்.
இவ்வாறு நூற்றுக்கணக்கான நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றி பதிப்பித்து இந்த உலகிற்கு அளித்தவர் உ.வே.சா ஆவார். மேலும் இவர் தன்னுடைய சொத்துக்களைக் கூட விற்று பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்கான அவரது முயற்சிகள் அளப்பெரியன.
தமிழுக்கு ஆற்றிய பணி
சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேச முடிகின்றது எனில் இதற்கு பிரதானமான காரணம் ஆனவர் உ.வே.சா ஆவார்.
சங்க கால மக்களின் வாழ்க்கை பண்பாடு போன்றவற்றினைப் பற்றி இன்று நமக்கு துல்லியமாக தெரிகிறது எனில் உ.வே.சா காரணமானவர் ஆவார். நம்மால் இந்த இலக்கியங்கள் இல்லாத தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
இவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழுக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் உள்ள தூரம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு ஒப்பானதாகும்.
இவர் ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து அப்படியே பதிப்பித்தல் செய்யாது சிதைந்து மறந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு பொருள் விளங்கும்படி மாற்றி அமைத்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்றனவற்றையும் தொகுத்து வழங்கி இந்த நூல்கள் குறித்த முழு புரிதலுக்கும் வழிவகுத்தார்.
உ.வே. சா பிற்காலத்தில் அடைந்த இமாலயல வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும் குடும்பத்தின் தியாகமும் விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தன. இவர் ஒரு தமிழ் அறிஞர்.
அழிந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தார். தனது அச்சுப் பதிப்பிக்கும் திறமையினால் தமிழின் தொன்மையும், செழுமையும் அறியச் செய்தார்.
90 இற்கும் மேற்பட்ட நூல்களை அச்சுப்பதித்தார். அதுமட்டுமன்றி 3000 இற்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்து இருந்தார்.
இவர் பதிப்பித்த நூல்களுள் சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுகாற்றுப்படை, பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், புராணங்கள், பெருங்கதை, உலா நூல்கள், அந்தாதி நூல்கள், பரணி நூல்கள், மும்மணிக்கோவை நூல்கள், இரட்டை மணிமாலை நூல்கள் போன்றன சிலவாகும்.
இவ்வாறு தமிழை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவரே உ. வே.சா உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா என அழைக்கப்படுகின்றார்.
இவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பெரும் சேவைகள் காரணமாக தமிழ்த்தாத்தா எனவும் அழைக்கப்படுகின்றார்.
Read more: நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்