தமிழர்களுக்கு பல திருநாள்கள் இருந்தாலும் தமிழர் திருநாள் என்பது மிக சிறப்பு மிக்க பண்டிகை ஆகும். இந்த பதிவில் “தமிழர் திருநாள் கட்டுரை” பார்க்கலாம்.
Table of Contents
தமிழர் திருநாள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழர் திருநாள் வரலாற்று நோக்கு
- அர்த்தமுள்ள தமிழர் திருநாள்
- வாழ்வியலும் தமிழர் திருநாளும்
- முடிவுரை
முன்னுரை
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும் தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களுக்கும் தை முதல் நாளான பொங்கல் பண்டிகைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
வியர்வையை நிலத்தில் சிந்தி உலகிற்கே உணவளிக்கும் தெய்வத்தொழிலாற்றும் உழவர்களின் திருநாளை அனைவரும் தமிழர் திருநாளாக கொண்டாடுவது மரபு.
விவசாயத்தின் மகிமையை இத்தினத்தில் நினைவு கூறுவதாக தை பதினான்காம் நாள் இப்பண்டிகை தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தை விவசாயிகள் தமது பயிர்களை வளர்விக்க தனது சக்தியை தரும் சூரியனுக்கு நன்றி கடன் செலுத்தும் முகமாக பொங்கல் இட்டு சூரியனை வழிபடுவார்கள்.
அதாவது தமிழர்கள் நன்றியுணர்வுடையவர்கள் என்ற விழுமியத்தை இப்பண்டிகை உணர்த்துகிறது இப்பண்டிகையின் அர்த்தம் இது தமிழர் வாழ்வியலில் எவ்வளவு முக்கியமானது என்பன தொடர்பாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழர் திருநாள் வரலாற்று நோக்கு
தமிழர் வரலாற்றில் சங்ககாலத்தில் இருந்தே மருதநிலமும் உழவர்களும் உழவு தொழிலின் பெருமைகளும் அதிகம் பேசப்படுகின்றன மாரி மழை முடிந்து வயல்களில் விளைந்த புதுநெல் கொண்டு புது வாழ்வை ஆரம்பிப்பதாக நம்புகிறார்கள்.
உலகின் எல்லா உயிர்களது வாழ்வியலில் விவசாயம் முக்கியத்துவத்தையும் அத்தொழிலின் மேன்மையையும் இந்நாளில் உலகமே நினைவில் கொள்ள வேண்டும் என்பது தார்ப்பரியமாகும்.
இவ்வுலகம் நிலை பெற சூரியன் சக்தி முதலாகும் சூரியனின்றி பயிர்கள் வளராது உயிர்கள் செழிக்காது மழையும் பொழியாது ஒளியும் கிடைக்காது.
இந்நாளில் சூரியனை வணங்கி புது பானையில் புது அரிசியில் பால், சர்க்கரை, பயறு, நெய் மற்றும் தேன் சேர்த்து பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிடுவர்.
அதற்கு அடுத்த நாள் ஏர் இழுக்கும் மாடுகளுக்கும் பால் தரும் மாடுகளுக்கும் பட்டி பொங்கல் இடுவதும் வழக்கமாகும். இச்சம்பிரதாயங்கள் தமிழர் வாழ்வியலின் அழகியலை எடுத்துக்காட்டுகின்றன.
சக உயிர்களையும் மதித்து உணவளித்து பேணும் தமிழர் பண்பாடு போற்றுதலுக்குரியதாகும்.
அர்த்தமுள்ள தமிழர் திருநாள்
தமிழர் திரு நாள் பல அர்த்தமுடையதாகும் “விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்பார்கள்.
இவ்வுலகின் எல்லா உயிர்க்கும் உணவளிக்கும் விவசாயிகளை உழவர் திருநாள் நினைவு கொள்வதாக அமையும். மேலும் தை மாதத்தில் வரும் தைப்பூசம் அன்றே இவ்வுலகம் தோன்றியதாக நம்பப்படுகிறது.
மேலும் வருடம் முழுவதும் நல்ல நீரும் உண்ண உணவும் கிடைக்க வேண்டும் மும்மாரி பொழிய வேண்டும் என நம் மூதாதையர் இயற்கையே இறைவன் என கொண்டு சூரியனை வழிபடவும் இந்த தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
மேலும் நமது சமுதாயத்தில் பல பண்டிகைகள் காணப்பட்டாலும் தமிழர்களுக்கென உள்ள முக்கிய பண்டிகை தைத்திருநாளாகும் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற திருமூலரின் வாக்குக்கிணங்கிய முழு அர்த்தம் தரும் பண்டிகை தமிழர் திருநாளாகும்.
வாழ்வியலும் தமிழர் திருநாளும்
தமிழர்களின் வாழ்வியல் மிக அழகானது இயற்கையை நேசிப்பது, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது, தன்னுயிர் போல மண்ணையும் பாதுகாப்பது என உலகத்திற்கே அறத்தை போதித்து வாழ்ந்து காட்டிய இனமாகும்.
வயலும் வாழ்வும் உழைப்பும் தழைப்பும் என்பது தமிழர்களின் ஆகச்சிறந்த வாழ்வியல் தானும் வாழ்ந்து தன் உழைப்பின் செழிப்பை தன் சுற்றத்திற்கும் கொடுத்து இயற்கையை அளவு கடந்து நேசித்து வாழ்வது தான் ஆக சிறந்த வாழ்க்கை என்பதை புலப்படுத்துவதே தமிழர் திருநாளாகும்.
முடிவுரை
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று முழக்கம் இட்ட பாவேந்தர் பாரதிதாசன் பாடலிற்கு இணங்க தமிழர் பெருமையை உலகுகக் சொல்லும் இப்பண்டிகையின் பெருமையை நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்லி நம் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.
You May Also Like :