சிலப்பதிகாரம் சிறப்புகள்

silapathikaram sirappugal in tamil

சிலப்பதிகாரம் தமிழில் இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகும். சிலப்பதிகாரமானது கி.பி. 2 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். இன்பியலும், துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார்.

இவர் புகழ்பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனின் தம்பி என்று கருதப்படுகின்றது. இக் காப்பியத்தில் இயல், இசை, நாடகம் எனும் மூன்றையும் காணலாம்.

தமிழில் ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொள்ள சிலப்பதிகாரம் கோவலனை அதாவது குடிமகனை பாட்டுடைத் தலைவனாக கொண்டுள்ளமை இக் காப்பியத்திற்குரிய கூடுதல் சிறப்பம்சமாகும். இக் காப்பியம் பற்றிய மேலும் பல சிறப்புக்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

சிலப்பதிகாரம் சிறப்புகள்

தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

தமிழ் மொழியில் ஐந்து பெருங்காப்பியங்களும், ஐந்து சிறு காப்பியங்களும் உள்ளன. இவை தவிர வேறு சில காப்பியங்களும் உள்ளன. ஐம்பெருங் காப்பியங்களுள் முதல் பெருங்காப்பியமாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம் ஆகும்.

காப்பியச் சிறப்பு.

ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முதல் இலக்கிய முயற்சியாக, மற்றும் பெருங்காப்பியமாக அமைந்தது சிலப்பதிகாரம் ஆகும்.

பெயர்க்காரணம்.

சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது. சிலப்பதிகாரம் சிலம்பு+அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது.

காப்பியத் தலைவி.

காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னிகரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன்னிகரில்லாத தலைவியாகப் போற்றப்படுகின்றாள் என்பது காப்பியத்திற்குரிய சிறப்பம்சமாக உள்ளது.

பல பெயர்களைக் கொண்ட காப்பியம் ஆகும்.

  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்டபாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக்காப்பியம்
  • தமிழ்த்தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்டகாப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம் (உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்

போன்ற பல பெயர்களைகளால் சிறப்பிக்கப்படுகின்றது.

சிலப்பதிகாரம் நூல் கூறும் அறக்கருத்துக்கள்.

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர் போன்ற அறக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.

இரட்டை காப்பியம்.

தமிழில் தோன்றிய இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகும். இரட்டை காப்பியத்தில் சிலப்பதிகாரமும் ஒன்றாகும்.

நூல் அமைப்பு.

சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும், 30 காதைகளையும், 5001 வரிகளையும் கொண்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் புகார் காண்டம்(10), மதுரை காண்டம்(13), வஞ்சிக் காண்டம்(7) என்பனவாகும்.

பலர் சிலப்பதிகாரம் பற்றி சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் ”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்” என்றார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றார் பாரதியார். ”சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே சிறந்தது” என்றார் உ.வே சாமிநாத ஐயர்.

தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும்.

தமிழறிஞர்களினால் இதுவரை பல நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. எனினும் அதிக அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் என்ற சிறப்பை சிலப்பதிகாரம் பெறுகின்றது.

You May Also Like :
சங்க இலக்கியத்தின் சிறப்புகள்
தொல்காப்பியம் சிறப்புகள்