சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

Siru Thuli Peru Vellam Katturai In Tamil

இந்த பதிவில் சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை பதிவை காணலாம்.

சிறுவர்களுக்கு சிறுக சிறுக சேமிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்பிக்க வேண்டும்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது பணத்தை சேமிப்பதை மட்டும் குறிக்காது. நற்பழக்கவழக்கங்கள், முயற்சி, மரியாதை போன்ற அனைத்தையும் குறிக்கும்.

  • சிறுதுளி பெருவெள்ளம்
  • Siru Thuli Peru Vellam Katturai In Tamil
சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சேமிப்பின் முக்கியத்துவம்
  3. சிறிய மாற்றங்கள்
  4. சிறு துளி பெரு வெள்ளம்
  5. முடிவுரை

முன்னுரை

ஆதிகாலம் தொட்டு இன்றுவரை மனிதனை நல்வழிப்படுத்த பல்வேறு நூல்களும், உரைநடைகளும் எமது முன்னோர்களால் இயற்றப்பட்டு வந்துள்ளன.

ஆனால் அவற்றை விளங்கிக்கொள்வது ஒரு படிப்பறிவற்ற பாமர மனிதனுக்கு கடினமான ஒன்றாகவே காணப்பட்டது.

ஆகவே அவனது அன்றாட பேச்சுவழக்கில் பயன்படுத்தக்கூடியவாறு இலகுவான பல்வேறு பழமொழிகளினூடாக மனிதன் வழிநடத்தப்பட்டான்.

அன்று தொட்டு இன்றுவரை புழக்கத்திலுள்ள பல பழமொழிகளில் “சிறு துளி பெருவெள்ளம்” என்ற பழமொழி அதிகமாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறுக சிறுக நாம் சேமிக்கின்றவை பிறிதொரு காலத்தில் பெரும் புதையலாக உருவெடுக்கும்.

வெறுமனே சேமிப்பிற்கு மட்டுமின்றி வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் சிறிய விடயங்களாக தென்படுகின்றவை பெரியளவிலான விளைவுகளை ஏற்றப்படுத்தக்கூடும்.

இக்கட்டுரையில் சிறுதுளி பெருவெள்ளம் என்பதனை விரிவாக பார்ப்போம்.

சேமிப்பின் முக்கியத்துவம்

“சிறுதுளி பெரு வெள்ளம்” என்ற பழமொழியானது பெரும்பாலும் சேமிப்பிற்கே உதாரணமாகக் கொள்ளப்படுகின்றது.

ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமின்றி சிற்றறிவுடைய விலங்குகள், பறவைகள் மற்றும் ஏனைய பிராணிகள் கூட சேமிப்பில் ஈடுபடுகின்றன.

சேமிப்பின் உதாரணமாக குறிப்பிடப்படும் எறும்புகள் குளிர்காலத்தில் தமக்கு தேவையான உணவை கோடைகாலம் முழுவதும் சிறுக சிறுக சேமித்து வைக்கின்றன.

சேமிப்பானது மனிதர்களிற்கு ஒரு அத்தியாவசியமான மூலதனமாக அமைகின்றது. எத்தகைய செல்வம் படைத்த செல்வந்தனாயினும் சேமிப்பு இல்லையேல் அவனிடமுள்ள செல்வங்கள் அனைத்தும் அழிவடைந்து விடும்.

வறுமையில் வாடுபவர்கள் தன்னிரக்கம் கொள்ளாது, தமது அன்றாட வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து வாழ்க்கையில் உயரலாம்.

ஆதிகாலத்தில் உண்டியலைப் பயன்படுத்தியே பணத்தை சேமித்து வைத்தார்கள். அவை களவாடப்படுவதற்கான அபாயங்கள் காணப்பட்டன.

ஆனால் தற்காலத்தில் வங்கிகள் பல சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில் பாதுகாப்பாக எமது பணத்தை சேமிக்கலாம். எவ்விதமான முயற்சியை ஆரம்பிப்பதாயினும் சேமிப்பு மிக முக்கியமானதாகும்.

எனவே சேமிப்பின் அவசியத்தை உணர்வதன் மூலமே மனிதன் வெற்றிபடியை எட்ட முடியும்.

சிறிய மாற்றங்கள்

“சிறுதுளி பெரு வெள்ளம்” என்ற பழமொழியானது சேமித்தலை மட்டுமின்றி நமது அனைத்து விதமான செயற்பாடுகளிலும் சிறிய திருத்தங்களை மேற்கொண்டு வெற்றிகரமாக வாழுதலையும், சிறிய பல முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அம்முயற்சிகளை ஒன்றிணைத்து வெற்றி பெறுதலையும் குறித்து நிற்கின்றது.

உதாரணமாக குழந்தைகள் சிறிய தவறுகள் செய்யும் போது அந்தக் குழந்தைகளை திருத்தாது விடின் அவர்கள் வளர்ந்து இந்த சமூகத்தில் பெருங்குற்றவாளிகளாக மாறிவிடுவார்கள்.

பணமானது எவ்வாறு சிறுக சிறுக சேமிக்க பெரும் புதையலாக மாறுகின்றதோ அதேபோல மற்றவர்களிடம் இருந்து அன்பையும் மரியாதையையும் சிறுக சிறுகவே சேமிக்க முடியும்.

சிறுதுளி பெரு வெள்ளம்

பரந்து விரிந்த சமுத்திரத்தின் ஒரு சொட்டு நீரையோ, அல்லது அடைமழைக் காலத்தின் போது வானத்திலிருந்து விழும் ஒற்றைத் துளியையோ சிறுதுளி என்கின்றோம்.

இந்த ஒவ்வொரு துளிகளும் சேர்ந்து எவ்வாறு மிகப்பெரிய சமுத்திரத்தையும், பெரு வெள்ளத்தையும் உருவாக்குகின்றனவோ அவ்வாறே மனிதர்களும் சிறுக சிறுக சேமித்தே உயர்வடையலாம்.

நாம் வறுமையில் வாடும் போது எமது அன்றாட வருமானத்திலிருந்து சிறிய தொகையை ஒதுக்கி வைத்தால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தேவையை பூர்த்தி செய்ய அத்தொகை உதவும்.

சிறுவர்களிற்கு சிறுவயது முதலே சேமிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் சேமிக்கின்ற பணத்திலிருந்தே அவர்களிற்கு தேவையான பொருட்களை வாங்கி அவர்களை ஊக்குப்படுத்த வேண்டும்.

சேமிப்பை மட்டுமின்றி சிறிய சிறிய நற்பழக்கவழக்கங்களையும் கற்பிக்க வேண்டும். சிறுதுளி எவ்வாறு பெரு வெள்ளத்தை ஏற்படுத்துகின்றதோ அதே போன்று சிறிய பழக்கங்கள் ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றுகின்றன.

முடிவுரை

வானத்தில் தெரியும் நட்சத்திரங்களானவை பூமியில் இருந்து பார்க்கின்ற போது சிறு வெளிச்சமாக தெரியும். ஆனால் அந்த நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த பூமிக்கே ஒளியைத் தரக்கூடியன.

அவ்வாறே சிறியனவையாக நாம் ஒதுக்குகின்ற விடயங்கள் எமக்கு பெரிய நன்மைகளை பெற்றுத் தரக்கூடியன.

நாம் சேமிப்பு பழக்கத்தை கொண்டிருக்கும் போது ஆபத்து நேரங்களில் பிறர் உதவியை நாடாமல் “தன் கையே தனக்குதவி” என்பதற்கிணங்க எமது சேமிப்பை நாமே பயன்படுத்தலாம்.

எனவே நாம் “சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழிக்கேற்ப சேமிப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு சேமித்து நலம் பெற்று வாழ்வோமாக.

You May Also Like:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

உழைப்பே உயர்வு தரும் கட்டுரை