சமூகம் என்றால் என்ன

samugam enral enna

அறிமுகம்

மனிதன் தன் இனத்துடன் சேர்ந்து வாழும் இயல்புடையவன். அவன் தன் இனத்தாரோடு கூடிக் கலந்து வாழ்வதில் சமூகம் (Community) உருவாகின்றது. தகவல் தொழில்நுட்ப சமூகம், அறிவுச்சமூகம் போன்ற சமூகங்களும் இன்று விரிவடைந்து வருகின்றன.

சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் சமூக எதிர்ப்பாளர்களாகப் பார்க்கப்படுகிறனர். கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வு சுகமாக இருக்காது.

எனவே சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்து கூடிவாழும் போதுதான் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

சமூகம் என்றால் என்ன

சமூகம் என்றால் என்ன

தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள், ஒரே மாதிரியான நிலப்பகுதியில் வாழ்தல், ஒரே மொழியினைப் பேசுதல் போன்ற ஒற்றுமைகளைக் கொண்ட மக்கள் குழுவினை சமூகம் எனலாம்.

அரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகளின் முழுமையை குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும்.

சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம்.

தமிழ்ச் சமூகமும் சாதியும்

தமிழ்ச் சமூகமானது சாதி மற்றும் பல சமயப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. உணர்விலும் உடலமைப்பிலும் ஒரே மாதிரியாக விளங்கும் மனிதன், பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டுக் காணப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது சாதிப் பிரிவினையே ஆகும்.

தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்க வேண்டும் என சங்க இலக்கியப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

குடி என்னும் தன்னாட்சி சமூக முறையிலிருந்து, சுற்றுவட்ட சமூக முறையின் ஊடாக செங்குத்து படிநிலை சமூக முறைக்கு தமிழ்ச் சமூகம் மாறி வந்தது. சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ்ச் சமூகம் வேந்தனை மையமிட்ட சமூகமாக உருவெடுத்தது.

வேந்தர் ஆட்சி முறை ஏற்பட்ட பின்னர், சமூக முறை சாதியாக மாறத்தொடங்கியது. இன்று சமூகத்தில் குழந்தை திருமணம், விதவை மறுமணத்தடை போன்ற தீய முறைகளுக்கும் காரணமாக சாதி முறைகளின் ஆதிக்கம் உள்ளமை வேதனைக்குரியதாகும்.

சமூக வளர்ச்சி

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைச் சாதனங்களுக்காக இயற்கையுடனும், பிறமனிதர்களுடனும் குறிப்பிட்ட உறவை நிகழ்த்துகிறான். சமூக உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தும் போதுதான் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதல் இடத்தினை வகிக்கும்.

நாட்டில் மனித சமூகம் அனைத்தும் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றாக இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக இயங்க வேண்டும். மனித வாழ்வு என்பது சமுகப் பணிகளோடு இணைந்தவையாக மாற வேண்டும்.

சமூக வேற்றுமை

அரசியல் நம்பிக்கை, மத நம்பிக்கை, உடற்திறன்கள், வயது, சமூக – பொருளாதார நிலை, பாலினம், வாழ்விடம் மற்றும் இனம் போன்ற அனைத்து பரிமாணங்களை உள்ளடக்கியதே சமூக வேற்றுமையாகும்.

“மக்களின் வேலை அல்லது உற்பத்தி வழிமுறை உறவுகளால், சமூக வேற்றுமை நிர்ணயிக்கப்படுகிறது” என்பது கார்ல் மார்க்ஸின் கருத்து ஆகும்.

சண்டையும், சச்சரவும், வேற்றுமைகளும், முரண்பாடுகளும், பிளவும் பிரிவினைகளும் உள்ள இடங்களில் வெற்றி கிடையாது. மரணம் என்னும் முடிவு வருவதற்குள் அதனை சமுக நலனுக்காக செலவு செய்வதே சிறப்பு.

காலம் காலமாக நிலவி வரும் சமூக வேற்றுமைகளைக் களைந்து சமூகக் ஒற்றுமையுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதே சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஆரோக்கியமானதாகும்.

You May Also Like :
சமூக நல்லிணக்கம் கட்டுரை
கலாச்சாரம் என்றால் என்ன