காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்

இயற்கை நமக்களித்த அற்புத இயற்கைப் படைப்புகளில் ஒன்றே காடுகளாகும். மனிதன் உள்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகக் காடுகள் விளங்குகின்றன.

உலகில் 160 கோடி பேர் அன்றாட வாழ்க்கைக்கு காடுகளையே நம்பியுள்ளனர். அதுபோல் பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.

இத்தகைய காடுகளானவை மனிதனின் சுயநலத்திற்காகவும், இயற்கை அனர்த்தங்களினாலும் அழிவுகளுக்கு உட்படுகின்றன.

காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும் என்பதனை மறந்து காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

#1. புவியின் பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கும்.

புவியின் தட்பவெப்ப நிலைகள் மாறுகின்றன. வளிமண்டலத்தில் பசுமையில்லா வாயுக்கள் அதிகரித்தல் போன்ற தீங்குகள் ஏற்படுகின்றது.

#2. மனிதனின் வாழ்க்கைத் தரம் பாதிப்படைகின்றது.

காடுகள் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. கிராம மக்கள், நகரம் நோக்கி வேலை தேடி வருகின்றனர்.

இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகின்றது. இது நாட்டின் பொருளாதாரம், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றிற்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக உள்ளது.

#3. உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றது.

மரங்கள் காற்றில் கலந்த கார்பன் டை ஆக்சைடு வாயுவை கிரகித்துக்கொண்டு சுவாசிப்பதன் மூலமாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.

நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமாக காடுகளை அழிப்பதால் தொழிற்சாலைகளும் மனிதனும் விலங்குகளும் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகில் மரங்கள் இல்லாமல் போய் விடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

#4. அரிய வகை மூலிகைகளும் விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.

காடுகள் தன்னகத்தே பல அரியவகை மூலிகைச் செடிகளைக் கொண்டு உள்ளன. காடழிப்பினால் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன.

#5. மண்ணரிப்பு ஏற்படுகின்றது.

காட்டு மரங்களின் வேர்கள் மண் பகுதியைப் பற்றிப் பிடிப்பதால் மண்ணரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. ஆனால் காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுவதோடு விவசாயமும் பெரிதும் பாதிப்பு அடையும்.

#6. பாலைவனங்கள் உருவாதல்.

மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.

#7. மழைப்பொழிவு பாதிப்பு.

உயர்ந்த காடுகள் காற்றுகளை தடுத்து மழை வீழ்ச்சியை கொடுக்கின்றன. உலகில் பெருமளவில் காடுகள் காணப்படும் பகுதிகளான கொங்கோ, அமேசன் போன்ற பகுதிகளில் 2000 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. எனவே காடுகள் அழிக்கப்படுவதால் மழைப்பொழிவு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

#8. வறட்சி.

பொதுவாக தாவரங்கள் குறித்த ஒரு பகுதியில் மழை வீழ்ச்சிக்கு வித்திடுவதுடன் ஈரப்பதனையும் பாதுகாக்கின்றது. ஆனால் காடுகள் அழிக்கப்படுவதால் நேரடியாக ஆவியாக்கம் இடம் பெறுவதுடன், குறிப்பிட்ட பிரதேசத்தில் வறட்சியையும் ஏற்படுத்துகின்றது.

#9. விலங்குகள் பறவைகள் பாதிப்படைகின்றன.

காடுகளை வாழ்விடமாகக் கொண்டே அதிகளவிலான விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. காடுகளை அழிப்பதன் மூலம் அவைகளின் இருப்பிடங்களும் அழிக்கப்படுகின்றன. காட்டு விலங்குகள் உணவின்றியும், உறைவிடமின்றியும் வேறு பிரதேசங்கள் நோக்கி இடம் பெறுகின்றன.

#10. புதிய வகை நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.

காடழிப்பால் வாழ்விடத்தை இழந்த விலங்குகள் உணவின்மையால் மனிதர்கள் வாழும் பகுதிக்கு படையெடுப்பதாலும், விலங்குகளுக்கு மட்டுமே பரவக் கூடிய நோய்க்கிருமிகள் விலங்குகளிடத்திலிருந்து மனிதருக்கும் பரவத் தொடங்குகிறது.

You May Also Like:
வில்வம் மருத்துவ பயன்கள்
பூண்டு மருத்துவ பயன்கள்