கற்றது கையளவு கல்லாதது உலகளவு கட்டுரை

katrathu kaiman alavu kallathathu ulagalavu

இந்த பதிவில் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு கட்டுரை” பதிவை காணலாம்.

கல்வி கடல் போன்றது. நமக்குத் தெரியாத, நாம் அறிந்திராத பல விஷயங்கள் உள்ளன.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கல்வியில் தலைக்கனம் கூடாது.
  3. கல்வி கற்பதன் அவசியம்
  4. ஒழுக்கம் தரும் கல்வி
  5. அறிவில் புத்தகங்களின் பங்களிப்பு
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் நன்றாக படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று பலரும் ஆசை கொள்கின்றனர். அதற்காகத்தான் பட்டப் படிப்பினை நிறைவு செய்கின்றனர். சிலர் ஒரு பட்டத்துடன் மட்டும் நின்று விடாமல் பல பட்டங்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு எத்தனை பட்டங்கள் பெற்றாலும் அனைத்தையும் கற்று விட்டோம் என்று எவராலும் கூற முடியாது. ஏனெனில் ஒரு துறையில் புலமை வாய்ந்தவருக்கு இன்னொரு துறையில் புலமை இருக்க வாய்ப்பு குறைவு.

இதனால்தான் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என அவ்வையார் கூறியுள்ளார். இதனை இக்கட்டுரையில் நோக்கலாம்.

கல்வியில் தலைக்கனம் கூடாது

நாம் பல விஷயங்களை கற்று அறிந்து இருக்கலாம். அதற்காக நமக்கு எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் கொள்ளக்கூடாது. கல்வி கடல் போன்றது. நமக்குத் தெரியாத, நாம் அறிந்திராத பல விஷயங்கள் உள்ளன.

மணலை அள்ளினால் நமது கைப்பிடியில் எவ்வளவு மணல் இருக்குமோ அந்த அளவுக்குத்தான் நாம் கற்றுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பட்டறிவு சில நேரங்களில் கல்வியால் பெற்ற அறிவைவிட கை கொடுத்து உதவுவதாக இருக்கும்.

கல்வி கற்பதன் அவசியம்

கல்வி என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கல்விதான் மனிதனை மனிதனாக்கும், மனிதநேய உள்ளவனாக்கும், கல்வி சமுதாயம் வாழ்வதற்கான ஓர் அடிப்படை ஆகும்.

மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்துப் பிரித்துக் காட்டும் பல அம்சங்களில் இந்த கல்வியும் முக்கியமான ஒன்று. மனிதன் சிந்திக்கவும் செயல்படவும், கண்டுபிடிக்கவும் ஆற்றல் தரப்பெற்ற அற்புதமானப் படைப்பு.

கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதோடு நேரத்தின் மதிப்பை உணர்த்துகின்றது. எனவே ஒருவரது வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே போல் கற்ற கல்வியில் தன்னடக்கமும் முக்கியம் பெறுகின்றது.

ஒழுக்கம் தரும் கல்வி

நல்ல ஒழுக்கங்களை கற்றுத் தரும் கல்வி அறிவே இன்று மிக முக்கியத் தேவை ஆகும். மனிதப் பண்புகள், கனிவான பேச்சு, முதியோருக்கு மதிப்பளிக்கும் குணம், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கல்வி கற்றுத் தருகின்றது.

எனினும் பொதுவாக அதிகமானவர்கள் புள்ளிகளுக்காகவும் சான்றிதழ்களுக்காவும், பெயருக்குப் பின்னால் எழுத்துக்களை எழுதுவதற்காகவும் படிக்கின்றார்களே தவிர கல்வியின் மூலம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள மறந்து விடுகின்றார்கள்.

அறிவில் புத்தகங்களின் பங்களிப்பு

மனிதனை அறிவுலகத்துக்கு இழுத்துச் செல்வது புத்தகங்களே. அவை மனிதனைப் புனிதனாக்கிப் பண்படுத்துகின்றன.

புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. உலகின் பெரிய மாமேதைகள் அனைவருமே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே.

முடிவுரை

இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் பலரும் அடிப்படை மனித குணங்கள் இல்லாதவர்களாக படித்தவர்கள் என்று இலக்கணத்துடன் இருக்கின்றனர்.

அவர்களின் பொறுமை, நல்ல எண்ணங்கள், நம்பிக்கை போன்றவற்றை கல்வி அழித்துவிட்டதோ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

நாம் கற்ற கல்வியானது சிறிதளவே தான் என்பதை மனதில் கொண்டு நாம் இன்னும் கற்க வேண்டியது பல உள்ளது என்பதனையும் நினைவிற்கொண்டு தன்னடக்கத்துடன் வாழவேண்டும். அடக்கம் அளவற்ற பெருமையை தரும்.

You May Also Like :
இளமையில் கல்வி கட்டுரை
கல்வியின் சிறப்பு கட்டுரை