இந்த பதிவில் “ஒரு பேனாவின் சுயசரிதை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரை பதிவை காணலாம்.
எனக்குள் சில வேளைகளில் நான் ஒரு பேனாவாக இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்ற எண்ணம் எழும் இந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த கட்டுரைகள்.
Table of Contents
ஒரு பேனாவின் சுயசரிதை கட்டுரை – 1
இன்று குப்பைத் தொட்டிக்குள் அநாதரவாக கிடக்கும் நான், ஒருகாலத்தில் பத்திரமாக பேழைக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட ஒரு பேனாவாவேன். என்னால் இயன்றளவு பயனை அள்ளிவழங்கி சீரும் சிறப்புமாக இருந்த நான் இன்று கேட்பாரின்றி குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டுள்ளேன்.
நான் பிறிதொரு நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டு, இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தேன். இவ்வூரின் பிரசித்தி பெற்ற கடையொன்றின் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாய் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நான் அந்த ஊரின் செல்வந்தர் ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்டேன்.
வண்ணங்கள் நிறைந்த காகித உறையால் என்னை அலங்கரித்து, அவரின் செல்லமகளின் ஒன்பதாவது பிறந்தநாள் அன்பளிப்பாக அவளிற்கு அளித்தார். பொன்நிற மற்றும் நீலவண்ணங்களால் உருவமைக்கப்பட்டிருந்த என்னை அவளிற்கு மிகவும் பிடித்துப்போனது.
அத்துடன் அவளது அன்புத்தந்தையால் அளிக்கப்பட்ட பரிசு ஆகையால், என்னை மிகவும் கவனமாக பாதுகாத்தாள். அவளது வீட்டு அலுமாரியில் பத்திரப்படுத்தப்பட்ட இருந்த நான் அவளது பரீட்சைக் காலங்களில் மட்டுமே வெளி உலகை பார்ப்பேன்.
அவளது முக்கியமான பரீட்சைகளை மட்டும் என்னைக்கொண்டு எழுதும் அவள், அதில் சிறந்த பெறுபேறு பெறும் போது என்னை புகழ்ந்து மகிழ்வாள். இவ்வாறு அழகாக நகர்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கை ஒருநாள் திசைமாறியது.
அவள் வேகமாக பரீட்சை எழுதிக் கொண்டிருந்த போது என்னுள் ஏற்பட்ட கோளாறு காரணமாக சரிவர எழுதமுடியாமல் போனது. கோபத்துடன் என்னை ஓரமாக வைத்து விட்டு வேறு பேனாவால் எழுதத் தொடங்கினாள்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக என்னை குப்பை கூடைக்குள் வீசி எறிந்தாள். அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்களின் சுயநலத்தை நொந்தவாறு குப்பைக் கூடைக்குள் வருந்திக் கொண்டிருக்கின்றேன்.
ஒரு பேனாவின் சுயசரிதை கட்டுரை – 2
மக்களின் எழுத்தறிவை வளர்ப்பதில் மிகப் பெரிய பங்காற்றும் நான் அனைத்து அறிவாளிகளிற்கும் மிகவும் பிடித்த பேனாவாவேன்.
நான் இந்நாட்டைச் சேர்ந்த அனைவராலும் போற்றப்படும் மிகப்பெரிய கல்விமான் ஒருவரின் கைப்பொருளாக அவரின் சட்டைப் பையினுள் அமர்ந்து கொண்டு, அவரது அளப்பரிய சேவைகளில் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டிருந்தேன்.
மக்களிற்கும், கல்வி பயிலும் மாணவர்களிற்கும் நன்மை பயக்ககூடிய பல திட்டங்களை என்னைக் கொண்டே கையெழுத்திட்டு ஆரம்பிப்பார். அப்போதெல்லாம் மக்கட்சேவையில் நானும் ஒரு அங்கமாக இருப்பதனை எண்ணி பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்வேன்.
ஒருநாள் பாடசாலை ஒன்றிற்கு சென்ற போது, ஒரு மாணவனது நற்செயலைப் பாராட்டி என்னை அவனிற்கு அன்பளிப்பாக வழங்கினார். அதில் சற்று நான் கவலையுற்ற போதும், அவரின் மீது மிகுந்த மரியாதையும், பெருமதிப்பும் கொண்ட அவ் மாணவன் என்னை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்தான்.
காண்போரிடம் எல்லாம் என்னைக் காண்பித்து, அந்த நிகழ்வைக்கூறி பெருமைபட்டுக் கொள்வான். அப்போதெல்லாம் இந்த மாணவர்கள் கல்வியின் மீதும், கல்வி புகட்டுவோர் மீதும் எத்துணை மரியாதையாய் உள்ளார்கள் என எண்ணி வியப்பேன்.
அவ்வாறு அழகாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையும் ஒருநாள் முடிவுக்கு வந்தது. நான் என்னுடைய பயன்தரு காலம் முடிந்த போது, உபயோகமற்றபொருளாய் என்னை வீசியெறியப் போகின்றார்கள் என எண்ணி மிகுந்த வருத்தத்திற்கு ஆளானேன்.
ஆனால் என் எதிர்பார்ப்புக்கள் பொய்யாகின. எவ்வித பயன்களும் இல்லாது போயினும், அவ்மாணவன் என்னை தூக்கி வீசவில்லை. மாறாக அவனது அலுமாரியில் மிகமுக்கியான பொருட்களுடன் என்னையும் பத்திரப்படுத்தி வைத்தான்.
அன்றிலிருந்து யாரிற்கும் உபயோகமற்றவனாய் இருப்பதனை எண்ணி வருத்தமுற்ற போதும், என்னால் முடிந்த உதவியை அனைவருக்கும் செய்திருக்கின்றேன் என்ற மனநிறைவில் இந்த அலுமாரிக்குள் வாழ்ந்து வருகின்றேன்.
You May Also Like: