ஒருமைப்பாடு என்றால் என்ன

orumaipadu in tamil

அறிமுகம்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வரிகளின் மூலம் பண்டைத் தமிழர்கள் உலக மக்கள் யாவரையும் உறவாய் எண்ணும் உயரிய நாகரீகப் பண்பாட்டைக் கொண்டவர்கள் என்பதை அறிய முடிகின்றது.

மொழி, உணவு, உடை, கலாச்சாரம், கலை, விளையாட்டு, இசை என எல்லாவற்றிலும் தனித்து அழகும் உன்னதமும் கொண்டு விளங்குகின்ற நாடாக ஒரு நாடு இருந்தாலும் மக்களின் ஒற்றுமை என்பது மிகவும் அவசியமாகும்.

இன்றைய மக்களிடையே ஒருமைப்பாடு என்பது அரிதாகவே காணப்படுகின்றது. எனினும் ஒன்றுபட்டு வாழப் பல்வேறு வழிகளை ஆராய்ந்து செயற்படுத்துவதன் மூலம் ஒருமைப்பாடு தானாகவே வளரும் என்பதில் ஐயமில்லை.

பல மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், நாகரீகங்கள், பல மாநிலங்கள் எனக் காணப்பட்டாலும் கூட இந்தியா ஒருமைப்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஒருமைப்பாடு என்றால் என்ன

ஒருமைப்பாட்டிற்கு பல அர்த்தங்கள் கூறலாம். மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளுதல் ஒருமைப்பாடு எனலாம்.

ஒரு தலைவனின் தலையாய பண்பு அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒருமைப்பாடு ஆகும். அதாவது ஒன்றிணைக்கும் செயற்பாட்டினையும் ஒருமைப்பாடு எனலாம்.

மேலும் அரசியல் துறையின் விளக்கப்படி ஒருமைப்பாடு என்ற பதமானது வெவ்வேறு தேச அரசுகளின் எல்லைகளுக்கு அப்பால் சென்று அரசியல் ஐக்கியத்திற்கான தேவையினை வலியுறுத்தி நிற்கின்றது.

ஒருமைப்பாடு என்பது ஒற்றுமையாக செயல்படுவதனையும் குறிக்கும்.

தேசிய ஒருமைப்பாடு என்றால் என்ன

சமுதாயத்தின், சிறிய பெரியகுழுக்கள் இடையே உள்ள உணர்வுகளைத்தாண்டி, தன்னை மையமாகக் கொண்ட குறுகிய செயல்களை மறந்து, தேச ஒற்றுமையையும், கூட்டுறவு மனப்பான்மையையும் கொண்டு பணிகளை மேற்கொண்டு தேசத்தை வளர்ச்சியுறச் செய்வதையே தேசிய ஒருமைப்பாடு குறிக்கும்

மன ஒருமைப்பாடு

எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் மனவலிமை அவசியம். இல்லையென்றால் ஒரே சிந்தனையை தொடர்ந்து சிந்திக்க இயலாமல் ஒரே நேரத்தில் பல சிந்தனைகளும் வந்து மனக்குழப்பத்தை விளைவிக்கும்.

மன உறுதி, ஒருமைப்பாடு இல்லாமையே பல செயல்களை சிறப்பாக செய்ய இயலாமைக்கும், தீர்க்கமாக ஒரு முடிவை எடுக்க இயலாமல் இருப்பதற்கும் காரணம் ஆகும்.

பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்தக் காரியத்தை நன்றாகச் செய்யமுடியும். மனதை ஒருமுகப்படுத்த கற்றவன் ‘மகான்’ ஆவான்.

தேசிய ஒருமைப்பாடு

தேசிய ஒருமைப்பாடு என்பது ஒன்றுபட்டதொரு இனக்குழுவாக்கம் எனலாம். அனைவரும் ஒன்றே என்ற உணர்வு, ஒரே நாடு என்ற எண்ணம் தேச வளர்ச்சிக்கு முக்கியம்.

நமது மக்களாட்சி முறையைச் செம்மையாக நிறைவேற்றுவதற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தேசிய ஒருமைப்பாடு மிகவும் அவசியமாகும்.

பாரத தேசம் பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் முதலியவற்றைக் கொண்டு விளக்குவதாகும். தேசிய ஒருமைப்பாட்டைக் கல்வியால் தான் வருங்காலத் தலைமுறையினரிடம் வளர்க்க முடியும்.

தனது கவிதைகள் மூலம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திய மகாகவி பாரதி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குகின்றார் என்றால் அதுமிகையல்ல. ஜாதி, மதம் என்ற பாகுபாடு இல்லாமல் இங்கு வசிக்கும் அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானது. அதேபோல் இதைக்காக்கும் கடமையும் அனைவருக்கும் உண்டு என்பது பாரதியின் உறுதியான நம்பிக்கையாகும்.

உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உருவாக தேவையான ஒன்று தேசிய ஒருமைப்பாடாகும்.

எனவே இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் சுயநலப் போக்கை மறந்து செயற்பட்டால் மட்டுமே ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். இந்தியர்களாகிய அனைவரும் ஒருமைப்பாட்டை உருவாக்கி பாரத தேசத்தின் புகழை மென்மேலும் உலகறியச் செய்வோம்.

You May Also Like :
ஒற்றுமையே பலம் கட்டுரை
வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை