அறம் செய்ய விரும்பு கட்டுரை

Aram Seiya Virumbu Katturai In Tamil

ஆத்திசூடியில் ஒளவையாரால் அழகாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிச்சென்ற “அறம் செய்ய விரும்பு கட்டுரை” தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

  • அறம் செய்ய விரும்பு கட்டுரை
  • Aram Seiya Virumbu Katturai In Tamil

அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒழுங்கான தர்ம வழியில் பயணித்தல் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

அறம் செய்ய விரும்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறம் என்பதன் பொருள்
  3. அறத்தின் சிறப்பு
  4. ஒளவையாரின் கருத்து
  5. வள்ளுவரின் கருத்து
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய சமுதாயத்தில் மனிதப் பிறவி வாழ்வாங்கு வாழ அறவழிப் பாதை இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. ஒரு தனி மனித வாழ்க்கைக்கு அறநெறி அல்லது ஒழுக்க நெறி என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

ஒழுக்க நெறியின் மாற்று வடிவமே அறநெறியாகும். நாம் விண்ணுலகத்தில் சொர்க்கப் பயனை அனுபவிக்க மண்ணுலகில் அறநெறியின் கீழ் செயற்பட வேண்டும் என்பது எம் முன்னோர்களின் வாக்கு

இதன் காரணமாகவே “அறம் செய்ய விரும்பு” என்று ஒளவையார் தனது ஆத்தி சூடியில் குறிப்பிட்டுள்ளார்.

அறம் என்பதன் பொருள்

அறம் என்ற சொல்லிற்கு கடமை, நோன்பு, தர்மம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை போன்றன பொருள் கொள்ளப்படுகின்றன.

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே, முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர்.

பிறவி தோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என பொருள் கொள்ளப்படுகின்றது.

தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்ட பொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது அறம் ஆகும்.

அறத்தின் சிறப்பு

மக்களாய்ப் பிறந்த நாமெல்லாம் இம்மையிலும், மறுமையிலும் மேன்மை பெற்று வாழ வேண்டுமானால் அறத்தையே செய்ய வேண்டும்.

நாம் முற்பிறவியிலே செய்த அறத்தின் பயனாகவே மனித சரீரம் நமக்கு கிடைத்திருக்கின்றது. இப்பிறவியிலேயும் அறத்தைச் செய்வோமானால் மறுபிறப்பில் பேரின்பத்தைப் பெற முடியும்.

அறத்தைச் செய்வதற்கு கால வரையறையில்லை. இளமையில் செய்யக்கூடாது, முதுமையில் செய்ய வேண்டும் என்ற நியதி இல்லை.

எப்பொழுதும் எந்நேரத்திலும் அறம் செய்யலாம். இந்த நிலையில்லாத உடம்பு இருக்கும் பொழுதே நிலையான அறத்தைச் செய்து நாற் பொருட்களான அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை அடைந்து கொள்ள வேண்டும்.

ஒளவையாரின் கருத்து

ஒழுக்கநீதி தவறியவன் மறுபிறவியில் வாழத் தகுதியற்றவன் என்கின்றார் ஒளவையார். மனிதப் பிறவி பெற்ற அனைவரும் அறத்தின் பாழ் கட்டுண்டு முதுமையில் பிறவிப் பயனை அடைய வேண்டும் என்கின்றார்.

இதனையே தனது நூலான ஆத்திசூடியில் முதல் வரியில் “அறம் செய்ய விரும்பு” என குறிப்பிடுகின்றார்.

எத்தனையோ பணம் படைத்தவர்கள் தாமும் அனுபவிக்காது பணத்தினை வீணாக்குகிறார்கள்.

மக்களாய்ப் பிறந்த நாமெல்லாம் இம்மையிலும், மறுமையிலும் மேன்மை பெற்று வாழ வேண்டுமானால் அறத்தையே செய்ய வேண்டும் என ஒளவை மூதாட்டி குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவரின் கருத்து

இவ் நிலையில்லாத உடம்பு இருக்கும்போதே நிலையான அறத்தைச் செய்து துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளுவர்.

இதனையே இவர் தனது குறட்பாவில் “அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை” என குறிப்பிட்டுள்ளார்.

அறம் செய்வோரிடத்து நான்கு குற்றங்கள் இருக்கக் கூடாது என்று கூறுகின்றார் வள்ளுவர். அதாவது பொறாமை, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்ற நான்கையும் களைந்தவனே அறஞ் செய்யும் ஆற்றல் உடையவனாகும் என்று குறிப்பிடுகின்றார்.

இக்குற்றங்களை உடையோர் செய்யும் அறம் அறமாகமாட்டாது இதுவே தெய்வப் புலவரின் அறம் பற்றிய தெளிவுரையாகும்.

இதனை பின்வரும் குறட்பாவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். “அழுக்கா றவா வெகுளி யின்னாச்சொன் னாங்கு மிழுகாத வியன்ற தறம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அறன் வலியுறுத்தல் எனும் அதிகாரத்தின் மூலமும் அறம் பற்றி தெளிவாக குறிப்பிடுகின்றார்.

முடிவுரை

ஆரம்ப காலங்களில் வாழ்ந்த தமிழ் அரசர்கள் பல அறங்களையெல்லாஞ் செய்து வந்தார்கள். அன்றும் பாரத நாட்டிலே ஆலயங்கள் தோறும் ஆதீனங்கள் பல அறப்பணிகளையெல்லாம் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஆனால் இன்று இவ் அறம் அருகி வரும் நிலையிலேயே காணப்படுகின்றது. பொதுவாக நோக்கும் பொழுது பிறவிப்பயனை தருவதும், அழியாப் பேரின்பத்தைத் தருவதும் அறமேயாகும். இத்தகைய மேலான அறத்தை செய்து பிறவிப் பயனை அடைந்து முக்தி பெற வேண்டும்.

இதன் காரணமாக நம் மனித வாழ்க்கையில் அறப்பணியை மேறக்கொண்டு முடிவில் வீடு பேற்றை அடைந்து பிறவிப்பயனில் சொர்கக்த்தை நாட நாம் எத்தனிக்க வேண்டும்.

அறஞ்செய்யாது பிறவியாகிய கடலை நீந்தி கரை சேர முடியாது என்பது முன்னோர் வாக்காகும்.

You May Also Like :

பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை