அன்மொழித்தொகை என்றால் என்ன

anmozhithogai enral enna

அன்மொழித்தொகை என்றால் என்ன

ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

தொடர்களைத் தொகை நிலைத்தொடர், தொகா நிலைத்தொடர் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

இதில் தொகைநிலை என்பது பண்புத்தொகை, வேற்றுமை தொகை, அன்மொழித்தொகை, வினைத்தொகை, உம்மைத் தொகை, உவமை தொகை என ஆறு வகைப்படும்.

  • சொற்றொடர்
    1. தொகை நிலைத்தொடர்
      1. பண்புத்தொகை
      2. வேற்றுமை தொகை
      3. அன்மொழித்தொகை
      4. வினைத்தொகை
      5. உம்மைத் தொகை
      6. உவமை தொகை
    2. தொகா நிலைத்தொடர்

அன்மொழித்தொகை என்றால் என்ன

அன்மொழி என்பது அல்+மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள். மொழி என்றால் சொல் என்று பொருள்.

தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்படுகின்றது.

அன்மொழித்தொகை வகை

  1. வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
  2. வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
  3. பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
  4. உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
  5. உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம் வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.

உதாரணம்: பூங்குழல் வந்தாள்.

பூங்குழல் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

உதாரணம்: பொற்றொடி வந்தாள்.

பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர், ‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

உதாரணம்: கவியிலக்கணம்

கவியிலக்கணம் என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது, நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

உதாரணம்: பொற்றாலி

பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

உதாரணம்: கிள்ளிகுடி.

கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

உதாரணம்: கீழ் வயிற்றுக் கழலை

கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர், ‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது, ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை

உதாரணம்: தாழ்குழல் பேசினாள்.

தாழ்குழல் என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.

பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

உதாரணம்: கருங்குழல்

கருங்குழல் என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது, பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

உதாரணம்: தேன்மொழி

தேன்மொழி என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்

உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

உதாரணம்: உயிர்மெய்

உயிர்மெய் என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

Read more: அசை என்றால் என்ன

பதம் என்றால் என்ன