Table of Contents
அறிமுகம்
உலகில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து வன்முறை மூலம் வெற்றி அல்லது தோல்வி அடைவது என்பது பண்டைய மன்னர் காலத்து போர்கள் முதல் தற்போது நடந்துவரும் இனப்போராட்டங்கள் வரை நாம் நன்கு அறிய முடிகின்றது.
ஆனால் இவ்வகைப் போராட்டங்களில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தவன் மீண்டும் ஒரு கட்டத்தில் எழுச்சியடைந்து வெற்றி பெற்றவனை அழிக்க நினைப்பான் அல்லது அழித்துவிடுவான்.
எனவே வன்முறை மூலம் கிடைத்த வெற்றி நீடிக்காது. நீடித்தாலும் நின்மதியைக் கொடுக்காது.
போராட்டம் என்பது வெற்றி பெறுவது மட்டுமல்ல எதிரியின் மனதைத் திருத்துவதும் கூட. இதற்கு சிறந்த ஆயுதம் அகிம்சை மட்டுமேயாகும்.
அகிம்சை என்றால் என்ன
அகிம்சை என்பது பல பரிணாமக் கருத்துக்களைக் கொண்டுள்ளது. அகிம்சை என்பது துன்பம் கொடுப்பவர்களையும் மன்னிப்பதாகும்.
மேலும் பிறரின் காயத்தைத் தடுக்க தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். அகிம்சை என்பது சத்தியம், அச்சமின்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ என்பது இதற்கு எதிர்மாறான பொருள் கொண்டது. அதாவது காயம் ஏற்படுத்தாதீா்கள். “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள். அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும்.
அகிம்சை பொருள்
- வருத்தாமை
- ஊறு இழைக்காமை
- கொல்லாமை
- அறவழி
- துன்பம் செய்யாமை
- அன்பு செய்தல்
காந்தியும் அகிம்சையும்
உலகில் மனிதன் தோன்றிய நாள் முதல் இன்றுவரை சில குறிப்பிட்ட சிறுபான்மை இனங்கள் மீது தொடர் தாக்குதல்கள், வன்முறைகள் முதலியவை நடந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் இந்தத் தாக்குதல்களைக் கண்டு பயந்து ஒதுங்காமலும், அதே நேரத்தில் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு வன்முறையில் இறங்காமலும் அகிம்சை என்ற ஒரே ஆயதத்தைக் கொண்டு அடக்குமுறையை வெற்றி கொண்ட ஒரே உத்தமர் மகாத்மா காந்தியடிகள் அவர்களே!
காந்தியடிகளுக்கு முன்பும், பின்பும் அகிம்சை எனும் ஆயுதத்தை இன்றுவரை யாரும் வெகு சரியாகக் கையாண்டு வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.
தென்னாபிரிக்காவில் இந்தியர்கள் மீதும் கறுப்பர்கள் மீதும் அடக்கமுறை இனவெறி தாக்குதல் நடந்தபோது முதன்முறையாக அகிம்சைப் போராட்டத்தை அறிமுகப்படுத்தினார் காந்தி. இந்தப் போராட்டம் வெள்ளையர்களை ஆச்சரியப்படுத்தியது.
மகாத்மா காந்தி தன்னுடைய அகிம்சா ஆயதத்தை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்குப் பின் நடந்த மதக்கலவரத்தினை அடக்கவும் பயன்படுத்தி இருக்கின்றார்.
உலக அகிம்சை தினம்
2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி இந்தியாவின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் திகதியை உலக அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன. இதற்கமைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 2ம் திகதியை உறுப்பு நாடுகள் அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இன்றைய சூழலிலும் காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கைகளுக்கு உலகில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நம்மிடம் அன்பு செலுத்துபவர்களிடம் பதிலுக்கு நாமும் அன்பு செலுத்துவது என்பது சாதாரணமானது.
ஆனால் நம்மை வெறுப்பவர்களிடத்தும் அன்பு செலுத்துவது என்பதே அகிம்சையாகும். அகிம்சை இல்லாது சத்தியத்தை அடைய முடியாது.
அகிம்சா வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துவிட்டால் சத்தியத்தினை அடைந்துவிட முடியும். இதுவே இன்றைய போட்டி, முரண்பாடுகள் மற்றும் போர் நிறைந்த உலகில் தேவையான ஒன்றாகும்.
You May Also Like : |
---|
காந்தியின் அகிம்சை கட்டுரை |
காந்தியின் கொள்கைகள் கட்டுரை |