சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி

Senai Kilangu Varuval In Tamil

இந்த பதிவில் மிகவும் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சேனைக்கிழங்கு ஆரோக்கிய நன்மை நிறைந்தது. இது ஒரு குளிர்ச்சியான கிழங்கு உணவு. சேனைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் பெண்களின் ஈஸ்டிரோஜன் அளவு அதிகரிக்கும். இது ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

சேனைக்கிழங்கிலுள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்களானது உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதுடன் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகின்றது.

இத்தகைய நன்மை அளிக்கும் சேனைக்கிழங்கை உண்பது நல்லது அல்லவா? அப்போ வாங்க ஆரோக்கியம் தரும் சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு1 கப்
உப்புதேவையான அளவு
மஞ்சள்தூள்தேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
சின்ன வெங்காயம்10
தேங்காய் 2 சில்
பூண்டு1 கைபிடி
சோம்பு1 டீஸ்பூன்
வரமிளகாய்8
நெய்தேவையான அளவு
கறிவேப்பிலைதேவையான அளவு

சேனைக்கிழங்கு வறுவல் செய்யும் முறை

முதலில் சேனைக்கிழங்கின் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

சேனைக்கிழங்கை ஒரு கடாயில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அதில் உப்பு⸴ மஞ்சள் சேர்த்து 70% வேகவைத்தால் போதுமானது. (5-10 நிமிடம் வைத்தால் போதுமானது)

பின்னர் வேக வைத்து நீரை வடித்து எடுத்து சேனைக்கிழங்கை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.

பின்பு ஒரு கடாயை எடுத்து அதில் சேனைக்கிழங்கைப் பொரித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும் எண்ணெய் நன்றாகச் சூடாகியதும் வடித்து வைத்த சேனைக்கிழங்கை பொன்னிறத்தில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மசாலா அரைக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 2 சில் தேங்காய்⸴ 10 சின்ன வெங்காயம்⸴ ஒரு கைப்பிடி அளவு பூண்டு⸴ ஒரு டீஸ்பூன் சோம்பு கூடவே 8 வரமிளகாயுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனோடு ஒரு டீஸ்பூன் நெய்யும் சேர்க்க வேண்டும். நெய் சேர்ப்பதால் இந்த ரெசிபி முழுமையாக நெய்யில் செய்தது போல் இருக்கும்.

எண்ணெய் நன்கு சூடானதும் சோம்பு⸴ கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கறிவேப்பிலை பொரிந்ததும் ஏற்கனவே பொரித்து வைத்த சேனைக்கிழங்குகளை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஏற்கெனவே அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து விடவேண்டும். காரம் தேவை எனில் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் தண்ணீர்த் தன்மை போய் வறுவல் பதம் வரும் வரை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீர் முழுமையாக வற்றி வருவல் தன்மை வந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறவும்.

அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் சூப்பராக தயாராகிவிட்டது!!!

You May Also Like:

திருவாதிரை களி செய்வது எப்படி

புதினா துவையல் செய்வது எப்படி