ஒரு மனிதனை மேம்படுத்தும் “கல்வி வளர்ச்சி கட்டுரை” பற்றி இந்த பதிவில் காணலாம்.
கல்வியின் சிறப்பும் முக்கியத்துவமும் நாம் அறிந்ததே. கல்வி என்னும் செல்வம் நம் வாழ்வை கற்பக விருட்சம் போல் வளர செய்யும்.
கல்வியை போற்றுவோம்.. கல்வியால் உயர்வோம்.
- கல்வி வளர்ச்சி கட்டுரை
- Kalvi Valarchi Katturai In Tamil
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை இங்கே பாருங்கள்.
Table of Contents
கல்வி வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப கால கல்வி
- கல்வியின் மறுமலர்ச்சி
- இன்றைய கல்விநிலை
- முடிவுரை
முன்னுரை
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது ஆன்றோர் வாக்கு வாழ்க்கையில் எவ்வாறான வறுமை நிலை வந்தால் கூட கல்வி கற்பதை நிறுத்தி விட கூடாது.
கல்வியே எங்களுடைய வாழ்க்கையை மாற்ற வல்லது எமது அறியாமை இருளை பகுத்தறிவை விதைப்பது கல்வியாகும். இதனாலேயே எமக்கு கல்வியை போதிப்பவர்களை “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுவார்கள்.
ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மனிதன் காடுகளில் வாழ்ந்தான் உணவு தேடுவதிலும் உண்பதிலும் உறங்குவதிலும் தனது பொழுதை கழித்தான் இதனால் ஆரம்பகாலங்கில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
ஆனால் பிற்பட்ட காலங்களில் நாகரீக வளர்ச்சி மொழிகளின் உருவாக்கம் தொடர்பாடல் என்று வளர்ச்சி அடைந்தன. கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் கேட்டல் கல்வி, ஏட்டு கல்வி, புத்தக கல்வி இன்று கணினி முறை கல்வி வரை வளர்ச்சி கண்டிருக்கிறது.
இவை தொடர்பான ஆரம்பகால கல்வி வளர்ச்சி மற்றும் கல்வியின் மறுமலர்ச்சி இன்றைய கல்விநிலை போன்ற விடயங்களை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
ஆரம்பகால கால வளர்ச்சி
ஆரம்ப காலங்களில் மனிதன் காடுகளில் வாழ்ந்தாலும் கல்வி கற்பதற்காக நல்ல குருவை தேடி அவர்களுடைய குருகுலம் நோக்கி சென்று அவருக்கு சேவை செய்து கல்வி, கேள்வி, போர்க்கலை வித்தைகள், இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்றனவற்றை கற்று கொள்வார்கள்.
தமிழர்கள் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலங்களில் ஒப்பற்ற இலக்கியங்கள் காப்பியங்களை படைக்கும் அளவிற்கு சிறந்த கல்வியறிவுடையவர்களாக காணப்பட்டனர்.
இதற்கு அக்காலத்தில் எழுந்த புகழ்பெற்ற இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களே சாட்சியமாகும். இப்பாடல்கள் அக்கால மக்களின் கல்வி முறை, வாழ்வியல் அம் மக்கள் கற்றோரை கௌரவிக்கும் முறை போன்றவற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
அக்காலத்தில் வாழ்ந்த பெண் புலவரான ஒளவையார் “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று பாடுகிறார். அக்காலத்தில் அறிவார்ந்த மக்கள் புலவர்கள் வாயிலாக கல்வி வளர்ச்சி கண்டது.
இவர்கள் நல்ல இலக்கிய படைப்புகளை படைக்க அக்காலத்து மன்னர்கள் உறுதுணையாக இருந்தனர் என்பது வரலாறு. உதாரணமாக அதியமான் ஒளவையாரை நட்பு கொண்டமையும் கபிலர் பேகன் மீது பேரன்பு கொண்டமையும் வரலாற்று செய்திகளாகும்.
சங்ககாலத்தில் முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்தார்கள். இதற்கு அடுத்த காலமான சங்கமருவிய காலத்தில் அறம் சார்ந்து பள்ளிகள் உருவாக்கப்பட்டு அறம் போதிக்கப்பட்டு இக்காலத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் உருவாகின.
இக்காலத்தில் உருவானதே உலகபொதுமறையான “திருக்குறள்” ஆகும். இக்காலத்தில் தமிழில் ஜம்பெரும் காப்பியங்களும் தோன்றின. இக்காலங்களில் வெறுமனே தமிழ் கல்வி மட்டுமல்ல விஞ்ஞானம், கணிதம், இயற்பியல், வானசாஸ்த்திரம், சோதிடம் போன்ற பல துறை சார் கல்வி வளர்ச்சி நிலவியது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.
இதன் பிற்காலங்களான பல்லவர் காலத்தில் பக்தி சார்ந்து பெரியளவிலான ஆலயங்கள் உருவாக்கப்பட்டு அதனை அண்டி கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இக்கால கட்டத்தில் பக்தி சார்ந்த இலக்கியங்களான தேவாரங்கள், ஆழ்வார் பாடல்கள் என பல பக்தி இலக்கியங்கள் இக்கால கல்வி வளர்ச்சியை எடுத்து காட்டுகின்றன.
இதற்கடுத்த காலமான சோழர் காலம் இலக்கியங்கள், கல்வி வளர்ச்சி போன்றவற்றின் பொற்காலம் என்பார்கள். இக்காலத்தில் கல்வி நிலையங்கள், நூலகங்கள் போன்றன உருவாகி விண்ணை தொடும் கோயில்கள் பிரமிக்க வைக்கும் இலக்கிய பெருமைகள் தமிழனின் கல்வி வளர்ச்சியை உலகுக்கு எடுத்து காட்டும்.
இக்காலத்தில் தான் கம்பன் எனும் கவிஞன் தோன்றி கம்பராமாயணம் இயற்றினார். இக்காலத்தில் கட்டப்பட்ட தஞ்ஞை பெரிய கோயில் இன்றைக்கும் உலகம் வியந்து பார்க்கும் பொறியியல் அதிசயமாகும். அன்றைக்கே தமிழர்கள் சிறந்த அறிவியல் உடையவர்களாக இருந்துள்ளனர்.
இதற்கு பிற்பட்ட காலங்களில் கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து சென்று கொண்டே சென்றன. காலம் காலமாக தோன்றும் சிறந்த மாமேதைகளும் அவர்களது பணிகளும் இலக்கியங்களும் கல்வி வளர்ச்சியின் ஆதாரங்களாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகாககவி பாரதியார் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை பெண்களும் கல்வியில் உயர வேண்டும் என்று அவர்தான் வித்திட்டார்.
கல்வி மறுமலர்ச்சி
மேற்கூறியவாறு கல்வி வளர்ந்தாலும் யார் கல்வி கற்கிறார்களோ அவர்களே வலிமையானவர்களாகவும் இங்குள்ள எல்லா நலன்களையும் அனுபவித்து கற்காத பாமர மக்களை அடக்கும் முறை நம் பிரதேசங்களில் காணப்பட்டது.
பிரித்தானியர்களின் ஆட்சியில் பாடசாலை கல்வி முறை கொண்டுவரபட்டது. இதன் பின் அடக்கப்பட்ட சமூகத்தின் விடுதலை கல்வியில் தங்கியிருந்தது பாடசாலை கல்வி, இலவச கல்வி இவற்றின் காரணமாக கல்வி கற்க எல்லா மக்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர்.
இதுவே கல்வி மறுமலர்ச்சியையும் சமூக மாற்றத்தையும் எம்முள் விதைத்தது. இன்றைக்கு பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வருகின்ற மாணவர்களே கல்வியில் உச்சம் தொடுகின்றனர்.
இன்றைக்கு பாடசாலையில் ஆரம்பித்து தொழில் கல்வியென கல்வி பரினாம வளர்ச்சி கண்டுள்ளது கல்வியே ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அடையாளத்தை வழங்குகிறது.
கல்வி வளர்ச்சியின் இன்றைய நிலை
இன்றைக்கு கல்வியினை வீடுகளில் இருந்து கொண்டே கற்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இணையவழி கல்வி என பல வழிகளிலும் தேடி இலகுவாக கற்க கூடிய வழிமுறைகள் கல்வியில் வளர்ந்து விட்டன.
பாடசாலைகளை விடவும் தனியார்ட கல்வி நிலையங்கள் இன்றைக்கு மாணவர்களை ஈர்க்கின்றன. இன்றைய பெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்காகவே அதிக பணம் செலவழிக்கின்றனர்.
மாறாக தனியாரும் கல்வியை சேவையாக இன்றி வியாபாரம் ஆக மாற்றியுள்ளார்கள். முன்பெல்லாம் ஆசிரியர் பணி மாணவர்களை நெறிப்படுத்தல் எனும் உயரிய நோக்கத்துக்காக என்று இருந்தது. இன்று ஆசிரிய தொழில் அதிக இலாபம் ஈட்டமுடியும் என்று ஒரு சிலர் மாற்றியுள்ளனர்.
இன்றைக்கு உயர் கல்வி அதன் பின்னரான தொழில் கல்வி மேல்படிப்பு வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு செல்லல் என கல்வியே வாழ்க்கை எனும் அளவிற்கு இன்றை கல்வி வாழ்வோடு நீக்கமற கலந்துள்ளது.
முடிவுரை
“கண்ணுடையோர் என்போர் கற்றோர்
கல்லாதோர் என்போர் முகத்திரண்டு புண்ணுடையோர்” என்கிறார் வள்ளுவர்.
அந்தவகையில் கல்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை எனும் அளவிற்கு கல்வி மிக முக்கியமானதாகும்.
இன்றைக்கு கல்வி புதிய பரினாமம் கண்டிருந்தாலும் கல்வியின் பெருமையை உணர்ந்து கற்றதனால் ஆய பயனான மற்றோரையும் மதித்து கற்றவையும் சுற்றத்தையும் நல்வழிப்படுத்தி வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக.
You May Also Like: