வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை

veetu thottam katturai in tamil

இந்த பதிவில் “வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

தொடர்மாடி குடியிருப்புகளில் கூட சாடிகளில் வீட்டுதோட்டம் செய்வார்கள். அந்த அளவிற்கு வீட்டுத்தோட்டம் பயனுள்ள பொழுதுபோக்காகும். விவசாயம் ஆத்ம திருப்தி தரவல்லது.

வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வீட்டுத்தோட்டம் என்பது
  3. இதன் அவசியம்
  4. மிகச்சிறந்த பொழுதுபோக்கு
  5. சிறந்த பொருளாதார நன்மைகள்
  6. உடல் ஆரோக்கியத்தில் பங்கு
  7. முடிவுரை

முன்னுரை

அன்றாடம் நாம் அதிகளவான நேரத்தை வீணாக தவறான வழிகளில் செலவழிக்கின்றோம். இவற்றை மிகச்சரியாகவும் பயனுள்ள வழியிலும் சிறந்த பொருளாதார நன்மைகளை கிடைக்கும் வகையிலும் பயன்படுத்த வீட்டுதோட்டம் செய்தல் எனும் வழி மிகச்சிறந்ததாகும்.

இது மிகவும் பயனுள்ள பொழுதுபோக்கு மன அழுத்தத்தை குறைப்பதாயும் புத்துணர்வை ஏற்படுத்துவதாயும் இது அறியப்படுகிறது. எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்கின்ற சுயதேவை பொருளாதார முறை தருகின்ற மகிழ்ச்சியை வேறு எதனாலும் தந்துவிடமடியாது.

இக்கட்டுரையில் வீட்டுதோட்டம் தருகின்ற நன்மைகள் பற்றி நோக்கப்படுகின்றது.

வீட்டுதோட்டம் என்பது

பொதுவாக நாம் வாழும் வீடுகளில் அருகில் அல்லது பின்புறமாகவோ சிறிய அளவு நிலத்தில் எமக்கு தேவையான காய்கறிகள், கீரைவகைகள், தானியங்கள், பழவகைகள் இவற்றை எமது சொந்த முயற்சியில் இயற்கையான முறையில் பயிரிட்டு கொள்ளுதல் வீட்டு தோட்டம் ஆகும்.

இது எமது நீண்டகால கலாச்சாரத்தோடு இணைந்த ஒன்றாகும் எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றி கொள்ள முடிவதுடன் பணமும் நேரமும் அதிகளவில் மிச்சம் ஆகுவதுடன் பல நன்மைகளும் எமக்கு கிடைக்கிறது.

இதன் அவசியம்

இன்றைய காலகட்டங்களில் கொரோனா போன்ற நோய் தொற்றுக்களால் அனைவரும் வீடுகளிலே முடங்கி இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இது போன்ற பேரிடர் காலங்களில் எமது உணவு தேவைகளை பூர்த்தி செய்தல் மிகவும் சவாலானதாக இருக்கிறது.

இவ்வாறான சவாலான பொருளாதார நெருக்கடிகள், பஞ்சம் பட்டினி என்பன ஏற்படும் காலங்களில் இவற்றை சமாளிக்க வீட்டு தோட்டம் உதவியாக இருக்கும். வீட்டு தோட்டம் எளிமையாகவும் சுலபமாகவும் எமது தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

மிகச்சிறந்த பொழுதுபோக்கு

எமது நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும் வீட்டுதோட்டம் என்ற விடயம் மிகச்சிறந்த பொழுதுபோக்காக காணப்படுகிறது. ஏனைய பொழுதுபோக்குகளை விட இது பயனுள்ளது.

தொடர்மாடி குடியிருப்புகளில் கூட சாடிகளில் வீட்டுதோட்டம் செய்வார்கள். அந்த அளவிற்கு வீட்டுத்தோட்டம் பயனுள்ள பொழுதுபோக்காகும். விவசாயம் ஆத்ம திருப்தி தரவல்லது.

இது எமக்கு மாலை வேளைகளில் இளைப்பாறுதலையம் புத்துணர்வையும் சிறியளவில் பொருளாதார இலாபங்களையும் தருவதனால் அதிகளவான மக்கள் வீட்டுதோட்டத்தை தமது பொழுதுபோக்காக செய்து வருகின்றனர்.

சிறந்த பொருளாதார நன்மைகள்

நாம் சந்தைகளுக்கும் கடைகளுக்கும் அலைந்து அதிக விலை கொடுத்து தரமில்லாத காய்கறிகளை வாங்குகின்றோம். வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம்.

வருடத்தின் எல்லா நேரங்களிலும் ஒரு பச்சை வீட்டு இல்லத்தை அமைத்து நல்ல பயிர்களை நாட்டி எமது தேவைக்கு ஏற்ப காய்கறிகளை பெற்று கொள்ளலாம் அதிகம் இலாபமும் ஈட்டலாம்.

வீட்டுதோட்டத்தின் மூலமாக பலவிதமான அலங்கார மலர்ச்செய்கை பழங்கள் கிழங்குகள் என பல பெறுமதியான உற்பத்திகளை எம்மால் குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் பங்கு

இன்றைய காலகட்டத்தில் சந்தைப்படுத்தலை மையமாக கொண்டு அதிக லாபம் சம்பாதிப்பதற்காக மரக்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றன அசேதன இரசாயன பசளைகள் அதிகம் பயன்படுத்தி விளைவிக்கப்படுவதுடன் நஞ்சு அதிகமான கிருமிநாசினிகள் விசிறப்பட்டு பொலிவாக விற்கப்படுகின்றன.

அவற்றை வாங்கி உண்பதனால் எமக்கு அதிக நோய்கள் ஏற்படுகின்றன. நாம் வீட்டுதோட்டம் மூலமாக இயற்கையான முறையில் சேதன உரங்களை பயன்படுத்தி பயிரிட்டு உற்பத்தி செய்யும் உணவுகள் அதிக ஆரோக்கியத்தை எமக்கு தரும்.

முடிவுரை

இங்கே வீட்டுத் தோட்டங்கள் மூலமாக அதிகளவான நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் வெளிப்படையான உண்மை இருப்பினும் இன்றைய உலகம் அதனை அதிகம் கண்டுகொள்வதில்லை.

நஞ்சு நிறைந்த உணவு வகைகளை தான் அதிகம் உள்ளெடுத்து கொண்டிருக்கின்றோம். இவற்றால் நாளாந்தம் பாதிப்புக்கள் உயர்வாகவே செல்கின்றன.

கையிலே வெண்ணை இருக்க நெய் தேடி அலைவது போல வீட்டுதோட்டங்களை மறந்து துரித உணவுகளில் தமது நாட்டத்தை இன்றைய உலகம் காட்டுகிறது.

இவற்றை தவிர்த்து வீட்டுத்தோட்டம் செய்து நல்ல பலன்களை பெறுவோம்.

You May Also Like :

சுத்தம் பேணி சுகமாய் வாழ்வோம் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்

நோய் வருமுன் காப்போம் கட்டுரை