சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் தங்கள் விடுதலையை தேடுகின்றனர். விடுதலை மனித வாழ்வில் சுதந்திரமாக உரிமைகளை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிவகுக்கின்றது.
Table of Contents
விடுதலை என்றால் என்ன
“விடுதலை” எனும் வார்த்தையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள் கொள்கிறார்கள்.
கட்டுப்பாடுகளைக் கடந்து செல்லும்போது நாம் அதனை விடுதலை என்கிறோம். அரசியல் அடிபணிதல், சிறைத்தண்டனை அல்லது அடிமைத்தனத்திற்கு எதிரான நிலை விடுதலை எனலாம்.
மேலும் விடுதலை என்பது கட்டுப்பாடுகள் எதுவுமற்ற ஒரு நிலை விடுதலை எனலாம்.
பாரதியும் பெண் விடுதலையும்
இன்றைய நவீன தொழிநுட்ப உலகில் ஆணாதிக்கத்தின் சில கூறுகள் மங்கியிருப்பினும் வேறு சில புதிய கூறுகள் முளைத்துள்ளதையும் காண்கிறோம்.
பெண்களின் விடுதலை பற்றி காலம் காலமாகப் பலர் பேசியிருந்தாலும் பாரதியின் பெண் விடுதலை சமூகத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்றது என்றால் அதுமிகையல்ல.
பாரதி என்றால் விடுதலை என்பதுதான் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் விட்டுச் சென்றிருக்கும் முத்திரை, அடையாளம். பாரதி சமூக விடுதலையின் ஆதாரமான அடிப்படைத் தேவையாகப் பெண் விடுதலையை முன்வைத்தவர்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பைப் பெண்ணின் கல்யாணக் குணங்களாகச் சித்தரித்த காலத்தில், “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்” என்றார். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் பெண்ணின் குணங்கள் என்றார்.
“பெண் விடுதலை” என்னும் கட்டுரையில் பெண்களுக்கு விடுதலையின் முக்கியமான ஆரம்பப் படிகள் என்று பாரதி ஒன்பது கட்டளைகளை முன்வைக்கிறார். அவையாவன,
1. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு விருப்பம் இல்லாத நபரை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் கணவனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்துகொள்வதைத் தடுக்கக் கூடாது.
5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
6. பெண்கள் கணவனைத் தவிர வேறு ஆண் நபருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வி கற்க வழியேற்படுத்த வேண்டும்.
8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
9. தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.
இதில் சுவாரசியம் என்னவெனில் அன்று பாரதி பெண் விடுதலை பற்றி கூறிய இந்த அம்சங்களில் சில சட்டமாக்கப்பட்டு இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முழுமையாக சமூகத்தில் புலப்படுத்தக்க மாற்றங்களை செயல்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
பெண் என்பவள் ஆண் என்பவனை விட எதிலுமே குறைந்தவள் அல்ல. இதை ஒவ்வொரு பெண்ணும் திடமாக நம்ப வேண்டும்.
ஒரு பெண் ஆண் சார்ந்து வாழ்வதும், ஒரு ஆண் பெண் சார்ந்து வாழ்வதும் இயல்பானதும், இயற்கையானதும் ஆகும்.
பெண்கள் ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்குமான பலம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். எல்லோருக்கும் உணர்த்தப்படவும் வேண்டும்.
Read more: சுதந்திரம் என்றால் என்ன