மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து இறைவனிடம் பிள்ளை வரம் கேட்டனர்.
இன்று நிலைமை மாறிவிட்டது. வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
Table of Contents
வாடகை தாய் என்றால் என்ன
கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்றழைக்கப்படுவார்.
குழந்தை இல்லாத தம்பதியினர் மற்றொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற்று எடுப்பது வாடகைத்தாய் முறை எனப்படுகின்றது.
அதாவது, கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். கருவுற முடியாத பெண்கள் மட்டுமே இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போது இந்தியாவில் அனுமதியுண்டு.
இருவகை வாடகைத் தாய் முறைகள்
வாடகைத்தாய் முறையானது இரண்டு வகையாகக் காணப்படுகின்றது.
- கற்பகால வாடகைத்தாய்
- மரபியல் வாடகைத்தாய்
கற்பகால வாடகைத்தாய் முறையில் கருமுட்டை தாயிடம் இருந்தும், தந்தையிடமிருந்தும் பெறப்படும். பெறப்பட்ட விந்தணு மற்றும் கருமுட்டை கருவூட்டப்பட்ட பின் வாடகைத் தாயின் கருப்பைக்குள் வைக்கப்படும்.
இதில் மரபியல் ரீதியாக மற்றும் சட்ட ரீதியான தாய் என இரண்டும் தம்பதியிலுள்ள தாயே ஆகும்.
வாடகைத் தாயின் கரு முட்டை கரு உருவாக்கத்தில் உதவியிருந்தால் அவரே குழந்தையின் மரபியல் வாடகைத்தாய் ஆவார். தம்பதியின் தாய் சட்டரீதியான தாய் என அழைக்கப்படுவர்.
அதாவது, கற்பகால வாடகைத்தாய் முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும், சினைமுட்டையும் தம்பதியினருடையது.
மரபியல் வாடகைத்தாய் முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது ஆகும்.
வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2019
திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். குழந்தை தேவைப்படும் தம்பதியில் பெண்ணுக்கு 25 முதல் 50 வயதுக்குள்ளும், ஆணுக்கு 25 முதல் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
உயிரியல் ரீதியாகவோ, தத்தெடுக்கப்பட்ட குழந்தையோ அல்லது வாடகை தாய் மூலமாக குழந்தையோ இருக்கக் கூடாது. குழந்தை பெற இயலாததற்கு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தை பெற்றுத் தரும் வாடகை தாய் குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருப்பவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஒரு முறை மட்டுமே அவர் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும். வாடகைத்தாயானவர் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
தன்பாலின ஈர்ப்பு, மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்து அனைத்திலும் வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளுக்கு முழு உரிமையும் உண்டு.
Read more: அக்குள் கருமை நீங்க